ஆஸ்கர் பரிந்துரை: சிறந்த நடிகர் பிரிவில் முதல் இஸ்லாமியர்... யார் இந்த ரிஸ் அகமது?!
கொரோனா பெருந்தொற்றால் கிட்டத்தட்ட ஒரு வருட காலம் சினிமா உலகம் மூடப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியிருக்கிறது. இந்த ஒரு வருடம் கழித்து திங்கள்கிழமை காலை பிரியங்கா சோப்ரா ஜோனாஸ் மற்றும் நிக் ஜோனாஸ் இருவரும் 93-வது வருட ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரைகளை அறிவித்தனர். 'மாங்க்,' நெட்ஃபிக்ஸின் 'சிட்டிசன் கேன்' போன்றவற்றுடன், 'த ஃபாதர்,' 'யூதாஸ் மற்றும் பிளாக் மேசியா,' 'மினாரி,' 'நோமட்லேண்ட்,' 'சவுண்ட் ஆஃப் மெட்டல்' மற்றும் `த ட்ரையல் ஆஃப் சிகாகோ' போன்ற படைப்புகளும் பரிந்துரைப் பட்டியலில் இடம்பிடித்தன.
இதில் ‘சவுண்ட் ஆஃப் மெட்டல்' படத்தில் நடித்த ரிஸ் அகமது சிறந்த நடிகருக்கான பரிந்துரையில் இடம்பிடித்தார். அவருடன் சிறந்த நடிகருக்கான விருது போட்டியில் மா ரெய்னியின் 'பிளாக் பாட்டம்' படத்திற்காக மறைந்த நடிகர் சாட்விக் போஸ்மேன், 'மினாரி' படத்தில் ஸ்டீவன் யூன், 'தி ஃபாதர்' படத்தில் ஆன்டணி ஹாப்கின்ஸ் மற்றும் 'மாங்க்' படத்திற்காக கேரி ஓல்ட்மேன் ஆகியோர் இருக்கின்றனர்.
இதில் உள்ள சிறப்பம்சம் என்னவென்றால், முன்னணி நடிகர் பிரிவில் பரிந்துரைக்கப்பட்ட முதல் இஸ்லாமிய நடிகர் ரிஸ் என்பதுதான்.
ரிஸ் அகமது யார்?
ரிஸ்வான் அகமது என்பதுதான் இவரின் இயற்பெயர். இவர் ரிஸ் எம்.சி என்றும் அழைக்கப்படுகிறார். இவர் லண்டனில் உள்ள ஒரு பிரிட்டிஷ் - பாகிஸ்தான் குடும்பத்தில் பிறந்தவர். சுவாரஸ்யமாக, பிரிட்டிஷ் சகாப்தத்தின்போது அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக ஆன முதல் முஸ்லிம் சர் ஷா முஹம்மது சுலைமானின் வழித்தோன்றல் இந்த ரிஸ் அகமது. 2021 ஜனவரியில் தான், ரிஸ் அமெரிக்க நாவலாசிரியர் பாத்திமா ஃபர்ஹீன் மிர்சா என்பவரை திருமணம் செய்துள்ளார்.
நடிப்பை தாண்டி ரிஸ் சிறந்த இசைக்கலைஞரும் கூட. லண்டன் இசை நிகழ்ச்சியில் ஒரு ராப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். சில ஆல்பங்களை அவர் வெளியிட்டு இருக்கிறார். 'பிரிட்ஜ்' (2007), 'டெட் செட்' (2008), 'வெனோம்' (2018) மற்றும் 'நைட் கிராலர்' (2014) போன்ற படங்களிலும் பணிபுரிந்து இருக்கிறார். 'தி நைட் ஆஃப்' திரைப்படத்துக்காக சிறந்த நடிகருக்கான எம்மி விருது வென்ற முதல் ஆசிய இஸ்லாமியர் இவர் மட்டுமே. இந்த நிலையில்தான் இவர் நடித்த 'சவுண்ட் ஆப் மெட்டல்' ஆஸ்கர் விருதுக்கான ரேஸில் தேர்வாகியுள்ளது.
சமூக பணிகளிலும் அதிக நாட்டம் கொண்டவர் ரிஸ். ரோஹிங்கியா மற்றும் சிரிய அகதி குழந்தைகளுக்கான விழிப்புணர்வையும் நிதியையும் ரிஸ் திரட்டி வருகிறார். இதன் காரணமாக 'டைம்' பத்திரிகையின் 2017-ஆம் ஆண்டில் உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க நபர்களின் 100 பட்டியலிலும் ரிஸ் இடம்பிடித்து இருந்தார். என்றாலும், இந்தியா மீது கசப்பான உணர்வுகளை கொண்டிருக்கிறார் ரிஸ்.
இந்தியாவின் கொரோனா பரவத் தொடங்கிய காலகட்டத்தில் டெல்லி தப்லீக் ஜமாத் கூட்டத்தின் மூலமாக கொரோனா பரவியதாக வெளியான குற்றச்சாட்டின்போது ``இந்திய அரசாங்கம் 'கொரோனா - ஜிகாத்' என்று அழைக்கிறது, மேலும் அவர்கள் கொரோனா பரவலில் முஸ்லிம்கள் மீது குற்றம்சாட்ட முயற்சிக்கின்றனர், மேலும், அவர்கள் முஸ்லிம்களுக்கும் முஸ்லிமல்லாதவர்களுக்கும் இடையில் மருத்துவமனைகளை பிரித்து வருகின்றனர்" என்று பகிரங்கமாக குற்றம்சாட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.