பிரபாஸ் பட இயக்குநர் இடையே மோதல்..! கல்கி 2 படத்திலிருந்தும் விலகும் தீபிகா படுகோனே?
தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவின் ’அர்ஜுன் ரெட்டி’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சந்தீப் ரெட்டி வங்கா. அதன் பிறகு ஹிந்தியில் ’கபீர் சிங்’, ’அனிமல்’ என அடுத்தடுத்த திரைப்படங்கள் மூலம் ஹிட் கொடுத்த வாங்கா, இந்திய திரையுலகின் முக்கிய இயக்குநராக வளர்ந்துள்ளார்.
சந்தீப் ரெட்டி வங்காவின் திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றாலும், பிற்போக்கான காட்சிகளால் விமர்சன ரீதியாகவும் கருத்து ரீதியாகவும் சர்ச்சைகளையும் ஏற்படுத்தியது. இத்தகைய படங்கள் தொடர்பான நேர்காணல்களில் சந்தீப் ரெட்டி வங்காவின் பதில்களும் பல சர்ச்சைகளை கிளப்பும்.
இந்நிலையில் தற்போது நடிகர் பிரபாஸை வைத்து ஸ்பிரிட் என்ற திரைப்படத்தை இயக்கிவருகிறார் சந்தீப் ரெட்டி வங்கா. இப்படம் அடுத்தாண்டு திரைக்குவரும் என கூறப்படும் நிலையில், இந்தப்படத்தால் இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்காவிற்கும், நடிகை தீபிகா படுகோனேவிற்கும் மோதல் வெடித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
சந்தீப் ரெட்டி வங்கா vs தீபிகா படுகோனே.. என்ன மோதல்?
நடிகர் பிரபாஸை வைத்து இயக்கிவரும் ஸ்பிரிட் திரைப்படத்தில் முதலில் கதாநாயகியாக நடிக்க தீபிகா படுகோனேவிடம் தான் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக சொல்லப்பட்டது. அவர் நடிக்க சம்மதித்து பின் சில காரணங்களுக்காக படத்திலிருந்து விலகியதாகவும் சர்ச்சை எழுந்தது. தற்போது அவருக்குப் பதிலாக 'அனிமல்' பட நடிகை திருப்தி டிம்ரி நாயகியாக நடித்துவருகிறார்.
ஏன் தீபிகா படுகோனே பிரபாஸின் ஸ்பிரிட் படத்திலிருந்து விலகினார் என்ற குழப்பம் நீடித்த நிலையில், சந்தீப் ரெட்டி வங்காவின் ஒரு பதிவும், தீபிகா படுகோனேவின் நேர்காணல் பேச்சும் பிரச்சனையை பெரிதாக்கியுள்ளன.
கடந்த மே மாதம் சமூக வலைதளத்தில் பதிவொன்றை பதிவிட்ட வங்கா, “நான் ஒரு நடிகருக்கு கதை சொல்லும்போது, 100% நம்பிக்கையுடன் தான் சொல்கிறேன். அந்த கதையை வெளியில் சொல்ல கூடாது என ஒரு சொல்லப்படாத உடன்படிக்கை எங்களுக்குள் இருக்கிறது. ஆனால் இதை வெளியில் கூறி நீங்கள் யார் என்பதை காட்டிவிட்டீர்கள். ஒரு இளம் நடிகரை கீழே தள்ளி, என் கதையை வெளியில் சொல்வது என்பது தான் உங்களது பெண்ணியமா? ஒரு இயக்குநராக என்னுடைய படைப்பிற்கு பின்னால் பல வருட கடின உழைப்பை போட்டிருக்கிறேன். திரைப்படங்களை எடுப்பது மட்டும்தான் எனக்கு எல்லாமே. அது உங்களுக்கு புரியவில்லை. புரியாது. எப்போதும் புரியாது. இன்னொன்றை செய்யுங்கள், அடுத்த முறை முழு கதையையும் சொல்லுங்கள். ஏனென்றால் அது எனக்கு ஒரு சிறிய வித்தியாசத்தைக் கூட ஏற்படுத்தாது” என காட்டமாக அந்த பதிவை வெளியிட்டிருந்தார்.
