4000 கோடி பட்ஜெட்டில் உருவாகும் ராமாயணா ; இந்திய சினிமாவின் மிகப்பெரிய பட்ஜெட்!
இந்திய சினிமாவில் இதிகாச கதைகள் என்றால் எப்போதும் தனி ஈர்ப்பு உண்டு. அவை படமாவதும் ஒரு காலத்தில் அதிகமாக இருந்தது. ஒருகட்டத்தில் அப்படியான படங்களின் வருகை நின்றிருந்தது, ஆனால் அந்த ட்ரெண்ட் இப்போது மீண்டும் துவங்கியுள்ளது. அப்படி எல்லோரின் கவனத்தையும் ஈர்த்திருக்கும் இதிகாசக் கதையை மையமாகக் கொண்டு உருவாகும் இந்திப் படம் ராமாயணா.
`டங்கல்' இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர் - ராமராகவும், சாய் பல்லவி - சீதாவாகவும், யாஷ் - ராவணனாகவும், சன்னி தியோல் - அனுமன் கதாப்பாத்திரத்திலும் நடிக்கிறார்கள். இந்தப் படத்திற்கு ஹாலிவுட் இசையமைப்பாளர் ஹான்ஸ் ஸிம்மருடன் இணைந்து இசையமைக்கிறார் ஏ ஆர் ரஹ்மான்.
இந்த அறிவிப்புகளை மீறி ராமாயணா படம் கவனிக்கப்பட காரணம் இந்தப் படத்தின் பட்ஜெட். சீதையை ராவணனிடம் இருந்து மீட்ட ராமனின் கதை உலகறிந்ததாய் இருந்தாலும், இந்தக் கதையை தன்னுடைய பாணியில் சொல்ல இருக்கிறார் நிதேஷ் திவாரி. இரண்டு பாகங்களாக தயாராகிறது இப்படம். படத்தின் பட்ஜெட் முன்பு 1600 கோடி இருக்கும் என சொல்லப்பட்டது, படத்தின் தயாரிப்பாளரான புஷ்கர் குப்தா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ராமாயணா இரு பாகங்களும் சேர்த்து 4000 கோடி செலவில் உருவாக இருக்கிறது. எனவே இந்தியாவிலேயே மிகப் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகும் படம் ராமாயணா தான் எனத் தெரிவித்திருக்கிறார்.
உலகத்தரத்தில் படத்தின் VFX, ஐமாக்ஸ் திரைக்கேற்ப உருவாக்கம் என பல திட்டமிடல்கள் உள்ளன. Man of Steel, Dune, Oppenheimer உள்ளிட்ட படங்களுக்கு VFX செய்த மற்றும் 8 முறை ஆஸ்கர் விருது பெற்ற DNEG நிறுவனம் இப்படத்திற்கு VFX செய்கிறது. மேலும் AI தொழிநுட்பத்தை மூலம் ஒவ்வொரு நடிகர்களும் அவர்களின் குரலிலேயே எல்லா மொழிகளிலும் பேச வைக்கவும் திட்டமிட்டிருக்கிறது படக்குழு. எனவே தமிழ் துவங்கி ஆங்கிலம், மண்டரின், ஸ்பானிஷ் என உலகின் பல மொழிகளில் டப் செய்யயப்பட்டு வெளியாக உள்ளது.
இப்படத்தின் பட்ஜெட் இந்திய சினிமாவிலேயே அதிகம் என சொல்லப்படும் அதே வேளையில் சில ஹாலிவுட் படங்களுக்கு இடையான பட்ஜெட் என சொல்லலாம். கிட்டத்தட்ட 500 மில்லியன் அமெரிக்க டாலர்கள் இப்படங்களை செலவிடப்படுகிறது. அதாவது Black Panther: Wakanda Forever and Guardians of the Galaxy: Vol 3 போன்ற படங்களின் பட்ஜெட்டில் ராமாயணா படத்தின் முதல் பாகம் உருவாக இருக்கிறது. இந்தப் பிரம்மாண்ட படத்தை உலகம் முழுவதும் ஹாலிவுட் நிறுவனம் வார்னர் ப்ரதர்ஸ் பிக்சர்ஸ் விநியோகிக்க உள்ளது என சொல்லப்படுகிறது. ராமாயணா படத்தின் முதல் பாகம் 2026 தீபாவளிக்கும், இரண்டாம் பாகம் 2027 தீபாவளிக்கும் வெளியாகவுள்ளது.