ரீவைண்ட் 2020: விஜய் சேதுபதி முதல் விஜய் வரை... தமிழ் சினிமா சந்தித்த சர்ச்சைகள்!

ரீவைண்ட் 2020: விஜய் சேதுபதி முதல் விஜய் வரை... தமிழ் சினிமா சந்தித்த சர்ச்சைகள்!
ரீவைண்ட் 2020: விஜய் சேதுபதி முதல் விஜய் வரை... தமிழ் சினிமா சந்தித்த சர்ச்சைகள்!

> 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9 ஆம் தேதி வெளியான திரைப்படம் 'தர்பார்'. ரஜினி, நயன்தாரா நடிப்பில் உருவான இந்தப் படத்தை பிரபல இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருந்தார். இந்தப் படத்தில் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருக்கும் சசிகலாவை குறிப்பிடும் வகையில் 'காசு இருந்தால் சிறைக்கைதி கூட ஷாப்பிங் போகலாம்' என்ற வசனம் இடம் பெற்றதையெடுத்து, அதனை எதிர்த்து அம்மா மக்கள் முன்னேற்ற கழக ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத்தொடர்ந்து படத்திலிருந்து அந்த வசனத்தை நீக்கியது படக்குழு. படம் எதிர்பார்த்த வசூலை பெறவில்லை எனக் கூறி, தர்பார் படத்தை வாங்கிய விநியோகிஸ்தர்கள் ரஜினி வீட்டின் முன்பு போராட்டம் நடத்தியதும் கவனிக்கத்தக்கது.

> திரையரங்குகளில் டிஜிட்டல் முறையில் திரைப்படங்களை திரையிட விபிஎஃப் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. முன்னதாக இந்தக் கட்டணத்தை தயாரிப்பாளர்கள் செலுத்தி வந்த நிலையில், வரும் காலங்களில் விபிஎஃப் கட்டணத்தை திரையரங்க உரிமையாளர்களே செலுத்த வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்தது. இதற்கு திரையரங்க உரிமையாளர்கள் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

இது சர்ச்சையாக வெடித்தது. இது தொடர்பான பேச்சுவார்த்தை இரண்டு மாதங்களாக நடைபெற்ற நிலையில் பிரச்னையில் தலையிட்ட க்யூப் நிறுவனம், நவம்பர் மாதம் இறுதிவரை இலவச சலுகையை வழங்க முன்வந்தது. தற்போது 40 சதவீத சலுகையுடன் விபிஎஃப் கட்டணத்தை தயாரிப்பாளர்கள் செலுத்திவருகின்றனர். இந்தச் சலுகையானது வரும் மார்ச் மாத இறுதிவரை மட்டும்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

> சூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடிப்பில் உருவான 'பொன்மகள் வந்தாள்' திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு திரையரங்க உரிமையாளர்கள் எதிர்ப்பை பதிவு செய்தாலும், இதற்கு ஆதரவு கருத்துகளும் வந்தன. இதனைத்தொடர்ந்து சூர்யா நடிப்பில் உருவான 'சூரரைப் போற்று' திரைப்படமும் ஓடிடியில் வெளியிடப்படும் என சூர்யா அறிவித்தார். இதற்கு திரையரங்க உரிமையாளர்கள் தங்களது கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தனர்.

> இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படமான '800' திரைப்படத்தில் நடிக்க விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில், முத்தையா முரளிதரன் இலங்கையில் ஈழத் தமிழர்களின் படுகொலைக்கு ஆதரவாக குரல் கொடுத்தாக கூறி, விஜய் சேதுபதி அந்தப் படத்தில் இருந்து விலக வேண்டும் என அரசியல் கட்சிகள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலர் வலியுறுத்தினர். இதற்கு விஜய் சேதுபதி '800' திரைப்படத்தில் இருந்து பின்வாங்கப்போவதில்லை என கூறியதையடுத்து எதிர்ப்பு வலுக்கத் தொடங்கியது.

