ஆளுநரே! மன்றாடி கேட்கிறோம்; பேரறிவாளனை விடுதலை செய்யுங்கள்: பாரதிராஜா

ஆளுநரே! மன்றாடி கேட்கிறோம்; பேரறிவாளனை விடுதலை செய்யுங்கள்: பாரதிராஜா
ஆளுநரே! மன்றாடி கேட்கிறோம்; பேரறிவாளனை விடுதலை செய்யுங்கள்: பாரதிராஜா

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 30 ஆண்டுகளாக சிறையில் இருந்துவரும் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி,ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ்,ஜெயக்குமார் ஆகிய ஏழு பேரையும் விடுதலை செய்யக்கோரி தமிழ் சினிமாத்துறையச் சேர்ந்த நடிகை ரோகிணி, பாரதிராஜா, வெற்றிமாறன், பா.ரஞ்சித், கார்த்திக் சுப்புராஜ், விஜய் சேதுபதி, பிரகாஷ் ராஜ், ராம், விஜய் ஆண்டனி, மாரி செல்வராஜ், ராஜூ முருகன், அமீர், சத்யராஜ், நவீன் ஆகியோர் ’161 ரிலீஸ் பேரறிவாளன்’ பெயரில் பாடலை தயாரித்து நேற்று மாலை வெளியிட்டார்கள்.

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழுபேரை தமிழக அரசே விடுதலை செய்துகொள்ளலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் இதுவரை ஆளுநர் விடுதலை செய்யாமல் இருக்கிறார். கடந்த இரண்டு வருடங்களாக அமைதி காத்துவரும் ஆளுநருக்கு 161 சட்டப்பிரிவை பயன்படுத்தி விடுதலை செய்ய வேண்டும் என தமிழகக் கட்சிகளின் தலைவர்கள் கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை ஆளுநர். உடனடியாக முடிவு எடுக்க வேண்டும் என ஆளுநரை நிர்பந்திக்க முடியாது என நீதிமன்றங்கள் தெரிவித்துவிட்டன. இந்நிலையில், இன்று ரிலீஸ் பேரறிவாளன் என்ற பெயரில் ட்விட்டரில் ஹேஷ்டேக் ட்ரெண்டிங் ஆகி வருவதால் இயக்குநர் பாரதிராஜா, தனது ட்விட்டர் பக்கத்தில்,

“எழுவர் விடுதலையில் உச்சநீதிமன்றம் தடையாக இருக்க விரும்பவில்லை. ஆளுநர் முடிவெடுத்து விடுவிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் தன் கருத்தை அறிவித்தும் தமிழக அரசு அனைத்துக் கட்சித் தலைவர்கள், தமிழக மக்கள் கோரிக்கை வைத்தும் விடுவிப்பதில் காலதாமதம் செய்வது வருத்தத்திற்குரியது. தம்பி பேரறிவாளன் விடுதலைக்காக ஒரு தாய் 30 வருடங்கள் சட்டப்போராட்டம் நடத்தி ஒரு விடியற்காலை பொழுதுக்காக கண்ணீர் மல்க காத்திருப்பது வேதனைக்குரியது. மதிப்பிற்குரிய ஆளுநர் மற்றும் ஆட்சியாளர்களே மன்றாடி கேட்கிறோம். மனது வையுங்கள். உடனே விடுதலை தாருங்கள்” என்று கோரிக்கை வைத்துள்ளார்.

அதேபோல நடிகர் ஜி.வி பிரகாஷ், ”போதும் இந்த நீண்ட நெடிய சிறைவாசம், குற்றமிழைக்காமலே 30 ஆண்டுகால மிக கொடுமையான சிறைவாசம்..போதும்...என தமிழினமே ஒன்றுபட்டு சொல்கிறோம். பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்ய ஆளுநர் அவர்கள் ஆவணம் செய்ய வேண்டும்” என்று கோரிக்கை வைத்துள்ளார்.

இயக்குநர் நவீன் அவரது ட்விட்டர் பக்கத்தில், ”ஆறு மாசம் இளயதளபதியின் #Master படம் ரிலீஸ் ஆகலனு கவல படறோம். ஒரு ரசிகனா படம் எப்ப ரிலீசாகும்னு நானும் காத்திருக்கேன். 30 வருசம் ஒரு நிரபராதி ஜெயில்ல தன் வாழ்க்கைய தொழச்சிட்டு இருக்கார். அவர் ரிலீசாக இன்னைகு ஒரு நாள் குரல் கொடுப்போம் சகாக்களே” என்று அழுத்தமுடன் பதிவு செய்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com