ஓடிடி-க்கு 'நோ'... திரையரங்கு வெளியீட்டில் தீவிரம் காட்டும் அனில் அம்பானி நிறுவனம்

ஓடிடி-க்கு 'நோ'... திரையரங்கு வெளியீட்டில் தீவிரம் காட்டும் அனில் அம்பானி நிறுவனம்
ஓடிடி-க்கு 'நோ'... திரையரங்கு வெளியீட்டில் தீவிரம் காட்டும் அனில் அம்பானி நிறுவனம்

அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகியுள்ள இரண்டு இந்தி திரைப்படங்கள், தியேட்டர்கள் திறக்கப்படும் பட்சத்தில் அடுத்த மூன்று மாதங்களில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் மிகப் பெரிய திரைப்பட ஸ்டுடியோக்களில் ஒன்றான ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம், ஹாலிவுட் இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்குடன் இணைந்து இந்தி திரையுலகில் பல திரைப்படங்களை தயாரித்து வருகிறது. பல முக்கிய, எதிர்பார்ப்புக்குரிய, பெரிய நடிகர்களின் திரைப்படங்களை அடுத்தடுத்து ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. கொரோனா லாக்டவுன் காரணமாக தியேட்டர்கள் மூடப்பட, திரைக்கு வரத் தயாராக இருந்த இந்த நிறுவனம் தயாரித்த படங்கள் வெளியாகாமலே இருந்தன.

இந்த நிலையில்தான் ஆகஸ்ட் மாதத்தில் தியேட்டர்கள் திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதையடுத்து, "ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் அடுத்த மூன்று மாதங்களில் இரண்டு இந்தி மொழி திரைப்படங்களை திரையரங்குகளில் வெளியிடும்" என்று அந்நிறுவன சிஇஓ ஷிபாசிஷ் சர்க்கார் தெரிவித்தார். 1983 உலகக் கோப்பை வென்றதை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள '83' மற்றும் அக்ஷய் குமார், ரோஹித் ஷெட்டி நடிப்பில் உருவாகியுள்ள 'சூரியவன்ஷி' ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதுதொடர்பாக பேட்டியளித்துள்ள சர்க்கார், "கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளாக படங்கள் வெளியாவது தடைபட்டுள்ளது. ஓடிடி டிஜிட்டல் தளங்களில் இருந்து நல்ல ஆஃபர்கள் வந்தன. ஆனால், படத்தின் இயக்குநர்களும் நடிகர்களும் பெரிய திரை அனுபவத்தை மக்களுக்கு கொடுக்க வேண்டும் என ஆர்வம் தெரிவித்ததால் தியேட்டர் வெளியீட்டை எதிர்பார்த்துள்ளோம்.

கொரோனா காலக்கட்டத்தில் ரிலையன்ஸ் ஸ்ட்ரீமிங் தளங்களில் நான்கு படங்களை வெளியிட்டிருந்தாலும், திரைத்துறையின் வருமானத்தில் குறைந்தது 60%, தியேட்டர்கள் மூலமே கிடைக்கின்றன. இதையடுத்தே இந்த முடிவுகளுக்கு வந்தோம்.

கொரோனா லாக்டவுன் காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டதால் நெட்ஃபிளிக்ஸ், அமேசான் போன்ற தளங்களில் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதன்காரணமாக இந்திய திரையுலகம் மலிவான ஆஃபர்களை பெற்றுக்கொண்டு ஸ்ட்ரீமிங் சந்தையை நோக்கி தள்ளப்படுகின்றன. இந்தியாவின் ஸ்ட்ரீமிங் சந்தை 2019 முதல் 2024 வரை 31% வளர்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வருவாய் 2.7 பில்லியன் டாலர்களை எட்டும் என்றும் நம்பப்படுகிறது.

அதேநேரத்தில் ஸ்ட்ரீமிங் தளங்களால் திரைத்துறை வருவாய் 2.6% சுருங்கிவிடும். இந்த சிக்கலில் இருந்து திரைத்துறையை தியேட்டர்களே காப்பாற்றும். திரைப்பட அரங்குகள் ஆண்டு இறுதிக்குள் மீண்டும் திறக்கப்படும். அப்படி நடந்தால் கொரோனா காரணமாக பல மாதங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள திரைத்துறையை மீண்டும் உயிர்ப்பிக்க அது உதவும்" என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com