கீர்த்தியின் நடிப்பிற்கு போடப்பட்ட ‘தீணிக்காயிதம்’ இந்த ‘சாணிக்காயிதம்’!- திரை விமர்சனம்

கீர்த்தியின் நடிப்பிற்கு போடப்பட்ட ‘தீணிக்காயிதம்’ இந்த ‘சாணிக்காயிதம்’!- திரை விமர்சனம்
கீர்த்தியின் நடிப்பிற்கு  போடப்பட்ட  ‘தீணிக்காயிதம்’ இந்த ‘சாணிக்காயிதம்’!- திரை விமர்சனம்

’ராக்கி’ படத்தின் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், செல்வராகவன் நடித்திருக்கும் படம் ’சாணிக்காயிதம்’. அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகியுள்ள இப்படத்தின் ட்ரெயிலரே கத்தி… ரத்தம்… பழிக்குப் பழி என எதிர்பார்ப்புகளை உருவாக்கியது.

தன்னுடைய வாழ்க்கையை, கனவை, குடும்பத்தை சீரழித்தவர்களைப் பழிக்குப் ‘பலி’ வாங்குவதுதான் படத்தின் ஒன்லைன். ரிவெஞ்சராக கீர்த்தி சுரேஷ், அவருக்குத் துணையாக அவெஞ்சராக செல்வராகவன் என ரத்தத்தில் குளிக்கும் ’அட்வெஞ்சர்’ படமாக வெளியாகியிருக்கிறது ’சாணிக்காயிதம்’.

போலீஸாக ஆரம்பக்காட்சிகளில் ’லத்தி’ சுரேஷாக வரும் கீர்த்தி சுரேஷ் படம் முழுக்க ‘கத்தி’ சுரேஷாக கதிகலங்கவைக்கிறார். கீர்த்திக்குக்கு இது புதிய களம். காதல் காட்சிகளில் மட்டுமே பார்த்து பழகிப்போன கீர்த்தி, மோதல் ரத்தக்காட்சிகளில் ரத்தவெறியாட்டம் ஆடியிருக்கிறார். ஆரம்பத்தில் அமுல் பேபி மாதிரி வந்தாலும் அடுத்தடுத்து ரிவெஞ்ச் காட்சிகளில் அர்னால்டு பேபி ஆகிவிடுகிறார். பழிவாங்கத் துடிக்கும் காட்சிகளிலும் பழிவாங்கும் காட்சிகளிலும் எக்ஸ்பிரஷன்களை எக்ஸ்பிரஸ் வேகத்தில் கொட்டித் தீர்க்கிறார். கீர்த்தி சுரேஷின் நடிப்பிற்கு போடப்பட்ட ‘தீணிக்காயிதம்’ ஆகியிருக்கிறது ‘சாணிக்காயிதம்’.

நடிப்பில் இது செல்வராகவனுக்கு புதிய களமாக இருக்கலாம். ஆனால், கதைக்களமோ புதிதல்ல. மீன்குஞ்சுக்கு நீந்த கற்றுக்கொடுக்க தேவையில்லை. செல்வராகவனோ இக்கதைகளத்தில் திமிங்கிலம். பார்வையாளர்களாக நீந்திக்கொண்டிருக்கும் நம்மை தனது நடிப்பால் விழுங்கிவிடுகிறார். ஹீரோயிஸம் இல்லாத அவரது மேனரிஸம் , ‘இவ்ளோ நடிப்பை உள்ளுக்குள்ள வெச்சுக்கிட்டு சாதாராகவனா இருந்திருக்கியேய்யா’ என்று சொல்லவைக்கிறார். வில்லன்களை வெறித்தனமாக வேட்டையாடும் காட்சிகளில் ‘புதுப்பேட்டை’ செல்வராகவனைப் பார்க்க முடிகிறது.

கீர்த்தி சுரேஷின் மகளாக வரும் சிறுமி கொஞ்சநேரமே வந்திருந்தாலும் செல்லங்கொஞ்ச வைத்துவிடுகிறார். கணவர் கதாப்பாத்திற்கு ஆரம்பத்தில் கொடுக்கப்படும் பில்டப், கீர்த்தி சுரேஷுக்காக வெறும் பில்டப்பாக மட்டுமே ஆகிவிடுகிறது. வில்லன்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வில்லத்தனத்தை வெறித்தனமாக செய்திருக்கிறார்கள்.

