பிரபுதேவா நடனத்தை விமர்சித்த நடிகை; முடிந்தால் நீங்க ஆடிக் காட்டுங்க - பதிலடி கொடுத்த ராபர்ட்!
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என்ற அளவுக்கு, நடனத் துறையில் பல சாதனைகளை நிகழ்த்தக்கூடியவர் நடிகரும் நடனக் கலைஞருமான பிரபு தேவா. இவர் சில நாட்களுக்கு முன்பு குரு பூர்ணிமா நாளில், தனது நடன குருக்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பரதநாட்டியம் ஆடினார். இது தொடர்பான வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்தது.
இந்நிலையில், அந்த வீடியோவைப் பகிர்ந்த நடிகர் சஞ்சீவின் மனைவியும், பரதநாட்டியக் கலைஞருமான ப்ரீத்தி சஞ்சீவி, "பாரம்பரிய கலைகளைத் தவறாக ஆடினால் யாரும் கேட்க மாட்டீர்களா? இந்த நிகழ்ச்சியில் பிரபு தேவா பரதநாட்டியத்தை முறைப்படி ஆடவில்லை. இதனால் மன்னிக்க முடியாத குற்றம் செய்துவிட்டார். இதுபோன்ற வாய்ப்புகளை இவருக்குப் பதிலாக வேறு இளம் நடனக் கலைஞர்களுக்கு வழங்கியிருக்கலாம்" எனப் பதிவிட்டார்.
ப்ரீத்தியின் இந்தக் கருத்து சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதப் பொருளானது. இந்நிலையில், நடனக் கலைஞர் ராபர்ட் இந்த விமர்சனத்துக்கு பதிலளித்து வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில், "பிரபு மாஸ்டர் என்பவர் கடவுளுக்கு நிகரானவர். எனக்கு சஞ்சீவ் நெருங்கிய நண்பர் தான், ஆனால் அவரது மனைவி குறித்து எனக்கு பேச விருப்பம் இல்லை. இங்கு நடனத் துறைக்கு எப்படி நடராஜர், மைக்கேல் ஜாக்சன் உள்ளார்களோ, அதேபோல் இங்கு பிரபு மாஸ்டரும். நடனக் கலைஞர்கள் என்பவர்கள் ஹீரோக்களுக்கு பின்னால் கிளாமராக மட்டுமே ஆடுபவர்கள் என்ற நிலை இருந்ததை மாற்றியவர் பிரபு மாஸ்டர் தான். இன்று நடனக் கலைஞர்களின் முகங்கள் வெளியே தெரிந்து, பிரபலங்களாக இருப்பதற்கு காரணமும் அவர் தான்.
இது குருவுக்கு நன்றி கடன் செலுத்தும் நிகழ்வு. அவர் வருவதே பெரிய விஷயம். அதிலும் அவர் ஆட வேண்டிய அவசியமே இல்லை. ஆனாலும், அவர் இந்த வயதிலும் தனது குருவுக்கு மரியாதை செலுத்த ஆடினார்; அது பெரிய விஷயம். முடிந்தால் அந்த வயதில் நீங்கள் ஆடி காட்டுங்கள். நடனம் என்றால் ஒன்றை மட்டும் கற்றுக்கொள்வது இல்லை. அனைத்தையும் கற்றுக்கொள்ள வேண்டும். அதில் எங்கள் தலைவர் பிரபு தேவா கைதேர்ந்தவர். அவர் கிளாசிக்கல் நடனத்தையும் கற்று தேர்ந்தவர்" எனப் பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
செய்தியாளர் - ராஜ்குமார்.ர

