நீங்கதான் சூப்பர் ஜோடி: ஹீரோவின் முன்னாள் மனைவியை டென்ஷனாக்கிய ரசிகர்கள்!
‘பவன் கல்யாணுக்கு நீங்கள்தான் சரியான ஜோடி. நீங்கள் மீண்டும் இணைந்து வாழ வேண்டும்’ என்று பவன் கல்யாணின் முன்னாள் மனைவியை, ரசிகர்கள் டென்ஷன் ஆக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தெலுங்கில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் பவன் கல்யாண். இவர் முதலில் நந்தினி என்பவரை திருமணம் செய்து பிரிந்தார். பிறகு நடிகை ரேணு தேசாயை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு அகிரா, ஆத்யா என்ற இரண்டு குழந்தைகள் உள்ளன. கடந்த 2012-ம் ஆண்டில் இருவரும் பிரிந்துவிட்டனர். இப்போது புனேவில் குழந்தைகளுடன் வசித்து வருகிறார் ரேணு தேசாய். இதையடுத்து அன்னா லெஸ்னிவா என்பவரை பவன் கல்யாண் திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் சிலர், கருத்துவேறுபாடுகளை மறந்து இருவரும் மீண்டும் இணைய வேண்டும் என்று கூறியிருந்தனர்.
‘சில ஜோடிகளை மறக்கவே முடியாது. அதில் ஒன்று உங்கள் ஜோடி. பவன் கல்யாணுக்கு நீங்கள்தான் சரியான ஜோடி. நீங்கள் எதற்காக பவனை பிரிந்தீர்கள் என்று தெரியாது. இருந்தாலும் மகிழ்ச்சியாக இருங்கள்’ என்று ரசிகர் ஒருவர் கூறியிருந்தார். இதே போல இன்னும் பலர் இது தொடர்பாக தங்கள் கருத்தை தெரிவித்திருந்தனர்.
இது பெரும் விவாதமாக ஆவதை அறிந்த ரேணு தேசாய், ‘பவன் கல்யாண், அன்னாவை திருமணம் செய்திருக்கிறார். அவர்களுக்கு அழகான பெண் குழந்தை இருக்கிறது. இப்போது அன்னா மட்டுமே அவர் மனைவி. என் குழந்தைகளுக்கு அவர்தான் அப்பா. ஆனால், நாங்கள் நல்ல நண்பர்களாக இருக்கிறோம். இனி நாங்கள் கணவன் மனைவியாக வாழ முடியாது. இதை ரசிகர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்’ என்று விளக்கமளித்தார். இதையடுத்து ரசிகர்கள் அந்த பிரச்னையை கைவிட்டுள்ளனர்.