'என்ன பாத்தா எப்படி தெரியுது!'- மாதவனின் புதிய அவதாரம்... மிரட்டும் 'ராக்கெட்ரி' ட்ரெய்லர்
நடிகர் மாதவன் இயக்கி நடித்திருக்கும் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘ராக்கெட்ரி நம்பி விளைவு படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
நம்பி நாராயணனாக உருமாறியிருக்கும் மாதவனை சூர்யா நேர்காணல் செய்வது போன்ற காட்சியில் தொடங்கும் ட்ரெய்லர், அடுத்தடுத்து நகரும் நொடிக்காட்சிகளில் நம்பி நாரயணன், தன் வாழ்கையில் எதிர்கொண்ட வேதனைகள், சாதனைகள், முயற்சிகள், அவமானங்கள் என அனைத்தையும் நம் கண்முன்னே விவரிக்கிறது
‘உலகமே 60, 70 டன் என்ஜின் செய்து கொண்டிருக்கும் போது, நாம 600 கிலோகிராம் சொப்பு சாமானை வைத்து விளையாண்டு இருக்கோம் , இது ராக்கெட் இல்ல சார் வெறும் பப்பெட்ரி.’ வரும் காலத்தில் அந்த டிரில்லியன் டாலர் மார்க்கெட்டில் நமக்கு ஒரு பங்கு இருக்கனும்... என வசனங்களை வீசும் மாதவன், தனது உடல் மொழியாலும் கவனம் ஈர்க்கிறார்.
எல்லோரும் அந்த லிக்யூடு ப்யூல் இன்ஜின் என்னால தோத்துட்டதாக நினைச்சுட்டு இருக்காங்க ஆனா உண்மை என்னனென்னா நான் தோற்றது உங்களால் தான்.. என மாதவன் ஆக்ரோஷமாக பேச, துணைகதாப்பாத்திரம் நம்பி செய்த தவறுகளை அடுக்குகிறது.
அதன் பின்னர் குற்றம்சாட்டப்படும் நம்பியின் ஏமாற்றம், அவர் எதிர்கொள்ளும் பிரச்னைகள் என நகரும் ட்ரெய்லர், இறுதிக்கட்ட பரப்பில் ராக்கெட் விண்ணில் ஏவப்படும் காட்சியுடன் முடிவடைகிறது.
ஒருவனை அடையாளம் தெரியாமல் கொல்ல வேண்டும் என்றால் அவனுக்கு தேசவிரோதி என்ற முத்திரை குத்த வேண்டும் என்றும் ட்ரெய்லரின் சூர்யா குறிப்பிடுகிறார்.
முன்னதாக, கிரையோஜனிக் ராக்கெட் தொழில்நுட்பத்தை வெளிநாட்டுக்கு விற்றதாக இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் கடந்த 1994 ஆம் ஆண்டு கேரள காவல்துறையால் கைது செய்யப்பட்டார். பின்னர் நம்பி நாராயணன் இவ்வழக்கில் நிரபராதி என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அப்போது நம்பி நாராயணனுக்கு 50 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் எனக் கூறி இருந்தது. கேரளாவில் சட்டத்துக்குப் புறம்பாக கைது செய்யப்பட்டு சித்ரவதைக்கு உள்ளானதாக திருவனந்தபுரம் சார்பு நீதிமன்றத்தில் நம்பி நாராயணன் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் சமரசம் செய்து கொள்ள ஒரு கோடியே 30 லட்ச ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என கேரள முன்னாள் முதன்மைச் செயலாளர் ஜெயக்குமார் அரசுக்கு சிபாரிசு செய்தார்.
இதனை ஏற்ற கேரள அமைச்சரவை, அந்தப் பணத்தை தர ஒப்புதல் அளித்து பணத்தையும் வழங்கியது. இதனால், நம்பி நாரயணன் மீதான மதிப்பு மக்களிடத்தில் உயர்ந்தது.