சூதாட்ட கிளப்பில் ரஜினி... வைரலாகும் புகைப்படம்.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..
அமெரிக்கா சென்றுள்ள ரஜினி சூதாட்ட கிளப்பில் இருப்பது போன்ற படம் சமூக வலைத்தளங்களில் வெளியானதை அடுத்து, நெட்டிசன்கள் அவரை வறுத்தெடுத்துக் கொண்டிருக்கின்றனர்.
காலா, 2.0 படங்களில் நடித்துவரும் ரஜினி, மருத்துவம் பார்ப்பதற்காக அமெரிக்கா சென்றார். அங்கு ஒரு சூதாட்ட கிளப்பில் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படம் இணையதளங்களில் வெளியானது. ஜி.எஸ்.டி வரி விதிப்பால் தமிழ் திரையுலகமே ஸ்தம்பித்துள்ள நிலையில் ரஜினிகாந்த் சூதாட்ட கிளப்பில் ஜாலியாக இருக்கிறாரே என்ற கோபத்தில் நெட்டிசன்கள் கடும் விமர்சனங்களை முன் வைக்கின்றனர்.
சிஸ்டம் சரியில்லை என்ற கருத்து சொன்ன ரஜினியை கலாய்க்கும் விதமாக, “சூதாடுற சிஸ்டம் சரியில்லை என்று சொல்லியிருக்கிறார்” என்று ஒருவர் கூறியுள்ளார்.
திரைத்துறைக்கு ஆதரவான ரஜினியின் ட்விட்டர் செய்திக்கு பதிலளிக்கும் விதமாக, “ரஜினி இரட்டை வேடம் போடுகிறார். கருத்தும் சொல்கிறார்; கேசினோவும் விளையாடுகிறார்” என்று கூறியுள்ளார் நெட்டிசன் ஒருவர்.
மற்றொருவர், “சூதாடும் படம் வெளியானதால்தான் ரஜினி, திரைத்துறையினரின் போராட்டத்துக்கு ஆதரவாக ட்விட்டர் செய்தி வெளியிட்டுள்ளார்” என்று கூறியுள்ளார்.
“ரஜினிகாந்த் ஒரு சந்தர்ப்பவாதி. அவர் எப்போதும் தமிழக மக்களைப் பற்றி கவலைப்பட்டதில்லை. மக்கள் இந்த வெட்டவெளிச்சமான உண்மையைப் புரிந்துகொள்ள வேண்டும்” என்று ஒருவர் ட்வீட் செய்துள்ளார்.
“சூதாட்டக் கிளப்பில் இருக்கும் இவர், தமிழ் சமூகத்துக்கு என்ன மாதிரியான முன்னுதாரணமாக இருப்பார்” என்று ஒருவர் கூறியுள்ளார்.
மற்றொருவர், “திரையுலகமே பல்வேறு பிரச்னைகளால் மூழ்கிக் கொண்டிருக்கும்போது தலைவர் சூதாடிக் கொண்டிருக்கிறார். இவர் உங்களுக்காக குரல் கொடுப்பார் என்று இன்னுமா நம்புகிறீர்கள்?” என்று ட்வீட்டியுள்ளார்.
“சூதாடிக்கிட்டே ட்விட் பண்ணிருக்கார். தமிழக மக்களின் பணத்தை சூதாடி அழிக்கிறார். முட்டாள் ஜனங்கள்” என்று ஒருவர் கூறியுள்ளார்.
“அமெரிக்க சூதாட்டக் கிளப்பில் பச்சைத் தமிழன் ரஜினி போருக்கு தயாரானபோது கிளிக்கியது” என்று இன்னொருவர் அந்தப் புகைப்படத்துடன் கருத்துப் பதிவு செய்துள்ளார்.
ஜி.எஸ்.டி வரியும், தமிழக அரசின் கேளிக்கை வரியும் இணைந்து 58 சதவீதம் வரி செலுத்த வேண்டிய நிலை தமிழ் திரையுலகமே ஸ்தம்பித்துள்ளது. மூன்று நாட்களாக திரையரங்குகள் இழுத்து மூடப்பட்டுள்ளன. சினிமாவை நம்பி இருக்கும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்து தவிக்கின்றனர். இந்த சூழ்நிலையில் ரஜினி குரல் கொடுப்பார் என்ற எதிர்பார்ப்பு திரையுலகத்தினரிடம் இருந்தது. ஆனால் அவர் சூதாட்ட கிளப்பில் அமர்ந்திருக்கும் படம் வெளியானதைப் பார்த்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். சமூக வலைத்தளங்களில் அந்தப் படம் விமர்சனம் ஆனதைத் தொடர்ந்து ரஜினியிடமிருந்து ஒரு ட்விட்டர் செய்தி வெளியானது. ஏற்கனவே மோடி அறிவித்த பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு ஆதரவாக முதல் நபராக ரஜினி தனது ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.