எதிர்ப்புகளுக்கு முத்தையா முரளிதரன் தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டபோதும், எதிர்ப்புகள் குறைந்தபாடில்லை. இந்த சர்ச்சையை மனதில் வைத்துக் கொண்டு, இலங்கையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் விஜய் சேதுபதி மகளுக்கு ஆபாச மிரட்டல் விடுத்தார். அது தொடர்பாக சைபர் க்ரைம் போலீசார் நடவடிக்கை எடுக்க, இளைஞர் கண்டறியப்பட்டு அதன் பின்னர் அவர் மன்னிப்பும் கோரினார். இறுதியில் முத்தையா முரளிதரன், விஜய் சேதுபதியை படத்திலிருந்து விலகிக்கொள்ளுமாறு கோரிக்கை வைத்த நிலையில், விஜய் சேதுபது அந்தப் படத்திலிருந்து விலகிகொண்டார்.

> சுஷாந்த் சிங் தற்கொலை விவகாரம்தான் 2020 ஆம் ஆண்டு பாலிவுட் டாக் ஆப் தி டவுனாக இருந்தது. வாரிசு அரசியலை மையமாக வைத்து நடக்கும் இந்த சதுரங்க ஆட்டத்தில் திறமைமிக்க நடிகர்கள், நடிகைகள், இசையமைப்பாளர்கள் அனைவரும் ஓரங்கட்டப்படுவதாக பலரும் குற்றம்சாட்டினர். அந்த வரிசையில் 'ஆஸ்கர் நாயகன்' ஏ.ஆர்.ரஹ்மானும் 'பாலிவுட்டில் என்னைப் பற்றி வதந்திகளை பரப்ப பாலிவுட்டில் ஒரு கூட்டமே செயல்படுகிறது' எனக் கூறியது சினிமா பிரபலங்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. பாலிவுட் நடிகர் சுஷாந்தின் இறுதிப்படமான 'தில் பெச்சாரா' படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

> 2020 ஆம் ஆண்டு இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் நடிகர்கள் ரிச்சர்ட், ஷீலா, கருணாஸ் ஆகியோர் நடிப்பில் வெளியான படம் திரெளபதி. இந்தப் படத்தின் ட்ரெய்லர் சாதி மறுப்பு திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், அதில் இடம்பெற்ற வசனங்கள் வன்முறையை தூண்டுவிதமாக இருப்பதாக கூறி சர்ச்சை எழுந்தது. இந்தப் படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனுவும் அளிக்கப்பட்டது.

> படப்பிடிப்பிற்காக தஞ்சாவூர் சென்ற நடிகை ஜோதிகா, அங்குள்ள தஞ்சாவூர் அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையை பார்வையிட்டார். இதனைத்தொடர்ந்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஜோதிகா கோயிலுக்கு செலவு செய்து பராமரிப்பது போல, மருத்துவமனைகளையும் பராமரிக்க வேண்டும். கோயிலின் உண்டியலில் போடும் பணததை பள்ளிகள் மருத்துவமனைகளுக்கு கொடுக்கலாம் என கூறினார். இதையடுத்து, ஜோதிகா கோயில்களுக்கு எதிரான கருத்தை கூறிவிட்டார் என சர்ச்சை எழுந்தது. அதனைத்தொடர்ந்து ஜோதிகாவிற்கு ஆதரவாக களத்தில் இறங்கிய சூர்யா, “ஜோதிகா கூறிய கருத்தை விவேகானந்தர் பொன்ற ஆன்மீக பெரியவர்களும் கூறியிருக்கிறார்கள்” என அறிக்கை வெளியிட்டார்.

> வழக்கம்போல் இந்த வருடமும் விஜய்க்கு சர்ச்சை வருடமாகவே அமைந்தது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'மாஸ்டர்' படத்தின் படப்பிடிப்பு நெய்வேலியில் நடந்து கொண்டிருந்தபோது, வருமானவரித் துறையினர் அங்கிருந்து விஜய்யை அவரது வீட்டிற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இது சமூகவலைதளங்களில் பேசுபொருளான நிலையில், அதனைதொடர்ந்து நெய்வேலியில் நடைபெற்ற படப்பிடிப்பு தளத்திற்கு ஆயிரக்கணக்கான விஜய் ரசிகர்கள் கூடினர். அப்போது அங்கு வந்த விஜய் அங்கிருந்த வேனில் ஏறி ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்டார். இந்த செல்பி ட்விட்டரில் அதிகளவில் ரீ ட்விட் செய்யப்பட்ட ட்விட்டாக மாறி சாதனைப் படைத்தது.

> கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு உடல் எடையைக் குறைத்த சிலம்பரசன், இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் படத்தில் நடித்தார். அந்தப் படத்தின் போஸ்டர் சமூகவலைதளங்களில் வெளியானது. அதில் சிலம்பரசன் பாம்பு ஒன்றை கையில் வைத்திருக்க, இதனைப் பார்த்த சமூக ஆர்வலர்கள், சிலம்பரசன் பாம்பை கொடுமைப்படுத்தியதாகவும், படக்குழு வன உயிரின சட்டத்தை மீறியுள்ளதாகவும் புகார் எழுப்பினர். இதனைத் தொடர்ந்து விளக்கம் அளித்த அப்படத்தின் இயக்குநர் சுசீந்திரன் படப்பிடிப்பில் உபயோகிக்கப்பட்ட பாம்பானது பிளாஸ்டிக் பாம்பு என்றும் பாம்பு கிராபிக்ஸ் முறையில் நிஜ பாம்பாக சித்தரிக்கப்பட்டுள்ளது என்றும் விளக்கம் அளித்தார்.

> பிக்பாஸ் மூலம் பிரபலமானவர் நடிகர் தர்ஷன். இவரும் நடிகை ஷனம் செட்டியும் காதலித்து வந்த நிலையில், தர்ஷன் சினிமாவில் பிரபலமடைய நடிகை ஷனம் உதவியதாகச் சொல்லப்பட்டது. பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்தபோது, பல நேர்காணல்கள் மூலமாக தர்ஷனை விமர்சனம் செய்து வந்த ஷனம் இந்தாண்டு தர்ஷனுக்கும் தனக்கும் நிச்சயம் ஆகிவிட்ட நிலையில் தர்ஷன் தன்னை திருமணம் செய்ய மறுப்பதாக கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் தர்ஷன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு செய்யப்பட்டது. அதன் மூலம் பிரபலமான ஷனம் இந்த வருடம் நடந்த பிக்பாஸில் என்ட்ரி கொடுத்து வெளியேறினார்.

> 2020 ஆம் ஆண்டு இறுதியில் சின்னத்திரை நடிகை சித்ரா தனியார் ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரம் சின்னத்திரையுலகில் அதிர்வலையை உண்டாக்கியது. இந்தச் சம்பவத்தில் சித்ராவுடன் நிச்சயம் செய்யப்பட்ட ஹேம்நாத் கைது செய்யப்பட்ட நிலையில் வழக்கு தொடர்பான விசாரணை நடந்து வருகிறது.

> இளையராஜா சென்னை பிரசாத் ஸ்டியோவில் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக இசை தொடர்பான பணிகளை செய்து வந்த நிலையில், பிரசாத் ஸ்டியோ நிர்வாகம் அவரை அங்கிருந்து வெளியேற்றியது. இதனையடுத்து நீதிமன்றத்தில் தனக்குரித்தான பொருட்களை எடுக்கவும், அங்கு ஒரு நாள் தியானம் செய்யவும் நீதிமன்றத்தில் இளையராஜா அனுமதி கோரிய நிலையில் அதற்கு நீதிமன்றம் அனுமதியளித்தது. அதன் படி நேற்று (டிச.28/2020) காலை 9 மணிக்கு இளையராஜா ஸ்டியோடிக்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அவருக்கு பதிலாக, அவரது வழக்கறிஞர்கள் வந்தனர். அவர்கள் இளையராஜா அறை தகர்க்கப்பட்டது என்றும் அவரது விருதுகள் தனி அறையில் வைக்கப்பட்டிருந்தது எனவும் கூறினர். அதனைத்தொடர்ந்து இன்று (29/2020) அவரது அறையின் 7 பீரோக்களில் இருந்த 160 பொருட்கள் இளையராஜாவிடம் ஒப்படைக்கப்பட்டது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com