திருமணம் என்பது நடிகைகளுக்கு முற்றுப் புள்ளியா..?: ரித்விகா வருத்தம்
ரித்விகா குறித்து பரவிய செய்திகளுக்கு அவரே முற்றுப் புள்ளி வைத்துள்ளார்.
மெட்ராஸ், கபாலி உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ்பெற்றவர் ரித்விகா. பிக்பாஸ் 2 சீசனிலும் போட்டியாளராக கலந்துகொண்டு பட்டத்தை தட்டிச் சென்றார். இதனிடையே அடுத்த வருடத்தில் ரித்விகா திருமணம் நடைபெற உள்ளதாகவும், அதற்காக ஒப்புக்கொண்ட படங்களை மட்டும் முடித்துக்கொடுக்க அவர் தயாராகி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. அத்துடன் திருமணத்திற்கு பின் அவர் நடிக்க வாய்ப்பில்லை என்றும் செய்திகள் வலம் வரத் தொடங்கின.
இந்நிலையில் திருமணம் குறித்த செய்திகளுக்கு அவரே முற்றுப் புள்ளி வைத்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “திருமணம் குறித்த கேள்விக்கு அடுத்த வருடம் நடக்க வாய்ப்புள்ளது என்றேன். அதற்குள், அதனை சரிவர அறியாமல் சிலர் திருமணத்திற்கு பின் நான் நடிக்கமாட்டேன் என சேர்த்து செலுதியுள்ளனர். இது வருத்தத்தை தருகிறது. திருமணம் என்பது நடிககைகளுக்கு முற்றுப்புள்ளியா..? வருத்தம்” என பதிவிட்டுள்ளார். இதன்மூலம் திருமணத்திற்கு பின்பும் கூட ரித்விகா தொடர்ந்த நடிக்க இருப்பது உறுதியாகியுள்ளது.