“ஆம், நான் அரசியலுக்கு வருகிறேன்” ஆர்.ஜே.பாலாஜி அறிவிப்பு !
திரைப்படத்தின் வாயிலாக அரசியலுக்கு வருவதாக நடிகர் ஆர்.ஜே.பாலாஜி அறிவித்துள்ளார்.
திரைப்பட நடிகரும், தொகுப்பாளருமான ஆர்.ஜே.பாலாஜி அரசியலில் களமிறங்கப் போவதாக ஒரு சுவர் விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்தச் சுவர் ஓவியத்தில் சிவப்பு, கருப்பு, பச்சை நிறத்தில் ஆன கொடியும், அதைசுற்றி மஞ்சள் நிறமும் நிரப்பப்பட்டுள்ளது. கொடியின் மையத்தில் காளையின் படம் இடம்பெற்றுள்ளது. இருப்பினும் இந்தச் சுவர் ஓவியம் எந்த இடத்தில் வரையப்பட்டுள்ளது என்ற தகவல்கள் இல்லாமல் இருந்தது.
ஆனால் இந்தப்படம் சமூக வலைத்தளத்தில் பரவி வந்தது. பின்னர், ஆர்.ஜே.பாலாஜி சமூக வலைத்தளமான ட்விட்டர் மற்றும் பேஸ்புக்கில் தனது சுயவிபர (Profile Picture) படங்களை மாற்றினார். அதில் சுவர் விளம்பரத்தில் இருந்தக் கொடி இடம்பெற்று இருந்தது. முன்னதாக அந்தச் சுவர் விளம்பரத்தில் மே18 அரசியல் களம் புகும் ஆர்.ஜே.பாலாஜி வருக என எழுதப்பட்டிருந்தது. ஏற்கனவே சமூக அக்கரை கொண்ட நபராக அறியப்பட்ட ஆர்.ஜே.பாலாஜி, அரசியலுக்கு வருவார் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், கன்னடத்தில் வெளியான படத்தின் தமிழில் ரீமேக் செய்ய இருப்பதாகவும் அதில் ஆர்.ஜே.பாலாஜி நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில் நேற்று ஆர்.ஜே.பாலாஜி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் ‘உங்கள் அனைவரது பேராதரவிற்கும், பேரன்பிற்க்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள். நாளை மே 18ஆம் தேதி (இன்று) ஐபிஎல் சிஎஸ்கே போட்டியின் போது இரவு 7 மணியளவில் ஸ்டார்போட்ஸ் சேனலில் எனது அடுத்தக்கட்ட பயணத்தை அறிவிக்க உள்ளார்கள். நன்றி’என குறிப்பிட்டுயிருந்தார்.
அதன்படி, இன்று ஆர்.ஜே.பாலாஜியின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது. ஆர்.ஜே.பாலாஜி அடுத்ததாக `எல்கேஜி' என்றபடத்தில் நடிக்கிறார். பிரபு இயக்கும் இந்த படத்தில் ஆர்.ஜே.பாலாஜி அரசியல்வாதியாக அவதாரம் எடுத்திருக்கிறார். இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை ப்ரியா ஆனந்தும் நடிக்கிறார். அரசியலை மையப்படுத்தி காமெடி படமாக உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியதாக தெரிகிறது. இதுகுறித்து ஆர்.ஜே.பாலாஜி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், `நான் அரசியலுக்கு வருகிறேன் திரைப்படத்தின் வாயிலாக LKG' என்று குறிப்பிட்டிருக்கிறார்.