அரசியல் நையாண்டி; விடாப்பிடி கொள்கை; ’திரையுலகை ஆண்ட மணிவண்ணன் நினைவுதினம்..!’
இயக்குநரும் நடிகரும் இடதுசாரி சிந்தனையாளருமான மணிவண்ணனின் நினைவு தினம் இன்று.
கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர் மணிவண்ணன். 70’களின் இறுதியில் சென்னையில் சினிமா வாய்ப்பு தேடிய மணிவண்ணனுக்கு இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவியாளராக பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது. பாரதிராஜா இயக்கத்தில் அதிரடி வெற்றி பெற்ற அலைகள் ஓய்வதில்லை படத்தின் திரைக்கதையினை எழுதியவர் மணிவண்ணன். தொடர்ந்து பாரதிராஜா இயக்கிய படங்களில் பணியாற்றி வந்த அவர் “கோபுரங்கள் சாய்வதில்லை” என்ற திரைப்படத்தின் மூலம் 1982’ஆம் ஆண்டு இயக்குநராக அறிமுகமானார்.
தனது திரைவாழ்வில் ‘முதல் வசந்தம்’, ‘சின்னதம்பி பெரிய தம்பி’, ‘ஜல்லிக்கட்டு’ என 40 திரைப்படங்களை இயக்கினார் அவர்.
இவரது படைப்புகளில் என்றென்றும் நினைவுகூறத்தக்க ஒன்றாக “அமைதிப் படை” திரைப்படம் அமைந்தது. இப்படம் 1994’ல் வெளியானது. இப்படத்தில் வரும் அமாவாசை கதாபாத்திரம் ரொம்பவே பிரபலம். அமாவாசை எப்படி நாகராஜ சோழன் எம்.ஏ.,எம்.எல்.ஏ-வாக உருவானார் என்ற அழுத்தமான அரசியல் நையாண்டி சினிமாதான் இந்த அமைதிப்படை.
2013’ல் அவர் இயக்கிய கடைசி திரைப்படத்திற்கும் ‘நாகராஜ சோழன் எம்.ஏ.,எம்.எல்.ஏ’ என பெயரிட்டிருந்தார். இப்போதும் கூட சமூக வலைதளங்களில் ‘அமைதிப்படை’ திரைப்படம் குறித்த விவாதங்கள் அவ்வப்போது எழுகின்றன.
இயக்குநராக மட்டுமல்லாமல் நடிகராகவும் அழுத்தமான தடத்தினை தமிழ் சினிமாவில் பதித்தவர் மணிவண்ணன். 400’க்கும் அதிகமான திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். திரைப்படங்களில் இவர் பேசிய முற்போக்கு வசனங்கள் பலவும் மீம்களாக தற்போது உலவி வருகின்றன. 1986’ஆம் ஆண்டு மணிவண்ணன் இயக்கத்தில் “பாலைவன ரோஜாக்கள்”என்ற திரைப்படம் வெளியானது. வர்தா என்ற மலையாளா திரைப்படத்தின் ரீமேக்தான் இந்த “பாலைவன ரோஜாக்கள்”.
இப்படத்தில் சத்யராஜ், பிரபு, லக்ஷ்மி, நளினி, ஜனகராஜ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படத்தில் வரும் “காதல் என்பது பொது
உடைமை, கஷ்டம் மட்டும்தானே தனி உடைமை” என்ற பாடல் பிரபலம். இப்படத்திற்கு திரைக்கதை எழுதியவர் தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி. நடிகர் சத்யராஜும் மணிவண்ணனும் நெருங்கிய நண்பர்கள். இருவரையும் நெருக்கமாக அணைத்துக் கொண்டது கடவுள் மறுப்புக் கொள்கை தான் என்று சொல்ல வேண்டும்.
துவக்கக் காலத்தில் திராவிட முன்னேற்ற கழகத்தின் மீது தீவிர பற்று கொண்டிருந்தார் மணிவண்ணன்., பிறகு வைகோ மதிமுகவை துவங்கிய போது அவருக்கு ஆதரவளித்தார். தீவிர கடவுள் மறுப்பாளர். முற்போக்கு சிந்தனையாளர் மற்றும் இடதுசாரியாக பொதுவாழ்வில் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர் மணிவண்ணன். அடையாள படுத்திக் கொண்டதோடு நில்லாமல் தன் கொள்கைப்படியே வாழ்ந்தும் முடிந்தார்.
ஈழப்போர் உச்சத்தில் இருந்தபோது அங்குள்ள தமிழர்களுக்கு ஆதரவாக அரசியல் மேடைகளில் முழங்கினார். முள்ளிவாய்க்கால் இறுதிப் போருக்கு பிறகு நாம் தமிழர் கட்சியின் குரலாக ஒலித்தார்.
இப்படியாக கலை மற்றும் அரசியல் வாழ்வில் தனது சீரிய பங்களிப்புகளைக் கொடுத்த மணிவண்ணன்., 2013’ஆம் ஆண்டு இதே நாளில் உயிரிழந்தார்.