சவுண்ட் டிசைனர் ரசூல்பூக்குட்டி இப்போது நடிகராக புதிய அவதாரம் எடுத்துள்ளார்.
கடந்த 2009 ஆண்டு ஆஸ்கர் விருது வாங்கியவர் ரசூல்பூக்குட்டி. சவுண்ட் டிசைனரான இவர் விரைவில் நடிகராக அறிமுகமாக இருக்கிறார். அவர் நடிக்க உள்ள படத்திற்கு "ஒரு கதை சொல்லட்டுமா?" என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மலையாளத்தில் 'தி சவுண்ட் ஸ்டோரி இன் மலையாளம்' என்ற பெயரிடப்பட்டுள்ளது. இது தவிர ஹிந்தி மற்றும் தெலுங்கில் இந்தப் படம் உருவாகிறது. இதனை ப்ரசாத் பிரபாகர் இயக்க இருக்கிறார். சத்தத்தின் கதை என்பதால் உண்மையான சத்தத்தை கொண்டு வர வேண்டும் இல்லையா? ஆகவே திரிசூர் பூரணம் விழாவில் கூடிய மக்கள் சத்தத்தை நேரடியாக சென்று ரசூல் ஒலிப்பதிவு செய்திருக்கிறார்.
இது குறித்து பேசிய இயக்குநர் ப்ரசாத் பிரபாகர், சொந்த முயற்சியின் மூலம் ரசூல் இதைச் செய்திருக்கிறார். இந்த விழாவுக்கு ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சம் பேர் வருகின்றனர். மொத்தம் ஏழு நாட்கள் இந்த விழா நடைபெறும். பல்வேறு விதமான சப்தங்களை ரசூல் கிரக்கித்திருக்கிறார். நாங்கள் இதற்காக 16 முதல் 22 கேமிராக்களை பயன்படுத்தியுள்ளோம். இந்த விழா ஒரு பெரிய மைதானத்தில் நடைபெறுகிறது. 150 தொழில்நுட்ப கலைஞர்களை கொண்டு முழு ஒலியையும் பதிவு செய்துள்ளோம். திருவிழா மைதானம் முழுக்க பலரை நிறுத்தி வைத்தோம். அவர்கள் கவனித்து எங்களுக்கு தகவல் தருவார்கள். படத்தில் 140 ட்ராக்ஸ் இருக்கிறது. இரண்டு பாடல்களை ரசூல் இசையமைத்திருக்கிறார். வைரமுத்து பாடல்களை எழுதியிருக்கிறார். இந்தப் படத்தின் ஹைலைட்ஸ் விஷூவல்தான் என இயக்குநர் தகவல் தந்திருக்கிறார்.