தீபிகா படுகோனே வெளியேறி வேறு ஒரு நடிகை வந்ததால், அவர் தீபிகா படுகோன் பற்றித்தான் இப்படி குறிப்பிட்டுள்ளார் என்று சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இயக்குநர் ஒருவருடனான பிரச்னை குறித்து சமீபத்திய பேட்டியில் பேசிய தீபிகா, “சமீபத்தில் இயக்குநர் ஒருவர் ஒரு படத்திற்காக என்னை அணுகினார். படைப்பாக அது எனக்கு பிடித்தது. ஆனால் பணம் பற்றி வரும் போது, நான் இவ்வளவு சம்பளம் வாங்குகிறேன் எனக் கூறினேன். எங்களால் இவ்வளவு சம்பளம் கொடுக்க முடியாது, ஏனென்றால் எங்கள் ஹீரோவுக்கு ஒரு பெரிய தொகை கொடுக்க வேண்டும் என அவர் கூறினார். சரி நீங்கள் சென்றுவாருங்கள் எனக் கூறிவிட்டேன்.
ஏனென்றால் என்னுடைய மதிப்பும், என் வெற்றிகளின் அளவும் எனக்கு தெரியும். மேலும் அந்த ஹீரோவின் படங்கள், என் படங்கள் போல வெற்றியடையவில்லை எனவும் எனக்கு தெரியும். எனவே அந்தப் படத்திற்கு நான் நோ சொன்னேன். ஏனெனில் சமமான பங்களிப்பை கொடுக்கும் இருவருக்கு சரியான அளவில் சம்பளம் அளிக்கப்படவில்லை என்ற சூழலில் பணியாற்ற எனக்கு விருப்பம் இல்லை." எனக் கூறினார்.
ஸ்பிரிட் படத்திலிருந்து வெளியேறியது பற்றியும், இயக்குநர் சந்தீப் மற்றும் நடிகர் பிரபாஸை தான் இந்த பதிலில் தீபிகா குறிப்பிட்டுள்ளார் என பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.
கல்கி 2 படத்திலிருந்து விலகலா?
இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா மற்றும் தீபிகா படுகோனே மோதலுக்கான காரணமாக புதிய காரணத்தையும் சில அறிக்கைகள் விவரிக்கின்றன.
சமீபத்திய அறிக்கைகளின் படி, சமீபத்தில் குழந்தை பெற்றுக்கொண்ட தீபிகா படுகோனே தன்னுடைய வேலை நேரத்தை 6 மணி நேரத்திற்கும் குறைவாக குறைத்து கொள்ளவும், குறிப்பிட்ட நாட்களுக்கு மேல் படப்பிடிப்பு சென்றால் நிர்ணயிக்கப்பட்ட சம்பளத்தொகையை விட அதிகமாக தரவேண்டும் என கேட்டுக்கொண்டதாகவும், அதனால் இயக்குநருக்கும் தீபிகா படுகோனேவிற்கும் மோதல் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த மோதல் தொடர்ந்த நிலையில், தற்போது கல்கி 2 படத்திலிருந்தும் தீபிகா படுகோனேவை விலக்க படக்குழு முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தாய்மைக்குப் பிறகு "குறைவான வேலை நேரம்" வேண்டும் என்ற தீபிகாவின் கோரிக்கை "படப்பிடிப்புப் பணிகளில் சிக்கலை" ஏற்படுத்துவதால், கல்கி 2 படத்திலிருந்தும் அவரை நீக்குவது குறித்து தற்போது பரிசீலித்து வருவதாகவும் சமீபத்திய அறிக்கைகள் கூறுகின்றன. இருப்பினும் இந்தவிவகாரம் சார்ந்து தீபிகா படுகோனேவோ அல்லது தயாரிப்பாளர் தரப்பிலோ இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடவில்லை.