ஹீரோயின் சென்ற கார் மோதி ஒருவர் படுகாயம்: நடிகை விளக்கம்!
நடிகை ராஷ்மி கவுதம் சென்ற கார் மோதி ஒருவர் காயமடைந்தார். அந்த நேரத்தில் யாரும் உதவிக்கு வரவில்லை என்று தெரிவித்துள்ளார்.
சாந்தனு நடித்த ’கண்டேன்’, காமெடி நடிகர் ஜீவா நடித்த ‘மாப்பிள்ளை விநாயகர்’ உட்பட சில தமிழ் படங்களில் நடித்தவர் தெலுங்கு நடிகை, ராஷ்மி கவுதம். இந்தி, கன்னட படங்களிலும் நடித்துள்ளார். இவர் இப்போது புதிதாக வெப் சீரிஸ் ஒன்றில் நடித்துவருகிறார். இதன் படப்பிடிப்பை முடித்துக்கொண்டு, காரில் ஞாயிற்றுக்கிழமை இரவு விசாகப்பட்டினம், கஞ்சுவாகா பகுதியில் உள்ள தனது வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார்.
அங்கம்புடி தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த போது சையத் அப்துல் என்பவர் சாலையை கடக்க முயன்றார். அப்போது கார் எதிர்பாராதவிதமாக அவர் மீது மோதியது. இதையடுத்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் சையத் அப்துலை மீட்டு, அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் தனியார் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதையடுத்து ராஷ்மி கவுதம் வேகமாக காரை ஓட்டி வந்ததால்தான் விபத்து ஏற்பட்டது என்றும் போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து,ராஷ்மியின் சொகுசு காரை பறிமுதல் செய்ததாகவும் செய்தி வெளியானது.
இந்நிலையில் இதை மறுத்துள்ளார் ராஷ்மி.
அவர் கூறும்போது, ‘தேசிய நெடுஞ்சாலையில் விளக்கு இல்லை. அப்போது சையத் அப்துல், வேகமாக ஓடி வந்து சாலையை கடக்க முயன் றார். அதனால் எதிர்பாராத விதமாக அவர் மீது கார் மோதி விட்டது. இதற்கு அவர் மட்டுமே காரணம். உடனடியாக ஆம்புலன்ஸூக்கும் போலீசு க்கும் தகவல் தெரிவித்தேன். பின்னர் நானும் கார் டிரைவருமே அவரை அரசு மருத்துவமனையில் சேர்த்தோம். இதுதான் நடந்தது. அது எனது காருமல்ல. வெப்சீரிஸை தயாரிக்கும் நிறுவனத்துக்கு சொந்தமானது. போலீசார் விசாரித்துவிட்டு கார் டிரைவர் எம்.ஏ.கவுதமை கைது செய்துள்ளனர்.
விபத்து நடந்த நேரத்தில் அங்கு கூடிய சிலர், நடந்துகொண்ட விதம் மோசமாக இருந்தது. சிலர் அங்கு வந்து செல்பியும் வீடியோவும் எடுப்பதிலேயே குறியாக இருந்தனர். சிலர் மட்டுமே உதவிக்கு வந்தனர்’’ என்றார்.