நடிகர் ரஜினிகாந்த் ஓய்வெடுப்பதற்காக, குடும்பத்துடன் இன்று அமெரிக்கா செல்கிறார்.
கடந்த ஏப்ரல் மாதம் அமெரிக்கா சென்ற நடிகர் ரஜினிகாந்த், அங்கு 2 வாரங்கள் தங்கி ஓய்வெடுத்தார். பிறகு ரஜினி மக்கள் மன்றம், அரசியல் கட்சி அறிவிப்பு, ரசிகர்கள் சந்திப்பு என பரபரப்பானார். பின்னர், அவர் நடித்த ‘காலா’, ‘2.0’ ஆகிய படங்கள் ரிலீஸ் ஆயின. இப்போது ’பேட்ட’ படத்தில் அவர் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக இருக்கிறது.
இதற்கிடையே, அவர் அரசியலில் ஈடுபட போவதாக கூறி ஓராண்டு முடியப் போகிறது. இன்னும் அவர் அரசியல் நடவடிக் கைகளில் ஈடுபடவில்லை. இந் நிலையில் ரஜினி தனது கட்சிக்காக புதிய டி.வி. சேனல் தொடங்க இருக்கிறார். ரஜினி ரசிகர் மன்ற மூத்த நிர்வாகி வி.எம்.சுதாகர் பெயரில் இதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளன. சூப்பர் ஸ்டார் டி.வி., ரஜினி டி.வி., தலைவர் டி.வி. ஆகிய மூன்று பெயர்கள், டிவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையே தொடர்ந்து பிசியாக இருந்ததால், சில வாரங்கள் அவருக்கு ஓய்வு தேவைப்படுகிறது. இதற்காக, குடும்பத்தின ருடன் அவர் இன்று அமெரிக்கா புறப்பட்டுச் செல்கிறார். அங்கு 10 நாட்கள் ஓய்வில் இருக்கும் அவர், ஜனவரி முதல் வாரம் சென்னைத் திரும்புகிறார்.
‘ஓய்வு எடுப்பதற்காகவே அவர் அமெரிக்கா செல்கிறார். வேறு விஷயம் ஏதுமில்லை. அவர் மனைவி லதா உள்ளிட்டோர் அவருடன் செல்கின்றனர். ஜனவரி மாதம் சென்னை திரும்புகிறார்’ என்று ரஜினிகாந்த் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.