’ராமாயணம்’ ட்ரெய்லர் வெளியீட்டு விழா | ரசிகருக்குப் பரிசளிக்கப்பட்ட தங்கச் சங்கு!
சான் டியாகோ காமிக்-கானில் நடந்த ராமாயணம் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில், ரன்பீர் கபூர், யாஷ், சாய் பல்லவி உள்ளிட்ட நட்சத்திர அணியின் படக்குழு, ஒரு ரசிகருக்கு தாமரை வடிவமைப்புடன் கூடிய அழகிய பெட்டியில் தங்க நிற சங்கைப் பரிசளித்தது. ‘தர்மத்தின் அழைப்பை’ குறிக்கும் இந்தச் சங்கு, இந்திய பாரம்பரியத்தின் சின்னமாக விளக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிறது.
செய்தியாளர்; M.மீரா
நிதேஷ் திவாரி இயக்கியிருக்கும் ராமாயணத்தில் ரன்பீர் கபூர் (ராமர்), யாஷ் (ராவணன்) மற்றும் சாய் பல்லவி (சீதா தேவி) ஆகியோர் நடித்துள்ளனர். சன்னி தியோல் அனுமனாகவும், ரவி துபே லட்சுமணனாகவும் நடித்துள்ளனர். இப்படத்தில் காஜல் அகர்வால் (மண்டோதரி), ரகுல் ப்ரீத் சிங் (சூர்ப்பனகா), அருண் கோவில், குணால் கபூர், ஆதிநாத் கோத்தாரே, ஷீபா சத்தா மற்றும் இந்திரா கிருஷ்ணன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
2026 சான் டியாகோ காமிக்-கானில் (SDCC) நடந்த ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட ஒரு ரசிகருக்கு ராமாயணக் குழுவிடமிருந்து கிடைத்த ஒரு தனித்துவமான பரிசை பிரித்துக் காட்டும் காணொளி வைரலாகி வருகிறது.
ராமாயணத்தின் சிறப்பு டிரெய்லர் வெளியீட்டு நிகழ்வில், ’தனக்குக் கிடைத்த இந்தப் பரிசைப் பிரித்துப் பார்ப்போம்’ என்று கூறி, அவர் ஒரு பரிசுப் பையிலிருந்து இளஞ்சிவப்பு நிறத்திலான ஒரு பரிசுப் பெட்டியை வெளியே எடுத்துத் திறக்கிறார். அந்த நேர்த்தியான பெட்டியின் மூடியில் தாமரை வடிவமைப்பு இடம்பெற்றுள்ளது. உள்ளே, ராமாயணக் குழுவினரிடமிருந்து வந்த ஒரு குறிப்புடன், தங்க நிறச் சங்கு ஒன்றும் இருப்பதைப் பார்க்கிறார்.
பின்னர், ”தாமரை உருவம் பொறித்த இந்த அழகான பெட்டி எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இந்த அழகான பெட்டிக்குள் 'தர்மத்தின் அழைப்பைக்' குறிக்கும் 'சங்கு' உள்ளது" என்று கூறுகிறார். அந்த அட்டையில், "நமது ஆற்றலை ஒருங்கிணைத்து, பிரபஞ்சத்தையும் கடந்து ஒரு புதிய தொடக்கத்தை அறிவிக்கும் ஒலியை எழுப்பும் இந்தியப் பாரம்பரியத்தின் சின்னம் ஆகும். இந்தச் சங்கில் உள்ள அழகான, அலங்காரமான, மிகவும் நுணுக்கமான மற்றும் நேர்த்தியான வேலைப்பாட்டைப் பாருங்கள்” என்று கூறும் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
SDCC விளக்கக் காட்சியின்போது, ராமாயணம்: பாகம் 1, 2026 தீபாவளி அன்று திரையரங்குகளில் வெளியாகும் என்றும், அதைத் தொடர்ந்து ராமாயணம்: பாகம் 2, 2027 தீபாவளி அன்று வெளியாகும் என்றும் தயாரிப்பாளர்கள் உறுதிப்படுத்தினர்.

