ஆர்.ஆர்.ஆர் ரிலீஸ் ஒத்திவைப்பு: பவன் கல்யாணின் 'பீமா நாயக்'கை வெளியிடத் திட்டம்
ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் வெளியீடு தள்ளிச்செல்வதால், பவன் கல்யாண் நடித்துள்ள பீமா நாயக் திரைப்படம் வெளியாக உள்ளது.
எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் உருவாகியிருக்கும் ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தை உலகம் முழுவதும் வரும் 7-ம் தேதி வெளியிட திட்டமிட்டனர். அதற்கான புரோமோஷன் நிகழ்ச்சிகளும் இந்தியாவின் பல மாநிலங்களில் நடைபெற்றது. இந்த நிலையில் இந்தியாவின் சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல் தமிழ்நாட்டில் 50 சதவீத பார்வையாளர்களுடன் மட்டுமே திரையரங்குகள் இயங்க வேண்டும் என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. மேலும் வெளிநாடுகளிலும் ஒமைக்ரான் தாக்கம் அதிகமாக இருப்பதால் அங்குள்ள விநியோகஸ்தர்கள் படத்தின் விலையை குறைக்கும்படி தயாரிப்பாளரிடம் கோரிக்கை வைத்ததாக தெரிகிறது.
இதன்காரணமாக ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் வெளியீடு தள்ளிச்செல்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஏப்ரல் 1-ம் தேதி படத்தை வெளியிட திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஆர்.ஆர்.ஆர் தள்ளிச்செல்வதால் பவன் கல்யாண் நடித்துள்ள பீமா நாயக் படத்தை பொங்கலுக்கு வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். அதேபோல் தெலுங்கிலிருந்து இன்னொரு படமான பிரபாஸின் ராதே ஷ்யாம் படமும் 14 ஆம் தேதி வெளியாகிறது. இதற்கான அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளனர்.