ஆஸ்கர் பரிந்துரைக்கு தேர்வாகாத ‘ஆர்ஆர்ஆர்’-கனவு தகர்ந்துவிட்டதாக ரசிகர்கள் கடும் அதிருப்தி

ஆஸ்கர் பரிந்துரைக்கு தேர்வாகாத ‘ஆர்ஆர்ஆர்’-கனவு தகர்ந்துவிட்டதாக ரசிகர்கள் கடும் அதிருப்தி
ஆஸ்கர் பரிந்துரைக்கு தேர்வாகாத ‘ஆர்ஆர்ஆர்’-கனவு தகர்ந்துவிட்டதாக ரசிகர்கள் கடும் அதிருப்தி

ராஜமௌலியின் ‘ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படம் 2023-ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு, இந்தியா சார்பில் பரிந்துரை செய்யப்படும் படமாக தேர்வு செய்யப்படாத நிலையில், ரசிகர்கள் ட்விட்டர் பக்கத்தில் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.

‘பாகுபலி’ பிரம்மாண்ட வெற்றிக்குப்பிறகு ராஜமௌலி இயக்கத்தில் மெகா பட்ஜெட்டில் உருவான திரைப்படம் ‘ஆர்.ஆர்.ஆர்.’. பான் இந்தியா படமாக உருவாகிய இந்தப் படத்தில், ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர்., அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி, ஸ்ரேயா சரண், ஆலியா பட், ரே ஸ்டீவன்சன், ஒலிவியா மோரிஸ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

1920-ம் ஆண்டு காலக்கட்டத்தில், ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய தெலுங்கு மாநிலத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர்களான, அல்லூரி சீதாராம ராஜு மற்றும் கொமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட உருவான கற்பனைக் கதைதான் ‘ரத்தம் ரணம் ரௌத்தரம்’ எனப்படும் ‘ஆர்.ஆர்.ஆர்.’ திரைப்படம்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்பட 5 மொழிகளில் கடந்த மார்ச் மாதம் 25-ம் தேதி உலகம் முழுவதும் வெளியான இந்த திரைப்படம், 1150 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை ஈட்டியது. இதற்கு முன்னதாக ராஜமௌலியின் இயக்கத்தில், பிரபாஸ் நடிப்பில் வெளியான ‘பாகுபலி : தி கன்குளூஷன்’ திரைப்படம் 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்த நிலையில், இந்தப் படமும் அந்தச் சாதனையை படைத்திருந்தது.

இந்த இரண்டு படங்களும் வெற்றிபெற்றதற்கு முக்கிய காரணமாக கருதப்படுவது படத்தின் பிரம்மாண்டமும், கதைக்களமும், சி.ஜி. எனப்படும் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணிகளுமே. இதையடுத்து உலகளவில் தவிர்க்கமுடியாத இயக்குநராக ராஜமௌலி உருவாகியிருந்தார். இதனால் 2023-ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பில் அனுப்பப்படும் படமாக ‘ஆர்.ஆர்.ஆர்.’ இருக்கும் என்று கடந்த சில மாதங்களாக பேசப்பட்டுவந்தநிலையில், இந்தப் படம் தேர்ந்தெடுக்கப்படவில்லை.

ஆண்டுதோறும் சிறந்த வெளிநாட்டு அல்லது சர்வதேச திரைப்படம் என்றப் பிரிவில் ஆஸ்கர் போட்டிக்கு இந்தியா சார்பில் ஒரு படம் பரிந்துரை செய்யப்படும். அதற்கு, இந்தியாவில் வெளியான படங்களை தேர்வு செய்யும் பணி நடந்து வந்தது. அதில் குஜராத்திப் படமான 'செலோ ஷோ' (தி லாஸ்ட் ஷோ) தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் தங்களது அதிருப்தியை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். ஹாலிவுட் இயக்குநர்களே பாராட்டியிருந்த நிலையில், நீண்ட நாள் ஆஸ்கர் கனவு தகர்ந்துவிட்டதாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர் நெட்டிசன்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com