'தி ஃபேமிலி மேன் 2' தொடரால் சமந்தாவுக்கு ஒரேநேரத்தில் எதிர்ப்பும் ஆதரவும்!
அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் வெள்ளிக்கிழமை வெளியாக இருக்கும் 'தி ஃபேமிலி மேன் 2' தொடரை முன்னிட்டு நடிகை சமந்தாவுக்கு ஆதரவும், எதிர்ப்புமாக ட்விட்டரில் பலரும் பதிவுசெய்யப்படுகின்றனர். அவையாவும் வேகமாக ட்ரெண்டாகி வருகிறது.
2019-ல் வெளியாகி வரவேற்பைப் பெற்ற 'தி ஃபேமிலி மேன்' தொடரின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகியிருக்கிறது. முதல் பாகத்தில் நடித்த மனோஜ் பாஜ்பாய், ப்ரியாமணி ஆகியோரோடு இரண்டாம் பாகத்தில் சமந்தாவும் பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அமேசான் பிரைம் வீடியோ தளத்தில் நாளை (ஜூன் 4) 'தி ஃஃபேமிலி மேன் 2' வெளியாகவுள்ள நிலையில், அதன் ட்ரைலர் சமீபத்தில் வெளியானது.
சென்னையில் நடத்த திட்டமிடப்பட்டிருக்கும் தீவிரவாத தாக்குதலை நாயகன் ஸ்ரீகாந்த் திவாரி முறியடிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ட்ரைலரில், 'ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கும் அங்குள்ள கலக குழுக்களுக்கும் தொடர்பு இருக்கிறது' என தமிழ் போராளிக் குழுக்களை தொடர்புபடுத்திய வசனம் இடம்பெற்றுள்ளது. அதோடு இலங்கை வரைபடமும், போராளிகள் பயிற்சி பெறும் காட்சியும் ட்ரைலரில் இடம்பெற்றிருக்கின்றன. இதனால், தமிழ் ஈழப் போராளிகளை தீவிரவாதிகளாக சித்தரித்திருப்பதாக சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தன.
இதையடுத்து 'தி ஃபேமிலி மேன் 2' இணையத் தொடரை தடை செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை பல தரப்புகளில் இருந்தும் முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்றும் இன்றும் ட்விட்டரில் ஒரு தரப்பினர் இந்த சீரிஸில் நடித்ததற்காக நடிகை சமந்தாவை குறிவைத்து #ShameonYouSamantha என்று ட்ரெண்ட் செய்தனர்.
"சமந்தாவும் தமிழ்தான். எனினும், தமிழ் அமைப்பை அவமதிக்கும் விதமாக இந்தத் தொடரில் நடித்துள்ளார்" என்று தமிழ் நெட்டிசன்கள் தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்தது. தற்போது தெலுங்கு நெட்டிசன்கள் பலர் சமந்தாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், #WeSupportSamantha என்ற ஹேஷ்டேகுடன் அவரின் புகைப்படத்தை பதிவிட்டு ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
முன்னதாக, 'தி ஃஃபேமிலி மேன் 2' ட்ரைலரில் இடம்பெற்றுள்ள ஒன்றிரண்டு காட்சிகளை வைத்து தமிழர்களை கொச்சைப்படுத்தியதாக முடிவு செய்யக்கூடாது என்றும், எழுத்தாளர்கள் குழுவில் பெரும்பாலானோர் தமிழர்கள்தான் எனவும் குறிப்பிட்டு தொடரின் இயக்குநர்கள் ராஜ் மற்றும் டிகே அறிக்கை விடுத்துள்ளனர்.
தாங்கள் தமிழர்களின் உணர்வுகளுக்கும் கலாசாரத்துக்கும் மதிப்பளிப்பதாகவும், தொடர் வெளியாகும் வரை காத்திருந்தால் எதிர்த்தவர்கள் அனைவரும் பாராட்டுவீர்கள் எனவும் படக்குழு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.