"எனக்கு கல்விப் பிச்சை அளித்தவர்கள் "-ஆசிரியர்களின் அன்பில் உருகும் ராஜ்கிரண்

"எனக்கு கல்விப் பிச்சை அளித்தவர்கள் "-ஆசிரியர்களின் அன்பில் உருகும் ராஜ்கிரண்
"எனக்கு கல்விப் பிச்சை அளித்தவர்கள் "-ஆசிரியர்களின் அன்பில் உருகும் ராஜ்கிரண்

இன்று ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. 1955 முதல் 1966 வரையில் பள்ளியில் படித்துள்ள நடிகர் ராஜ்கிரண், முதல் வகுப்பில் இருந்து ஒவ்வொரு ஆசிரியர் பெயரையும் மறக்காமல் குறிப்பிட்டு ஃபேஸ்புக் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.

"ஆசிரியர் தின நன்னாளில் எனக்கு கல்விப்பிச்சை அளித்த ஆசிரியப் பெருந்தகையினர் அனைவரையும் நினைத்து மகிழ்கிறேன்" என்று குறிப்பிட்டு ஆசிரியர்களின் பெயர்களை வரிசைப்படுத்தியுள்ளார் ராஜ்கிரண்.

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை சதக்கத்துன் ஜாரியா ஆரம்பப் பள்ளியில் முதல் வகுப்பு ஆசிரியர் மோசஸ், இரண்டாம் வகுப்பு ஆசிரியர் குமார், மூன்றாம் வகுப்பு ஆசிரியை ஆசீர்வாதம், நான்காம் வகுப்பு ஆசிரியை செல்லம், ஐந்தாம் வகுப்பு ஆசிரியர் மாதவன் என பெயர்களைக் குறிப்பிட்டு நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும், சதக்கத்துன் ஜாரியா நடுநிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பு ஆசிரியர் சுப்பிரமணியம், ஏழாம் வகுப்பு ஆசிரியர் நைனார் முஹம்மது, சிறப்பு தமிழாசிரியர் நடராஜன், எட்டாம் வகுப்பு ஆசிரியர் கேசவன், ஹமீதியா மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு ஆசிரியர் ஜனார்த்தனன், பத்தாம் வகுப்பு ஆசிரியர் ராஜு, பதினொன்றாம் வகுப்பு ஆசிரியர் ஜெகந்நாதன், சதக்கத்துன் ஜாரியா பள்ளிகளின் தலைமை ஆசிரியர் செல்வம், ஹமீதியா மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜார்ஜ் ஆகிய ஆசிரியர்களுக்கும் நன்றிகளை காணிக்கையாக்கியுள்ளார்.

"அவர்களெல்லாம் எங்கிருக்கிறார்கள் என்பது தெரியாவிடினும், அவர்கள் மனச்சாந்தியுடனும், சமாதானத்துடனும் நிறைவோடு வாழ எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்" என்றும் ராஜ்கிரண் நெகிழ்ந்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com