“நண்பராக இருந்தால் எளிதில் கொலை செய்யலாம்” - சசிகலா பயோபிக் எடுக்கும் ராம்கோபால் வர்மா!

“நண்பராக இருந்தால் எளிதில் கொலை செய்யலாம்” - சசிகலா பயோபிக் எடுக்கும் ராம்கோபால் வர்மா!
“நண்பராக இருந்தால் எளிதில் கொலை செய்யலாம்” - சசிகலா பயோபிக் எடுக்கும் ராம்கோபால் வர்மா!

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருக்கும் சசிகலாவின் வாழ்க்கையை படமாக்கவிருப்பதாக பிரபல இயக்குநர் ராம்கோபால் வர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என்று பன்முகத் தளங்களில் பயணித்து தெலுங்கு மற்றும் பாலிவுட் சினிமாக்களில் முன்னணி இயக்குநராக இருக்கும் ராம்கோபால் வர்மா இந்தியில் இயக்கிய சர்கார், சர்கார் ராஜ், சர்கார் 3, ரங்கீலா, சத்யா, ரக்தா சரித்ரா உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்கள் மெகா ஹிட் அடித்தவை. சினிமாத்துறையினாரால் அன்போடு ஆர்.ஜி.வி என்று அழைக்கப்படுகிறார்.

இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மானை இந்தியில் முதன் முதலில் தனது ரங்கீலா படத்தில் அறிமுகப்படுத்தியவர் இவரே. ஒரு தேசிய விருது உட்பட 7 நந்தி விருதுகளையும் வென்றுள்ளார். இந்திய சினிமா உலகில் எவ்வளவு புகழை அடைந்திருக்கிறாரோ, அதேபோல அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிக்கொள்ளும் இயக்குநரும் இவரே.

இந்நிலையில், இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் “சசிகலா என்ற படத்தை இயக்கவுள்ளேன். எஸ் என்ற பெண்ணும் இ என்ற ஆணும் ஒரு தலைவரை என்ன செய்தார்கள் என்பது பற்றியக் கதை இது. அந்தத் தலைவியின் பயோபிக் படம் வெளியாகும், அதேநாளில் சசிகலா படமும் வெளியாகும். இப்படத்தை ராகேஷ் ரெட்டி தயாரிக்கிறார்.

ஜெ…. எஸ் மற்றும் ஈ.பி.எஸ் ஆகியோரிக்கிடையே இருந்த சிக்கலான சதிகள் நிறைந்த உறவை பற்றியக் கதை” என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன் நெருக்கமாக இருக்கும்போதுதான் எளிதாக கொலை செய்யமுடியும் என்பது தமிழ் பழமொழி என்றும் அவர் பதிவிட்டுள்ளார். அவரின் இந்தப் பதிவுகள் சசிகலா திரைப்படம் அவரைப் பற்றிய எதிர்மறையான கருத்துக்களை கொண்டிருக்கும் என்பது தெளிவாகிறது.

ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா, அவரது மறைவுக்குப்பிறகு சொத்துக்குவிப்பு வழக்கில் கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி 15 ஆம் தேதிமுதல் சிறையில் இருந்து வருகிறார். ஜெயலலிதா கடந்த செப்டம்பர் 22 ஆம் தேதி உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டு கடந்த டிசம்பர் 5 ஆம் தேதி உயிரிழந்தார். இப்போதுவரை அவரது மரணத்தில் மர்மம் இருக்கிறது என்று பலத்தரப்பினரும் விமர்சித்து வருகிறார்கள்.

சிலர், சசிகலாதான் கொன்றார் என்று குற்றம் சாட்டுகிறார்கள். இந்நிலையில், விரைவில் விடுதலை ஆகவுள்ள நிலையில் ராம்கோபால் வர்மா சசிகலா திரைப்படத்தை எடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது. அடுத்த ஆண்டு நடைபெறும் தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக இப்படம் வெளியாகவிருக்கிறது.

அத்துடன் ‘சசிகலா’ திரைப்படம் தொடர்பான போஸ்டர் ஒன்றினையும் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், “ஏன் தலைவி படம் வெளியாகும் நாளிலேயே சசிகலா படத்தையும் வெளியிடுகிறேன் என்றால், தலைவி படத்தில் ஜெ பற்றி மட்டுமே இருக்கும். எஸ் பற்றி இருக்காது. அதனால், ஒரு முழுமையான புரிதல் கிடைக்க வேண்டும் என்பதற்காக அதே நாளில் இந்தப் படத்தையும் வெளியிடுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். 

இயக்குநர் ராம்கோபர் வர்மாவின் இந்த ட்விட்டர் பதிவுகள் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com