மகாபாரத கதையை எஸ்.எஸ்.ராஜமெளலி எடுக்க போவதாக தகவல்கள் கசிந்து வருகின்றன. இந்நிலையில் அந்தக் கதையை இப்போதைக்கு எடுக்கப் போவதில்லை என்று முதன்முறையாக அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
பாகுபலி மூலம் ஹாலிவுட் அளவுக்கு கவனத்தை ஈர்த்தவர் எஸ்.எஸ்.ராஜமெளலி. அவர் அடுத்து மகாபாரத கதையை இயக்க போவதாக செய்திகள் வெளியாகின. அதை தொடர்ந்து ஹைதராபாத் செய்தியாளர்கள் அவரை சந்தித்து கேள்வி எழுப்பினர். அதற்கு, மகாபாரதத்தை இப்போதைக்கு திரைக்கதையாக எடுக்கும் திட்டம் இல்லை. ஆனால் அது தன்னுடைய கனவு புராஜெட். அந்தக் கதையை படமாக எடுக்கக்கூடிய அளவுக்கு நான் இன்னும் தயாராகவில்லை என்றார்.
அதேபோல் ஆஸ்கர் விருது சம்பந்தமாகவும் தேசிய விருதுகள் சம்பந்தமாகவும் அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு விருதுக்காக நான் படம் எடுக்கவில்லை. அதேசமயம் விருதுகள் கிடைத்தால் நான் மகிழ்வேன். சினிமாவில் பல்வேறு ஆட்களின் உழைப்பு உள்ளது. பணம் நிறைய முதலீடு செய்கிறார்கள். அதை மீட்டெடுக்க நிறைய ஆடியன்ஸ் தேவை. போட்ட பணத்தை எடுத்தாக வேண்டும். அதுதான் முக்கியமான விஷயம். ஆகவே அதை தவிர என் மூளையில் வேறு எதையும் யோசிப்பதில்லை. என் படங்களுக்கு அடிப்படையே அவர்கள்தான் என்று கூறியுள்ளார்.