ரஜினியின் ‘தலைவர் 168’ படப்பிடிப்பு ஹைதராபாத்தில் ஆரம்பம்
ரஜினிகாந்த் நடிக்க உள்ள ‘தலைவர் 168’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று ஹைதராபாத்தில் தொடங்க உள்ளது.
இயக்குநர் சிவாவுடன் முதன்முறையாக ரஜினிகாந்த் இணையும் திரைப்படம் 'தலைவர் 168'. இதற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. ரஜினி பிறந்த நாள் அன்று இந்தப் படத்தின் பூஜை போடப்பட்டது. அதில் ரஜினி, குஷ்பு, மீனா உட்பட பலர் கலந்து கொண்டனர். அதனை அடுத்து படத்தின் படப்பிடிப்பு வேகம் பெரும் என எதிர்பார்க்கப்பட்டது.
இதனை அடுத்து இன்று ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு தொடங்குகிறது. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், நடிகை மீனா மற்றும் குஷ்பு, பிரகாஷ் ராஜ், பரோட்டா சூரி எனப் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இதில் மீனாவும். குஷ்புவும் இதற்கு முன்பே ரஜினியுடன் நடித்தவர்கள். ஆனால் சூரி முதன்முறையாக ரஜினி படத்தில் நடிக்க இருக்கிறார்.
அதேபோல முதன்முறையாக ரஜினியின் படத்திற்கு டி.இமான் இசை அமைக்கிறார். இந்தப் படம் 2020-ஆம் ஆண்டில் தீபாவளிக்கு திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி உள்ள ரஜினிகாந்தின் 'தர்பார்' திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பொங்கலுக்கு திரைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.