'தமிழர்கள் துயரை உள்வாங்கினேன்... தி ஃபேமிலி மேன் தொடரில் நடித்தது ஏன்?' - சமந்தா விளக்கம்
தமிழர்கள் குறித்து தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள 'தி ஃபேமிலி மேன்' வெப் சீரிஸில் நடித்தது ஏன் என்பது தொடர்பாக விரிவான விளக்கம் ஒன்றை கொடுத்துள்ளார் நடிகை சமந்தா.
2019-ல் வெளியாகி வரவேற்பைப் பெற்ற 'தி ஃபேமிலி மேன்' தொடரின் இரண்டாம் பாகம் வெளியாகி உள்ளது. அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகி இருக்கிறது. முன்னதாக, இதன் ட்ரைலர் சமீபத்தில் வெளியானது. முதல் பாகத்தில் நடித்த மனோஜ் பாஜ்பாய், ப்ரியாமணி ஆகியோரோடு இரண்டாம் பாகத்தில் சமந்தாவும் பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
சென்னையில் நடத்த திட்டமிடப்பட்டிருக்கும் தீவிரவாத தாக்குதல், இதில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கும் கலகக் குழுக்களுக்கும் தொடர்பு இருக்கிறது என தமிழ் போராளிக் குழுக்களை தொடர்புபடுத்திய வசனம், அதோடு இலங்கை வரைபடமும், போராளிகள் பயிற்சி பெறும் காட்சியும் ட்ரைலரில் இடம்பெற்றிருக்க, தமிழ் ஈழ போராளிகளை தீவிரவாதிகளாக சித்தரித்திருப்பதாக சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தன.
இதையடுத்து 'தி ஃபேமிலி மேன் 2' இணையத் தொடரை தடை செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை பல தரப்புகளில் இருந்தும் முன்வைக்கப்பட்டது. மேலும் ஒரு தரப்பினர் இந்தத் தொடரில் நடித்ததற்காக நடிகை சமந்தாவை குறிவைத்து #ShameonYouSamantha என்று ட்ரெண்ட் செய்தனர். இதனால் சமந்தாவும் எதிர்ப்பை சம்பாதித்தார். இந்த தொடரில் ராஜி என்ற கதாபாத்திரத்தில் சமந்தா நடித்திருந்தார். இந்த தொடர் தற்போது ரிலீஸாகி விமர்சன ரீதியிலும் கவனம் ஈர்த்துள்ளது.
இதற்கிடையே, இந்த தொடரில் நடிக்க சம்மதித்தது தொடர்பாக நடிகை சமந்தா அளித்த பேட்டி ஒன்றில், "ராஜி கதாபாத்திரத்தை செய்ய ஒப்புக் கொண்டதற்கு அந்த கதாபாத்திரத்தின் தன்மையே காரணம். இந்த கேரக்டர் வழியாக எனது நடிப்பு திறமையை வெளிப்படுத்த நிறைய வாய்ப்புகள் உள்ளன என்பதை அறிந்த பிறகுதான் அதைச் செய்ய ஒப்புக்கொண்டேன். இது மட்டுமல்ல, இயக்குநர்கள் இந்தக் கதையை என்னிடம் சொல்லவந்தபோது இலங்கைத் தமிழர்கள் பற்றிய ஆவணப்படங்கள் எனக்குத் திரையிட்டு காண்பிக்கப்பட்டன. அப்போது, போர் நாட்களில் அப்பகுதி பெண்களின் வேதனையை நான் புரிந்துகொண்டேன்.
அதை பார்த்தபோது எனது கண்கள் கலங்கிப்போயின. அப்போதே இந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என முடிவெடுத்துவிட்டேன். அதேநேரம், அவர்கள் காண்பித்த ஆவணப் படங்களுக்கு சில ஆயிரம் பார்வைகளே இருந்ததை கவனித்தபோதுதான், ஆயிரக்கணக்கான ஈழத் தமிழர்கள் தங்களின் உயிரை இழந்தபோது உலகம் அவர்களின் திரும்பவில்லை என்ற உண்மை எனக்கு உறைத்தது.
ராஜியின் கதை கற்பனை கொண்டு வடிவமைக்கப்பட்டது. ஆனால், ஒரு நியாயமற்ற முறையில் நடந்த போரினால் உயிரிழந்தவர்களுக்கும், அந்த வேதனையில், அந்த நினைவுகளோடு வாழும் ஒவ்வொருவருக்கும் இந்த பாத்திரத்தின் மூலம் அஞ்சலி செலுத்தும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும்.
ராஜி வேடம், மிக கவனமாக கையாளப்பட வேண்டியது என்பதை அறிவேன். எனவேதான் கேரக்டர் நன்றாக வர வேண்டும் என்று நிறைய ஹோம் ஒர்க் செய்தேன். அது எனது கேரக்டரின் தன்மையை புரிந்துகொண்டு நடிக்க உதவியது. இயக்குநர்கள் அந்த நாட்களில் தமிழர்களின் துன்பங்களையும், துயரங்களையும் ராஜி கதாபாத்திரத்தின் மூலம் சித்திரித்திருந்தார்கள். இதனால் நடிப்பில் சமநிலையுடன், நுணுக்கத்துடன், உணர்வுபூர்வமாக இருக்க வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருந்தேன். எனது நடிப்பு மூலம் ராஜி கதாபாத்திரத்தை உணர்ச்சி கூறுகளால் நிரப்ப நினைத்தேன். அந்தக் காலத்தின் சண்டை, வெறுப்பு, கொடுங்கோன்மை மற்றும் பேராசை ஆகியவற்றைப் பிரதிபலிக்க நினைத்தேன்.
ஒருவேளை இந்த பாத்திரத்தை ஏற்றுக்கொள்ளாமல், அதைச் செய்யத் தவறினால், அந்த நாட்களில் அந்தப் பகுதி மக்கள் அனுபவித்த வேதனைக்கு நீதி செய்ய நான் தவறியவராவேன். இதில் நடித்ததன் மூலம் யார் மனதையும் புண்படுத்துவது என் நோக்கம் அல்ல. இலங்கை போரில் மாண்ட தமிழர்களுக்கு வீர வணக்கம் செலுத்த வேண்டும். அதை `தி ஃபேமிலி மேன்' தொடர் நிறைவு செய்யும். இப்போது தொடர் தொடர்பான அனைத்து விமர்சனங்களையும், பின்னூட்டங்களையும் படிக்கும்போது என் இதயத்தில் மகிழ்ச்சி நிறைகிறது. ராஜி என்றுமே எனக்கு விசேஷமான கதாபாத்திரம்" என்று பேசியிருக்கிறார் சமந்தா.
> தொடர்புடைய கட்டுரை: பொதுபுத்தியும் நேர்மையும்: 'தி ஃபேமிலி மேன் சீசன் 2' வெப் சீரிஸ் ப்ளஸ், மைனஸ் - ஓர் அலசல் https://bit.ly/2ShhIUN