"இப்போ நினைச்சாலும் என் முட்டி தள்ளாடுது...! RRR செட்ல ராஜமௌலி அடிப்பார்"-கலகலத்த ராம்சரண்

"இப்போ நினைச்சாலும் என் முட்டி தள்ளாடுது...! RRR செட்ல ராஜமௌலி அடிப்பார்"-கலகலத்த ராம்சரண்
"இப்போ நினைச்சாலும் என் முட்டி தள்ளாடுது...! RRR செட்ல ராஜமௌலி அடிப்பார்"-கலகலத்த ராம்சரண்

இந்திய நேரப்படி, இன்று காலை கோல்டன் குளோப் விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், அதில் RRR திரைப்படத்தில் கீரவாணி இசையில் வெளியான நாட்டு நாட்டு பாடல் சிறந்த ஒரிஜினல் பாடல் விருது கிடைத்தது. இந்தியத் திரைப்பட பாடல் ஒன்று கோல்டன் குளோப் விருது பெறுவது இதுவே முதல்முறை என்பதால், இந்தியாவே பெருமை கொள்ளும் தருணமாக அது அமைந்தது.

விருது விழாவில் கலந்து கொண்ட இயக்குநர் ராஜமௌலி, நடிகர்கள் ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண் ஆகியோர் துள்ளிக்குதித்து தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

விருதை இசையமைப்பாளர் கீரவாணி பெற்றுக்கொண்டார்.

விருது பெற்று வெளியே வந்தவர்களிடம், அங்கிருந்த ஊடகவியலாளர்கள் விருது பற்றி கேள்வி எழுப்பினர். அப்போது நடிகர் ராம்சரணிடம் `வெரைட்டி’ ஊடகத்தின் ஊடகவியலாளர் பேட்டிக்கண்டார். அந்த ஊடகவியலாளர் நடிகர் ராம்சரணிடம், `உங்களுக்கு மார்வெல் சூப்பர்ஹீரோக்களில் ஒருவராக நடிக்க வேண்டுமென்றால், யாராக நடிப்பீர்கள்?’ என்று கேட்டார். அதற்கு ராம்சரண், “ஒருவேளை கேப்டன் அமெரிக்கா கதாபாத்திரத்தில் நடிப்பேன். ஆனால், இந்தியாவிலும் நிறைய சூப்பர்ஹீரோக்கள் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவரை ஏன் நீங்கள் இங்கு அழைக்ககூடாது?” என்றார் சிரித்தபடியே.

தொடர்ந்து விருது பெற்ற நாட்டு நாட்டு பாடலின் நடன அசைவுகள் பற்றி பேசுகையில், “அந்த பாடலை பற்றி நினைக்கையில் இப்போதும் என் முட்டி தள்ளாடுகிறது. மிகவும் அழகான டார்ச்சர் அது…! பாருங்கள், அது எங்களை எங்கே கூட்டிக்கொண்டு வந்து விட்டுள்ளதென்று” என்றுள்ளார்.

தொடர்ந்து பேசிய இயக்குநர் ராஜமௌலியிடம், `படத்தின் மிக தீவிரமான சண்டை காட்சிகளை படமாக்கையில், என்ன மாதிரியான சிரமங்கள் ஏற்பட்டது’ என்று கேட்கப்பட்டது. அதற்கு ராஜமௌலி,மகிழ்ச்சியுடன் “நான் என்னுடைய 2 குழந்தைகளையும் (ராம்சரண் – ஜூனியர் என்.டி.ஆர்) ரொம்ப நல்லா கவனிச்சுக்கிட்டேன். ரெண்டு பேருக்குமே எந்த சூழ்நிலையிலயும் அடிபடவில்லை” என்றார். இதைக்கேட்ட ராம்சரண் ஓடிவந்து, “ஆனால் 2 குழந்தைகளையும் அவர் மட்டும் அடித்தார்” என்றார் ஜாலியாக! சிரித்தபடி மைக்கை வாங்கி தொடர்ந்து பேசிய ராஜமௌலி, “இவ்வளவு பேரிடம் இருந்து அன்பை சம்பாதித்ததில் ரொம்ப மகிழ்ச்சி” என்றார்.

நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். பேசுகையில், “விருதை நாங்கள் ஜெயிப்போம் என்று எதிர்பார்த்தோம். ஆனால் வெறும் வெற்றியாளனாக மட்டும் இன்று நாங்கள் இல்லை. அதற்கும் மேலே இருக்கிறோம்!” என்றார்.

முன்னதாக ட்வீட் வழியாக இசையமைப்பாளர் கீரவாணிக்கு வாழ்த்து தெரிவித்திருந்த ஜூனியர் என்.டி.ஆர். “முழு தகுதியும் உள்ள கோல்டன் குளோப் விருதை நீங்கள் பெற்றுள்ளதற்கு வாழ்த்துகள் சார் ஜி… நான் என் திரை வாழ்வில் எத்தனையோ பாடல்களுக்கு நடனமாடியுள்ளேன். ஆனால் நாட்டு நாட்டு பாடலுக்கு நடனமாடியது, எப்போதும் என் மனதுக்கு நெருக்கமானதாக இருக்கும்” என்றுள்ளார்.

இந்தியத் திரைப்பட பாடல் ஒன்று குலோடன் குளோப் விருது பெறுவது இதுவே முதல்முறை என்பதால், இந்தியாவின் மிகப்பெரிய ஆளுமைகள், நடிகர்கள் என பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் இயக்குநர் ராஜமௌலியை டேக் செய்து பாலிவுட் பாட்சா ஷாருக்கான், “சார், இன்று காலை எழுந்தவுடன் நாட்டு நாட்டு பாடலுக்கு நடனமான தொடங்கிவிட்டேன். உங்கள் வெற்றிக்கும் சேர்த்துதான்!!! இன்னும் நிறைய விருதுகளை இந்தியாவுக்கு பெற்று, நம்மை பெருமைப்படுத்துங்கள்” என்றுள்ளார்.

பிரதமர் மோடியும், “இந்த மதிப்புமிக்க கௌரவம் ஒவ்வொரு இந்தியனையும் மிகவும் பெருமைப்படுத்தியுள்ளது” என்று ட்வீட் செய்து தன் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com