’ஆர்ஆர்ஆர்’ வெளியீட்டையொட்டி ராமர் வேடமிட்டு ஊர்வலம் சென்ற ரசிகர்கள்
ராஜமெளலியின் ‘ஆர்ஆர்ஆர்’ படம் வெளியானதையொட்டி ஹைதராபாத்தில் ராமர் வேஷமிட்டு ரசிகர்கள் ஊர்வலம் சென்றது வைரலாகியுள்ளது.
ராம் சரண், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் ராஜமௌலி இயக்கியுள்ள 'ஆர்ஆர்ஆர்' இன்று உலகம் முழுக்க வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தில் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான், ஆலியா பட், பிரகாஷ் ராஜ், சமுத்திரகனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பீம் கதாபாத்திரத்தில் ஜூனியர் என்டிஆரும் ராம ராஜு கதாபாத்திரத்தில் ராம் சரணும் நடித்துள்ளனர். இதில், ராம ராஜு கதாபாத்திரத்தில் வரும் ராம் சரண் ராமராக உருவெடுத்து ஆங்கியேலருடன் போரிடுவதுபோல் படத்தில் காட்டப்பட்டுள்ளது விமர்சனங்களையும் வரவேற்பையும் பெற்றுள்ளது. சீதாவாக ஆலியா பட் நடித்துள்ளார்.
வீடியோவைக் காண: https://twitter.com/UrsVamsiShekar/status/1507284139292049411?s=20&t=8Zh8LohtpgXsOEXoQ8WHqA
இந்த நிலையில், இன்று ‘ஆர்ஆர்ஆர்’ வெளியானதையொட்டி ராம் சரண் ரசிகர்கள் ஹைதராபாத்தில் ராமர் வேடமிட்டு திறந்த ஜீப்பிலும் பைக்கிலும் கார்களிலும் வரிசையாக சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. டிவிவி என்டெர்டைன்மெண்ட் தயாரித்துள்ள இப்படத்திற்கு மரகதமணி இசையமைத்துள்ளார்.