காங்கிரஸூக்கு ஆதரவாக இந்தூரில் பிரச்சாரம் ? - சல்மான் கான் விளக்கம்
பாலிவுட் நடிகர் சல்மான் கான் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக மத்தியப் பிரதேசத்தில் பிரச்சாரம் செய்யவுள்ளார் என்று பரவிய தகவலுக்கு அவரே முன்வந்து முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
உலகின் பிரம்மாண்ட ஜனநாயக தேர்தல் திருவிழா எனப் போற்றப்படும் இந்திய மக்களவைத் தேர்தல் அடுத்த மாதம் நடைபெறவுள்ளது. அதற்கான அறிவிப்புகள் வெளியாகி, தேர்தல் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அனைத்து மாநிலங்களிலும் கூட்டணி தொகுதிகள் ஒதுக்கீடு, வேட்பாளர்கள் அறிவிப்பு எனக் கட்சிகளும் தீவிர தேர்தல் வேலைகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்தத் தேர்தலில் சினிமா பிரபலங்கள் அரசியல் களத்தில் இறங்க உள்ளதாக தொடர்ந்து வதந்திகள் பரவி வருகின்றன.
தமிழகத்தில் அஜித் குமார் அரசியலில் களமிறங்கவுள்ளார் என வதந்தி பரவியது. அதற்கு அறிக்கை ஒன்றை வெளியிட்ட அஜித், அரசியலில் வரும் எண்ணம் இல்லை என்று திட்டவட்டமாக கூறினார். இதைத்தொடர்ந்து அக்ஷய் குமார் பாஜக சார்பில் போட்டியிடவுள்ளார் என்ற தகவல் பரவியது. ஆனால் அந்தத் தகவலை அக்ஷய் குமார் உடனே மறுத்துவிட்டார். இதற்கிடையே பிரபாஸ் ஆந்திராவில் பாஜகவில் போட்டியிடுகிறார் என்ற ஒரு தகவல் கூட கசிந்தது. ஆனால் அது அதிகாரப்பூர்வ அறிவிப்பை பெறவில்லை.
இந்நிலையில் நடிகர் சல்மான் கான் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக மத்தியப் பிரதேசத்தில் பிரச்சாரம் செய்யவுள்ளார் என்ற தகவல் வேகமாக பரவியது. மத்தியப் பிரதேச காங்கிரஸ் வட்டாரங்களும், சல்மான் கானிடம் பேசிவிட்டதாகவும், அவர் இந்தூரில் தங்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யவுள்ளதாகவும் தெரிவித்தன. ஏனென்றால் சல்மான் கானின் சொந்த ஊர் இந்தூர் ஆகும். இந்நிலையில் இந்தத் தகவல் தொடர்பாக விளக்கமளித்து சல்மான், “நான் தேர்தலில் போட்டியிடவில்லை. அத்துடன் எந்தக் கட்சிக்கு ஆதரவாகவும் பிரச்சாரமும் செய்யப்போவதில்லை. அந்தச் செய்தி வதந்திதான்” எனத் தெரிவித்துள்ளார்.