‘திமுக தலைவரின் குரலை கேட்க காத்துக்கொண்டிருக்கிறேன்’ - ரஜினிகாந்த் உருக்கம்!
திமுக தலைவர் கருணாநிதியின் வார்த்தையை கேட்க தானும் காத்துக்கொண்டிருப்பதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் காலா படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்று வருகிறது. இதில் பேசிய ரஜினிகாந்த், ‘கருணாநிதி எனது சிவாஜி பட திரைப்பட வெற்றி விழாவிற்கு வருகை தந்தார். அப்போது அவர் மேடையில் பேசியும் இருந்தார். 75 வருடமாக தமிழக மக்கள் கேட்டு வந்த அந்தக் குரலை கேட்பதற்கு கோடிக்கணக்கான தமிழர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர். நானும் காத்துக்கொண்டிருக்கின்றேன். அவர் விரைவில் பேசுவார் என நம்புகிறேன். புத்திசாலிகளிடம் மட்டுமே ஆலோசனை கேட்க வேண்டும். அதி புத்திசாலிகளிடம் கவனமாக இருக்க வேண்டும். என் வாழ்வின் கனவுகளில் ஒன்று நதி இணைப்பு. தென்னிந்திய நதிகளை இணைத்து விட்டு நான் இறந்து விட்டால் கூட போதும். வாழ்க்கையிலும் சரி, திரைப்படத்திலும் சரி நல்லவனாக இருக்கலாம். ஆனால் மிக நல்லவனாக இருக்க கூடாது. ரஜினி முடிந்துவிட்டான் என 40 ஆண்டுகளாக சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் நான் ரசிகர்களாலும், ஆண்டவனாலும் ஓடிக்கொண்டிருக்கிறேன் என்பதை அவர்கள் அறியவில்லை’ என்று கூறினார்.