“விஷால் தலைமையிலான நிர்வாகத்தில் எல்லாம் பொய்” - ராதாரவி

“விஷால் தலைமையிலான நிர்வாகத்தில் எல்லாம் பொய்” - ராதாரவி
“விஷால் தலைமையிலான நிர்வாகத்தில் எல்லாம் பொய்” - ராதாரவி

விஷால் தலைமையிலான நிர்வாகத்தில் எல்லாம் பொய் என நடிகர் ராதாரவி தெரிவித்துள்ளார். 

நடிகர் சங்கத் தேர்தல் வரும் 23 ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது. இதில் நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும் பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியினரும் போட்டியிடுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இரு அணிகளும் தற்போது தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.

இதனிடையே நடிகர் சங்கத்தில் உள்ள 61 தொழில்முறை உறுப்பினர்கள், தொழில்முறை அல்லாத உறுப்பினர்களாக மாற்றப்பட்டுள்ளனர். இதுகுறித்து ஏற்கனவே பதிவாளரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

இதைத்தொடர்ந்து தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலை நிறுத்துமாறு தென்சென்னை மாவட்ட பதிவாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில், “44 தொழில்முறை உறுப்பினர்களை தொழில்முறை அல்லாத உறுப்பினர்களாக மாற்றியதாக பதிவாளரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. முழுமையான விசாரணை முடியும்வரையில் தேர்தலை நிறுத்தி வைக்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்த நடிகர் ராதாரவி, விஷால் தலைமையிலான நிர்வாகத்தில் எல்லாம் பொய் எனவும் சட்டம் தன் கடமையை செய்யும் எனவும் தெரிவித்தார். 

இதுகுறித்து கருத்து தெரிவித்த விஷால் அணியை சேர்ந்த பூச்சி முருகன், பதிவாளரை எதிரணியினர் தவறாக உபயோகப்படுத்துகின்றனர் எனவும் அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரது மீதும் வழக்கு தொடருவோம் எனவும் தெரிவித்தார். 

இதுகுறித்து சங்கரதாஸ் அணியை சேர்ந்த ஐசரி கணேஷ் கூறுகையில், தேர்தலை நிறுத்த பதிவாளர் உத்தரவிட்டதை பார்த்து அதிர்ச்சியடைந்தேன் எனவும் தேர்தல் நிறுத்தப்படுவதற்கு நாங்கள்தான் காரணம் எனக்கூறுவது கண்டிக்கத்தக்கது எனவும் குறிப்பிட்டார். 

இதுகுறித்து பாக்யராஜ் கூறுகையில், பதிவாளர் உத்தரவுக்கும் எங்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை எனவும் எதிரணியினர் மீது குற்றம் சொல்வது வாடிக்கையான ஒன்றுதான் எனவும் தெரிவித்தார். மேலும் எனக்கு பின்னால் நடிக்க வந்தவர்களுக்கு நாடக நடிகர்களை பற்றி என்ன தெரியும் என கேள்வி எழுப்பியுள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com