சாதிய வெறி, அடக்கு- ஒடுக்குமுறைகள், பாலியல் வன்முறை, பழிவாங்கல் என வன்முறைப் பொங்கும் கதைக்களத்தை மீண்டும் தேர்ந்தெடுத்திருக்கிறார் இயக்குநர் அருண் மாதேஸ்வரன். கண் தெரியாத மாற்றுத்திறனாளி மாணவரின் கதாப்பாத்திரம் ‘என்ன செய்யப்போகிறதோ’ என்கிற பதைபதைப்பை கடைசி அத்தியாயம்வரை கடத்திச்சென்றதில் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் ‘அடடே’ சொல்லவைக்கிறார்.

ஒரு சின்ன ஃப்ளாஷ்பேக், பிறகு இன்னொரு ஃப்ளாஷ்பேக் என இரண்டு ஃப்ளாஷ்பேக்குகளை ஒயிட் அண்ட் ப்ளாக்கில் காண்பித்து நடுவில் அந்த ஃப்ளாஷ்பேக்கை உடைப்பது என திரைக்கதையில் டெக்னிகல் விளையாட்டை ஆடியிருப்பது ஆரம்பத்தில் புரியவில்லை என்றாலும் படம் பார்த்து முடிக்கும்போது எந்த குழப்பமும் இல்லாமல் புரிந்துவிடுகிறது.

கேமராவையும் ஒளிப்பதிவாளரையும் ரத்தத்தில் தோய்த்து எடுத்ததுபோல் படம் முழுக்க ரத்தமாக தெரிகிறது. கேமரா லென்ஸை எப்படியெல்லாம் பாதுகாத்தார் ஒளிப்பதிவாளர்? காட்சிக்கு காட்சி ரத்தம் தெறித்து கேமராவை மூழ்கடித்திருக்குமோ என்று சொல்லும் அளவுக்கு இப்படத்தில் ஒளிப்பதிவாளர் யாமினி யாக்னா மூர்த்தி காட்சிகளைத் தத்ரூபமாக படம்பிடித்திருக்கிறார். சாம் சி.எஸ் பின்னணி இசையில் பிளிறியிருக்கிறார். சண்டைக்காட்சிகளும் பதற வைக்கின்றன.

ட்ரெயிலரிலேயே பார்வையாளர்களின் முகத்தில் ரத்தத்தை தெளித்த ’சாணிக்காயிதம்’, படத்தில் நம்மை சும்மா விட்டுவிடுமா என்ன? பதட்டத்தில் முகத்தில் சுரக்கும் வியர்வைகூட ரத்தம்போல் தெரியும். அந்தளவுக்கு, படம் முழுக்க முழுக்க வன்முறை வெறியாட்டம் ஆடியிருக்கிறது.

‘போலீஸாகவே இருந்தாலும் என் சாதிக்குக்கீழ்தான் நீ’ என்ற சாதியவெறியும் ஆணாதிக்கவெறியும் ஒன்று சேர்ந்து சீரழிப்பதைப் பகீரூட்டும் விதமாக வெளிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர். ஒடுக்கப்பட்ட சாதி என்பதாலேயே ஒருவரை கழிப்பறையை சுத்தம் செய்யச்சொல்லி இழிவுபடுத்துவது, அரசியலில் எதிராக நின்றால் தீர்த்துக்கட்டுவது என்ற ஆதிக்கசாதி மனப்பான்மையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது திரைக்கதை.

படத்தில் மைனஸ்களும் உள்ளன. முக்கிய கதாப்பாத்திரங்களைத் தவிர வேறு யாரும் இருக்கக்கூடாது என்று நினைத்துவிட்டார்போல இயக்குநர், குடியிருக்கும் வீட்டிற்கு அருகே மற்ற வீடுகளையோ தெருக்களையோ ஸூம் செய்து பார்த்தாலும் கண்டுபிடிக்க முடியவில்லை. செல்வராகவன் சிறுவயதில் இருக்கும் வீடுகூட கடலோரத்தில் தனியே உள்ளது.

