'சீமான் புகாரில் முகாந்திரம் இல்லை'- 'பகலவன்' கதை விவகாரத்தில் நடந்தது என்ன?

'சீமான் புகாரில் முகாந்திரம் இல்லை'- 'பகலவன்' கதை விவகாரத்தில் நடந்தது என்ன?

'சீமான் புகாரில் முகாந்திரம் இல்லை'- 'பகலவன்' கதை விவகாரத்தில் நடந்தது என்ன?
Published on

நடிகர் சூர்யாவிற்கு 8 ஆண்டுகளுக்கு முன்பு கூறிய கதையை தற்போது தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனியை வைத்து இயக்குகிறார் லிங்குசாமி.

மும்பையில் நடைபெற்ற ஒரு உண்மை சம்பவத்தின் பின்னணியில் எழுதப்பட்ட கதையை, 2013-ஆம் ஆண்டு நடிகர் சூர்யாவிடம் இயக்குநர் லிங்குசாமி கூறியுள்ளார். இந்த கதை சூர்யாவிற்கும் பிடித்துப்போயுள்ளது. பின் சில மாற்றங்களுடன் படப்பிடிப்புக்கு செல்லலாம் என்று சூர்யா கூறிய நிலையில், அவர் கூறிய மாற்றங்களை செய்த லிங்குசாமி படப்பிடிப்பிற்கு  தயாரானார்.

அந்த சமயத்தில் இயக்குநரும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமான் தன்னுடைய ‘பகலவன்’ கதையும், சூர்யாவிற்கு லிங்குசாமி கூறியுள்ள கதையும் ஒன்று எனக்கூறி, இயக்குநர் சங்கத்தில் புகார் அளித்தார். இந்த விவகாரம் உடனடியாக சூர்யா கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டது.

இந்த நிலையில் 2013-ஆம் ஆண்டு இயக்குநர் சங்கத்தில் தலைவராக இருந்த விக்ரமன் தலைமையிலான குழுவினர் இரு தரப்பையும் அழைத்து விசாரணை நடத்தினர். அதில் இரண்டு கதையும் ஒரே சாயலில் இருப்பது கண்டறியப்பட்டது. ஆனால் இருவரது கதைகளும் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டதாகும், கதை எழுதிய விவகாரத்தில் ஒருவருக்கு ஒருவர் தொடர்பு இல்லை என்றும் கண்டறியப்பட்டது.

ஆனால் பத்து வருடங்களுக்கு முன்பே சீமான் ‘பகலவன்’ கதையை எழுதி விட்டதால் லிங்குசாமி தன்னுடைய கதையை தமிழில் மட்டும் இயக்க வேண்டாம் என்று உடன்படிக்கை போடப்பட்டது. மற்ற மொழிகளில் வேண்டுமானால், லிங்குசாமி தன்னுடைய கதையை படமாக்கி கொள்ளலாம் என்று, இயக்குநர் சங்கம் சீமான் மற்றும் லிங்குசாமியுடன் ஒப்பந்தம் செய்தது.

இந்த நிலையில் நடிகர் சூர்யாவும் லிங்குசாமியை அழைத்து வேறு கதையை உருவாக்க கூறவே அதன்படிதான் ‘அஞ்சான்’ திரைப்படம் உருவானது.

இந்த நிலையில் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு சூர்யாவுக்கு கூறிய கதையை தற்போது தெலுங்கில் ராம் பொத்தினேனியை வைத்து லிங்குசாமி புதிய படத்தை இயக்க உள்ளார். இதற்கான படப்பிடிப்பு வரும் 12-ஆம் தேதி தொடங்குகிறது.

ஆனால் இயக்குநர் சீமான் ‘பகலவன்’ கதை விவகாரத்தை கையில் மீண்டும் எடுத்துள்ளார். இதுதொடர்பாக கடந்த ஏப்ரல் மாதம் எழுத்தாளர் சங்கத்தில் புகார் அளித்தார். அந்த புகாரை விசாரித்த கே.பாக்யராஜ் தலைமையிலான குழுவினர் ஏற்கெனவே இருவரும் ஒப்பந்தம் செய்து கொண்டதால் இந்த புகாரில் முகாந்திரம் இல்லை என்று கூறியுள்ளனர். இருந்தாலும் இந்த விவகாரத்தில் அடுத்த கட்ட நகர்வு குறித்து சீமான் ஆலோசித்து வருகிறார். இருந்தாலும் இயக்குநர் லிங்குசாமி 2013 ஆம் ஆண்டு இயக்குநர் சங்கத்தின் உடன்பாடு மூலம் படத்தை இயக்குவது என்பதில் உறுதியாக உள்ளார்.

- செந்தில்ராஜா.இரா

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com