ஓடிடி திரைப் பார்வை : சத்யஜித் ரே கதைகளின் நவீன திரைவடிவம் ‘ரே’
நாளுக்கு நாள் ஓடிடி தளங்கள் புதுப்புது அனுபவங்களை பார்வையாளர்களுக்கு கொடுத்துக் கொண்டிருக்கின்றன. சமீபத்தில் நெட்பிளிக்ஸில் வெளியாகி இருக்கும் ஒரு வெப் சீரிஸ் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அதற்கு காரணம் சத்யஜித்ரே. ஆம் ஒரு காலத்தில் இந்திய சினிமாவின் ஒற்றை விண்மீனாக மின்னியவர் ரே. இப்போதும் அப்படியே. ரே’வின் சிறுகதைகளை தற்கால வாழ்வியல் பொறுத்தங்களோடு வடிவமைத்து திரைக்கதை எழுதி வெப்சீரிஸாக உருவாக்கி இருக்கிறார்கள்.
நான்கு எபிஸோடுகளைக் கொண்டது இந்த ஆந்தாலஜி வெப் சீரிஸ். இதில் ஃபர்கெட் மீ ஆர் நாட் (Forget me or not), மற்றும் பாஹ்ருபியா (Bahrupiya ) என இரண்டு எபிஸோடுகளை இயக்கி இருக்கிறார் ஸ்ரீஜித் முகர்ஜி. ஹங்காமா ஹாய் க்யோன் பார்பா (Hungama Hai Kyon Barpa) என்ற எபிஸோடை அபிஷேக் சௌபேவும், ஸ்பாட்லைட் (Spotlight) என்ற எபிஸோடை வாசன் பாலாவும் இயக்கி இருக்கின்றனர்.
மனோஜ் பாஜ்பாய், ஹர்ஷவர்தன் கபூர், கே.கே.மேனன், பிடிதா பாக், ஷ்வேதா பாஸு பிரசாத், அனிந்திதா போஸ், கஜராஜ் ராவ் என இந்தி மற்றும் பெங்கால் சினிமாவைச் சேர்ந்த பெரிய நடிகர் பட்டாளமே இந்த சீரிஸில் நடித்திருக்கிறது.
Forget Me or Not:
முதல் எபிஸோடான Forget Me or Not ஒரு சைக்கலாஜிகல் த்ரில்லர். மனித கம்ப்யூட்டர் என பெயர் வாங்கிய ஒரு இளம் தொழிலதிபர் தன் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தை மறந்து போகிறார். அவரிடம் மதுபானக் கூடத்தில் தாமாக வந்து அறிமுகமாகும் ஒரு பெண் ஒரு சம்பவத்தை நினைவுபடுத்த முயல்கிறார். ஆனால் அவரால் அதனை நினைவுக்கு கொண்டுவர இயலவில்லை. இந்த சின்ன விசயம் எப்படி இப்ஸித் எனும் அந்த தொழிலதிபரின் வாழ்வை உளவியல் ரீதியாக தாக்கி முடக்கிப் போட்டது என்பதே திரைக்கதை. இப்ஸித்தாக நடித்திருக்கும் அலி பாசல் சிறப்பாக நடித்திருக்கிறார். ஆனால் ஒரு மணி நேரம் ஓடக் கூடிய இக்கதையில் 95 சதவிகித காட்சிகளை அவரே அக்கிரமித்திருப்பது பார்வையாளர்களுக்கு சலிப்பை ஏற்படுத்திவிடுகிறது. ஆனாலும் அதனை இயக்குநர் ஸ்ரீஜித் முகர்ஜி சிறப்பாக பேலன்ஸ் செய்திருக்கிறார்.
