’நானும் எடுக்கிறேன் சஞ்சய் தத் கதையை’: வலுகட்டாயமாக களத்தில் குதிக்கிறார் வர்மா!
சஞ்சய் தத்தின் உண்மை கதையை தான் படமாக்க இருப்பதாக, பிரபல இயக்குனர் ராம் கோபால் வர்மா கூறியுள்ளார்.
இந்தி நடிகர் சஞ்சய் தத்தின் வாழ்க்கையை மையமாக வைத்து ’சஞ்சு’ என்ற பெயரில் படம் இயக்கியிருக்கிறார் ராஜ்குமார் ஹிரானி. சஞ்சய் தத்தாக, ரன்பீர் கபூர் நடித்துள்ளார். மற்றும் பரேஷ் ராவல், மனிஷா கொய்ராலா, அனுஷ்கா சர்மா, சோனம் கபூர், தியா சர்மா போன்ற பலர் நடித்துள்ளனர். மூன்று வாரங்களுக்கு முன்பு வெளியான இந்தப் படம் ரூ. 300 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்து வருகிறது.
சஞ்சய் தத் பற்றி பரபரப்பாகக் கூறப்பட்ட பல்வேறு சர்ச்சையான சம்பவங்களை இந்தப் படம் பேசுகிறது. இதனால் அவரைப் புனிதப்படுத்தும் விதமாக படம் உள்ளது என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், சஞ்சய் தத்தின் உண்மை கதையை தான் படமாக எடுக்க இருப்பதாக பிரபல இயக்குனர் ராம் கோபால் வர்மா கூறியுள்ளார். 1993-ம் ஆண்டில், மும்பையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் மற்றும் சட்டவிரோதமாக ஏகே-56 ரக துப்பாக்கியை வைத்திருந்தது தொடர்பாக சஞ்சய் தத்த கைது செய்யப்பட்ட விவகாரங்களை மட்டும் மையமாக வைத்து இந்தப் படத்தை உருவாக்குகிறார் வர்மா. இதற்கு, ‘சஞ்சு: த ரியல் ஸ்டோரி’ (Sanju: The Real Story) என்று தற்காலிக தலைப்பும் வைத்துள்ளனர்.
இந்தப் படத்துக்காக சஞ்சய் தத்துடன் நெருங்கி பழகியவர்களையும் அவர் தொடர்பான வழக்குகளை விசாரித்தவர்களையும் ராம் கோபால் வர்மா சந்தித்து தகவல்களை சேகரித்துள்ளார் என்றும் இதுபற்றி இப்போது மேலும் அதிக தகவல்களைத் தர முடியாது என்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.