மாட்டுக்கறி அரசியலால் இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு அச்சுறுத்தல்! இன்று ரன்பீர்.. நாளை?

மாட்டுக்கறி அரசியலால் இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு அச்சுறுத்தல்! இன்று ரன்பீர்.. நாளை?
மாட்டுக்கறி அரசியலால் இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு அச்சுறுத்தல்! இன்று ரன்பீர்.. நாளை?

நடிகர் ரன்பீர்கபூர், ஆலியா பட் , அமிதாப் பச்சன், நாகார்ஜுனா எனப் பல முக்கிய  நடிகர்கள் நடித்துள்ள படம் 'பிரம்மாஸ்திரா' இன்று வெளியாகியுள்ளது. படம் வெற்றி பெறுவதற்காக இயக்குநர் அயன் முகர்ஜி, நடிகர் ரன்பீர் கபூர், ஆலியா பட் என மூவரும் மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைனியில் உள்ள  மகாகாலேஸ்வரர் கோயிலுக்குக் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை சென்றனர்.

இவர்கள் கோயிலுக்குச் சென்றவுடன், பஜ்ரங் தளம் அமைப்பினர் அவர்களுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்ட தொடங்கினர். அந்த போராட்டத்துக்குக்  காரணமாக அவர்கள் தெரிவித்தது, ‘’கடந்த 2011-ம் ஆண்டு நடிகர் ரன்பீர்கபூர் ‘ராக்ஸ்டார்’படத்தின் ப்ரோமோஷனின் போது, ’நான்  மாட்டிறைச்சிக்குப்  பெரிய ரசிகன்’  என்று கூறியிருந்தார் ரன்பீர் கபூர். இதனால் ரபீர் கபூர் கோயிலுக்கு வரக் கூடாது. அவர் கோயிலுக்குள் வந்தால் புனிதம் கெட்டுவிடும்  ’ என பஜ்ரங் தளம் அமைப்பினர் கூறியிருந்தனர்.

ஆனால் காவல்துறை தடியடி நடத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைக்க முயன்றனர். இருப்பினும் போராட்டம் ஒருபக்கம் தொடர்ந்ததால், காவல்துறை பாதுக்காப்புடன், நடிகர் ரன்பீர் கபூர் உள்ளிட மூவரும் கோயிலுக்குள் சென்று வந்தனர்.

சமீபத்தில் ஒரு பேட்டியில், ரன்பீர் கபூர் மனைவி ஆலியாவின் உடல் எடை குறித்த கருத்து தெரிவித்தபோது பல கண்டன குரல்கள் எழுத்தது. அதன் தொடர்ச்சியாக, தனது கருத்துக்கு ரன்பீர் மன்னிப்பு கோரினார். ரபீரின் Bodyshaming ஜோக்கை, பல வட இந்திய ஊடகங்கள் கண்டித்த போது, நாடு முழுவதும் Bodyshaming குறித்து ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டு இருப்பது குறித்து சின்ன நம்பிக்கை பிறந்தது.

தனிநபர்கள் போல அல்லாமல் பிரபலங்கள் பேசும் கருத்து சமூகத்தில் உடனடியாக பிரதிபலிக்கும் என்பதால், பிரபலங்களிடம் கொஞ்சம் கூடுதலாகவே  சமூகப் பொறுப்பு இருக்க வேண்டியது அவசியம்.

ரன்பீர் தவறு செய்த போது தலையில் குட்டியவர்கள் , ரன்பீருக்கு பஜ்ரங் தளம் அமைப்பினர் தெரிவித்த எதிர்ப்பு குறித்து மௌனம் காத்தது அதிர்ச்சியாக இருந்தது.

இந்தியாவின் பன்முகத்தன்மைக்காக வெளிநாடுகளில் இன்றளவும் இந்தியாவுக்கு என்ற ஒரு தனி மரியாதை இருந்துவருகிறது என்று நமக்கு தெரிந்ததை என்று உணர்ந்துகொள்ளப் போகிறோம்? நல்ல பண்பாடு என்பது மற்றவரின் உணவுப் பழக்கத்தை மதிப்பது தானே? இதை உணவு அரசியல் செய்வோர் உணர வேண்டும்.

நமது நாட்டில் மத அரசியல், சாதி அரசியல் தொடங்கி உணவு அரசியல் வரை நீள்கிறது. மாட்டிறைச்சி கடை நடத்துபவர்களையும் மற்றும் பிரபலங்களுக்கும் இப்படி அச்சுறுத்தும் கொடுக்கும் போது அது மக்களுக்கான நேரடி எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது.

உணவு அரசியல் பற்றிப் பேசும் போது அதன் தொடர்ச்சியாக மற்றொன்றை பேச வேண்டிய அவசியம் வருகிறது. சைவம் சாப்பிடுபவர்கள் எப்படி, அசைவம் சாப்பிடுபவர்களை குறைத்து மதிப்பிடும் எண்ணம் வருகிறதோ, சைவம் தான் எலைட் உணவு போல் உருவாக்கப்படுகிறதோ அதைப்போலத் தான் ‘மாட்டுக்கறி சாப்பிட்டால்தான் முற்போக்காளர்கள்’ என்று பேசுவதும், சைவம் சாப்பிடுபவர்களைக் கேலி செய்வதும் சில நேரங்களில் நிகழ்கிறது. 

அதுபோலவே, மாட்டிறைச்சிக்காக அச்சுறுத்துகிறார்கள் என்று நாம் எதிர்த்துப்பேசும் போது பன்றி, எலி, வெட்டுக்கிளி, குளவி, எறும்புகள் உண்ணும் மக்களை ஏளனம் செய்வதும் நிச்சயம் கண்டிக்கப்பட வேண்டியது. இதுவும் ஒருவகையான தீண்டாமை இல்லையா?

மனிதன் தன்னை தானே தக்கவைத்துக்கொள்ள என்னென்ன கிடைக்கிறதோ அவையெல்லாம் உண்டு தான் உயிர் வாழ கற்றுக்கொண்டான். அன்று பிழைப்பதற்காகக் கிடைப்பதை உண்டு வாழ்ந்து, வளர்ந்த மனித இனம் இன்று விருப்பத்திற்கேற்ப உண்டு வாழ உரிமை இல்லையா? இந்த நிதர்சனத்தையும் உணவை வைத்துச் செய்யும் அரசியல் குறித்து வெகுஜன மக்களிடம் புரிதல் இருக்க வேண்டிய அவசியம் உள்ளது. ரன்பீர்களுக்காக தற்போது குரல் கொடுக்கவில்லை என்றால் அதற்கான எதிர்வினைகளை எதிர்காலத்தில் சந்திக்க வேண்டியிருக்கும். 

எழுத்து - கே. அபிநயா 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com