பாஹ்ருபியா:
ஸ்ரீஜித் முகர்ஜி இயக்கியிருக்கும் மற்றுமொரு எபிஸோட் பாஹ்ருபியா (Bahrupiya). Forget me or not போல இதுவும் ஒரு வகையான ஃபேன்டஸி கதை தான். சராசரி நடுத்தர வாழ்க்கை நடத்தும் மனிதரான இந்திரஷிஷ் ஷாவிற்கு பாட்டியின் ரகசிய புத்தகமொன்று கிடைக்கிறது. ஒப்பற்ற ஒப்பனைக் குறிப்புகள் அடங்கிய அந்த புத்தகத்தின் குறிப்புகளை ஷா எப்படி பயன்படுத்தி கொண்டார் என்பது திரைக்கதை. கே.கே.மேனன் ஏற்று நடித்திருக்கும் இந்த கதாபாத்திரம் கொஞ்சம் வித்யாசமானது. 18+ காட்சிகள் கொண்ட இந்த எபிஸோடை ஒரு பிலாஸபிகல் டச்சோடு அணுகி இருக்கிறார் இயக்குநர். நடிகைக்கு மேக் அப் போடும் ஷாவின் இடுப்பில் ஒரு திருமண மோதிரம் இருக்கிறது. அதனைப் பார்த்து நடிகை சொல்கிறாள் “இந்த்ரூ நீ என்கூட இருக்கனும்னா எப்பவேணாம் வரலாம். ஆனால் இந்த மோதிரம், கல்யாணம் இதெல்லாம் வேணாம்.” அதன் பிறகிலான எதிர்வினை முகபாவங்களில் கே.கே.மேனனின் நடிப்பு அட்டகாசம். மாறுபட்ட வாழ்வியல் அணுகுமுறை குறித்த சினிமாக்களை விரும்புகிறவர்களுக்கு இந்த எபிஸோடு பிடிக்கும்.
ஹங்காமா ஹாய் க்யோன் பார்பா:
முதல் இரண்டையும் போல அபிஷேக் சௌபே இயக்கி இருக்கும் ஹங்காமா ஹாய் க்யோன் பார்பா (Hungama Hai Kyon Barpa) என்ற எபிஸோடும் தனிக் கவனம் பெறுகிறது. ஒரு ரயில் பயணத்தில் சந்தித்துக் கொள்ளும் வெற்றியாளர்கள் தாங்கள் எப்போதோ செய்த சிறு தவறு குறித்த விசயங்களை பகிர்ந்து கொள்ளும் அழகான கதையாக இது இருக்கிறது. மனோஜ் பாஜ்பாய், ராகுபீர் யாதவ் உள்ளிட்டோர் இந்த எபிஸோடில் நடித்திருக்கின்றனர். திரை உருவாக்கம் ஒளிப்பதிவு என சிறப்பாகவே வந்திருக்கிறது இந்த எபிஸோட்.
ஸ்பாட்லைட் எபிஸோடு:
வாசன் பாலா இயக்கி இருக்கும் ஸ்பாட்லைட் எபிஸோடு மற்றொரு வித்யாசமான ஜானரில் உருவாக்கப்பட்டிருக்கிறது. புகழ் பெற்ற நடிகர் விக்ரம் அரோரா தொழில் நிமித்தமாக நட்சத்திர விடுதியில் தங்கவேண்டி இருக்கிறது. ஏற்கனவே பாடகி மடோனா ஒருமுறை தங்கிய அறையில் தங்க விரும்பும் அவருக்கு ஏமாற்றமே கிடைக்கிறது. அதே விடுதியில் தங்கி இருக்கும் பெண் சாமியாருக்கும் விக்ரமாக நடித்திருக்கும் ஹர்ஸ்வர்தன் கபூருக்கும் இடையிலான புகழ் வெளிச்ச ஏற்ற இறக்கங்கள் குறித்த எபிஸோடாக இது இருக்கிறது. அவசியம் பார்த்து ரசிக்க வேண்டிய கதை.
சத்யஜித்ரேவின் கதைகளுக்கு திரை வடிவம் கொடுத்திருக்கும் இந்த முயற்சி ரொம்பவே பாராட்ட வேண்டிய ஒன்று. அதுபோல சில தசாப்தங்களுக்கு முன்பே ரே எனும் அற்புத படைப்பாளி எத்தனை வித்யாசமான கதைகளை எழுதி இருக்கிறார் என்பதும் வியப்பைத் தருகிறது.