என் வாழ்வில் அந்த நிகழ்வுதான் மிகப்பெரிய திருப்பு முனை : ரஜினி சுவாரஸ்ய பேட்டி
கோவாவில் நேற்று நடைபெற்ற 50வது சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிகாந்துக்கு “ICON OF GOLDEN JUBLEE" விருது வழங்கப்பட்டது. இந்த விருதை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் ஆகியோர் ரஜினிகாந்துக்கு வழங்கினர். இந்த நிகழ்வையொட்டி டிடி நியூஸ்க்கு ரஜினிகாந்த் சிறப்பு பேட்டி அளித்திருந்தார்.
பேட்டியின் விவரம்:
உங்களுக்கு விருது வழங்கப்பட்டது குறித்து?
முதலில் அதிர்ச்சியாக இருந்தது. தகுதி இருக்கா என்று தயக்கமாக கூட இருந்தது. பின்னர் ஏற்றுக் கொண்டேன். விருது வழங்கிய மத்திய அரசுக்கு நன்றி
உங்களுடைய ஸ்டைல் பற்றி?
நான் இயல்பாக இருக்கிறேன். மற்ற மக்களவை போலவே நான் வாழ்கிறேன். நீங்கதான் நான் வித்தியாசமாக இருப்பதாக கூறுகிறீர்கள்
உங்க வாழ்க்கையில் முக்கியமானவர்கள்?
என்னுடைய பெற்றோர்களுக்குதான் எனது முதல் நன்றி. அதன்பிறகு கடவுளுக்கு. என்னுடன் பணியாற்றிய இயக்குநர்கள் உள்ளிட்டோருக்கு. எல்லாவற்றிக்கும் மேலாக ரசிகர்கள்தான் எல்லாமே.
சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பு முனை?
இயக்குநர் கே.பாலசந்தரை சந்தித்ததே மிகப்பெரிய திருப்பு முனை. சினிமா பயிற்சி பட்டறையில் இருந்த காலத்தில் கர்நாடக பிரிவில் தான் இருந்தேன். தமிழ் கூட எனக்கு தெரியாது. பாலசந்தர் தான் தமிழ் கற்றுக் கொள் உன்னை எங்கு கொண்டு செல்கிறேன் பார் என்று சொன்னார். என் மீது அவர் அதிக அளவில் நம்பிக்கை வைத்தார்.
அபூர்வ ராகங்கள் படத்தில் சின்ன ரோல் தான். அப்போது இது ஒரு டிரையல்தான் என்று அவர் சொன்னார். மூன்று முடிச்சு படத்தில்தான் ஆண்டி ஹீரோவாக முறையாக அறிமுகப்படுத்தினார். நான் ஹீரோ ஆவேன் என்று அவர் கூட நினைத்திருக்க மாட்டார். கலைஞானம் சார் வந்து ஹீரோ ஆக நடிக்க அழைத்தார். அது பைரவி படம்.
தமிழ், இந்தி உள்ளிட்ட பலமொழிகளில் நடித்துள்ளீர்களே?
திரைப்படத்திற்கு உணர்வு ஒன்றுதானே. தொடக்கத்தில் மொழி ஒரு பிரச்னையாக இருந்தது. 1985 ஆம் ஆண்டுகள் வரை தமிழ், இந்தி படங்களில் நடித்து வந்தேன். அப்போது கொஞ்சம் சிரமமாக இருந்தது. இரண்டு படப்பிடிப்பு முறைகளும் வெவ்வேறானவை. ஒரு கட்டத்தில் இந்தியில் நடிக்க வேண்டாம். தமிழில் மட்டும் நடிக்கலாம் என்று முடிவெடுத்தேன்.
பெங்களூரு வாசிகளுக்கு மூன்று மொழி தெரியும். எனக்கு கூடுதலாக மராத்தி மொழியும் தெரிந்திருந்தது. மராட்டிய மன்னரின் பெயரான சிவாஜி ராவ் என்ற பெயர் எனக்கு வைக்கப்பட்டது மிகப்பெரிய பாக்கியம்.
குடும்ப உறவுகளை எப்படி சமாளிக்கிறீர்கள்?
எல்லாமே நடிப்புதான். குடும்பத்திலும் அப்படிதான். கேமிராவுக்கு பின்னால் கூட நாம் நடிக்க வேண்டியிருக்கும். ஆனால், நன்றாக நடிக்க வேண்டும்
உங்களுடைய ஸ்டைலை எப்படி உருவாக்கினீர்கள்?
சில நேரங்கள் அது நினைத்த மாத்திரத்தில் வரும். சில விஷயங்களுக்கு பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டும். தொடக்கத்தில் வில்லன் கேரக்டர்களில் நடித்தேன். வில்லன் கதாப்பாத்திரங்களை பொறுத்தவரை எல்லை கிடையாது. அதனால், வில்லன் கதாபாத்திரங்களில் நான் நினைத்ததை செய்து பார்த்தேன்.
எந்த விஷயம் செய்தாலும் ரசித்து செய்ய வேண்டும். அதனால், கிரியேட்டிவ் ஆக செய்கிறேன். ராகவேந்திரா என்னுடைய சினிமா வாழ்க்கையில் மட்டுமல்ல சொந்த வாழ்க்கையிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. ஒவ்வொரு முறை இமயமலைக்கு செல்லும் போதும் புத்துணர்வு பெறுகிறேன்.
நீங்கள் ஒரு லெஜண்டா? அதிசயமா?
நான் ஒரு சாதாரண நடிகர். அவ்வளவுதான். ரசிகர்கள் என் மீது நிறைய நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். அவர்களுக்கு என்ன திருப்பி கொடுக்க முடியும் எனத் தெரியவில்லை. அதனால்தான் ஒவ்வொரு படத்திலும் பெஸ்ட் ஆக கொடுக்க வேண்டும் என நினைக்கிறேன்.
புதிதாக வரும் இளைஞர்களுக்கு?
முதலில் அவர்களது வேலையை விரும்பி செய்ய வேண்டும்.
உங்களுக்கான இன்ஸ்பரேஷன்?
பெரிய அளவில் எனக்கு அமிதாப்பச்சன் தான் எனக்கு இன்ஸ்பரேஷன். அவரிடம் நான் அடிக்கடி பேசுவேன். இன்றளவும் அது தொடர்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக நான் விரும்பியதை செய்வேன். அவ்வளவுதான்