ரஜினியின் ‘காலா’ படத்திற்கு மீண்டும் யு/ஏ சான்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
‘காலா’மூலம் இயக்குநர் ரஞ்சித் இரண்டாவது முறையாக ரஜினியுடன் இணைந்திருக்கிறார். இந்தப் படத்திற்கு தணிக்கை வாரியம் ஏற்கெனவே யு/ஏ சான்று அளித்திருப்பதாக செய்தி வந்தது. ஆனால் அந்தச் செய்தியை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. இந்தச் சான்றிதழ் வியாபார ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் மறு தணிக்கைக்கு படக்குழு சென்றது. மீண்டும் படத்தை பார்வையிட்ட தணிக்கை வாரியம் ‘காலா’வில் 14 காட்சிகளுக்கு வெட்டு கொடுத்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
மேலும் படத்திற்கு வழங்கிய யு/ஏ சான்றையே திரும்ப உறுதி செய்திருப்பதாகவும் தெரிகிறது. பல வழிகளில் போராடியும் நினைத்ததைபோல சான்றிதழை பெற முடியாமல் போனதால் படக்குழு வருத்தத்தில் ஆழ்ந்துள்ளது. முன்கூட்டிய படம் ஏப்ரல் 27 அன்று வெளியாகும் என அறிவிப்பு வெளியாகி இருந்தாலும் குறிப்பிட்ட தேதியில் வெளியிட முடியுமா என தெரியவில்லை. தமிழ்த்திரை உலகம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதால் இந்தப் பஞ்சாயத்திற்கு ‘காலா’ சிக்கிக் கொண்டு தவிக்குமோ என்ற அச்சம் ரஜினி ரசிகர்கள் இடையே நிலவி வருகிறது.