கீர்த்தி சுரேஷுக்கும் அவரது கணவருக்குமான காட்சிகளில் சரியான பிணைப்பு இல்லை. படம் முழுக்க ஏதோ கொல்லைப்புரத்தில் எடுத்ததுபோல் உள்ளது. ஒருவேளை போலீஸ் வேலையில் சேர்ந்து முதல்மாத கீர்த்தி சம்பளம்கூட வாங்கவில்லையோ? கீர்த்தி சுரேஷின் வீடும் குடிசைபோல்கூட இல்லாமல் கொட்டகைபோல் உள்ளது. வேறு எங்குமே வேலை கிடைக்காததுபோல, மன்னிப்பு கேட்டு மீண்டும் ரைஸ் மில்லில் வேலைக்கு சேரச்சொல்வதும் செல்வதும் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை. பிரச்சனையை பிரளயமாக்க கொஞ்சம் திணித்ததுபோல் இருந்தது.

இவ்வளவு வயலன்ஸ் தேவைதானா என்று ‘ராக்கிபாயே’ மிரளும் அளவுக்கு, பாலியல் வன்முறைக் காட்சியில் வயலன்ஸ்…. வயலன்ஸ்… வயலன்ஸ்…!

விசாரணைக்கைதிகள் நீதிமன்றத்திலிருந்து தப்பிப்பது, அவர்களைத் தேடாமல் போலீஸ் அப்படியே விட்டுவிடுவது என்பதெல்லாம் நம்பும்படியாக இல்லை. ஒருவேளை, போலீஸ் தேடும் காட்சிகள் பார்வையாளர்களுக்கு தேவையில்லை என்று இயக்குநர் நினைத்திருக்கலாம் போல.

‘பழிவாங்குறதுன்னா என்ன தெரியுமா?’ என்கிற கீர்த்தி சுரேஷ், ”ஒருத்தன் கல்லால அடிச்சா நாம பதிலுக்கு கல்லால அடிக்கணும். ஒருத்தன் நம்பமேல எச்ச துப்பினா பதிலுக்கு நாமளும் எச்ச துப்புறோம். ஒருத்தன் நம்ப வாழ்க்கையே அழிச்சுட்டா? நம்ப கனவு… உசுரு… ஆசை… உலகம்… எல்லாம்… அவனை தூக்கி ஜெயில்ல போட்டுட்டா அதுக்குப்பேரு பழிவாங்குறதா? இல்ல” என்கிறார். அவனைத் தூக்கி ஜெயில்ல போட்டுட்டா அதுக்குப்பேரு பழிவாங்கல் இல்லை. ஜெயிலில் போடுவது அவன் செய்த குற்றங்களுக்கு சட்டம் கொடுக்கும் தண்டனை என்பதும் அத்தனை பேருக்கும் தெரியுமே? அதேநேரத்தில், ஜெயிலில் போட்டாலும் தங்களுக்கு இருக்கும் ஆதிக்க பலம், அதிகார பலம், பண பலத்தைக் கொண்டு ஈஸியாக தப்பித்துவிடுவார்கள் என்பதால் கீர்த்தி சுரேஷ் எடுக்கும் ரிவேஞ்சை சினிமாவிற்காக ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், நிஜவாழ்க்கையில் ரிவெஞ்ச் எடுப்பது தொடர்புள்ளியாகத்தான் இருக்குமே தவிர பிரச்சனைக்கு முற்றுப்புள்ளியாகவோ தீர்வாகவோ அமையாது.

படத்தின் தலைப்புக்கேற்றார்போல் ‘சாணி’டைசர் எனப்படும் கிருமிக்கொல்லியாய், சமூகத்தில் உலாவிக்கொண்டிருக்கும் கிருமிகளைக் கொல்கிறார்கள் கதையின் நாயகியும் நாயகனும். அதனாலேயே, ’சாணிக்காயிதம்’ படத்தைப் பார்க்கலாம்.

- வினி சர்பனா

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com