ஓபனிங் சாங்கில் தனி ஸ்டைல் படைத்த ரஜினி திரைப்படங்கள்

ஓபனிங் சாங்கில் தனி ஸ்டைல் படைத்த ரஜினி திரைப்படங்கள்
ஓபனிங் சாங்கில் தனி ஸ்டைல் படைத்த ரஜினி திரைப்படங்கள்

ஹீரோ என்றாலே ஒபனிங் சாங்தான் ஹைலைட். எம்ஜிஆர் ஆக இருந்தாலும் சரி, சிவாஜியாக இருந்தாலும் சரி, இது பொருந்தும். எம்ஜிஆருக்கும் டிஎம்எஸ் பாடுவார். சிவாஜிக்கும் பாடுவார். ஆனால் இருவருக்கும் ஒருவர்தான் பாடி இருக்கிறார் என்பதை யூகிக்க முடியாது. அதற்கு காரணம்; டிஎம்எஸின் குரல் லாவகம். ஸ்டைல் அப்படி. நபருக்கு தக்க அவரது நாக்கு நகரும். ரஜினி போன்ற உச்ச நடிகர் தமிழ் சினிமாவில் உள்ளே வந்த பிறகு ஓபனிங் சாங்கிற்கு ஓவர் மரியாதை வந்தது. ஒபனிங் சாங்கை வைத்து மொத்த படத்தையும் தூக்கி நிறுத்த முயற்சித்தார்கள் திரை உலகத்தினர். ரஜினியை மாஸ் ஹீரோவாக தூக்கி நிறுத்திய படம் பாட்ஷா. ஆனால் அதறகு முன்பு இருந்து அவருக்கு சில ஓபனிங் சாங் இருந்தது. அவற்றை எல்லாம் நேரடியான ஒபனிங் சாங் ஆக எடுத்து கொள்ள முடியாது. 

இன்று ‘காலா’ படப் பாடல்கள் வெளியாகி உள்ளன. வரிக்கு வரி அவரை அரசியல் களத்து உயர்த்திப் பிடிக்கும் வரிகள் அதன் உள்ளே உள்ளன. ஆரம்பக்காலத்தில் ரஜினி அரசியலுக்கு வருவாரா? இல்லையா? என கேள்வி எழுந்த போது திரை உலகில் அதிற்கு தீர்ப்பு எழுதிக் கொண்டிருந்தார் வைரமுத்து. அவரது தீர்ப்பை இன்று திருத்தி எழுத ஆரம்பித்திருக்கிறது. ரஜினி படத்தில் மறைமுகமாக அரசியல் வாசனையை கலந்தார் வைரமுத்து. ஆனால் ‘காலா’ நேரடியாகவே அரசியல் திரியை திருக ஆரம்பித்திருக்கிறது. ‘கற்றவை, பற்றவை’என விளிம்புநிலை அரசியலை முன் வைக்க தொடங்கி இருக்கிறது. என்னதான் ரஜினியின் நேரடி அரசியலுக்கு இந்தப் பாடல்கள் அச்சாரம் போட்டாலும் ஆரம்பக் காலங்களில் ரஜினி படங்களில் ஒலித்த பாடல்களை லேசில் மறந்துவிட முடியாது. அந்தப் பாடல்கள் என்ன? ஒரு சின்ன ப்ளாஷ் பேக்.

‘முத்து’ படத்தில் வரும் ‘ஒருவன் ஒருவன் முதலாளி..உலகில் மற்றவன் தொழிலாளி’ பாடலில் ரஜினி தோன்றிய போது உற்சாகத்தின் உச்சத்திற்கே போனார்கள் அவரது ரசிகர்கள். ஏ.ஆர். ராஹ்மான் இசையில் வந்த இந்தப் பாடல் பக்கா கமர்ஷியல் பாணியில் அமைந்திருந்தது. அந்தப் பாட்டில் ரஹ்மான் இருப்பார். அதே சமயத்தில் ரஜினியும் இருப்பார். ஆனால், முதல் முறையாக ரஜினிக்கு முத்து படத்தில்தான் ரஹ்மான் இசை அமைத்திருந்தார். முதல் முறையாக ஒரு புதுவிதமான இசையை ரஹ்மான் ரஜினிக்காக புகுத்திருந்தார். முத்து படத்தின் அத்தனை பாடல்கள் செம்ம ஹிட். ஆனால், முத்து ஆடியோ ரிலீஸ் ஆன புதிததில், ரஜினி ரசிகர்களுக்கு முத்து படத்தின் பாடல்களை பிடிக்கவில்லை. இதனால், அவரின் தீவிர ரசிகர்கள் ரஹ்மானின் இல்லத்தில் கற்களை எரிந்த சம்பவங்களும் நடந்தன. சம அளவில் சமமான இசை அதில் இழையிட்டிருக்கும். ஜப்பான் அளவுக்கு ரஜினியை கொண்டு போய் சேர்த்த இசைக்கு ரஹ்மானே காரணமாக இருந்தார்.  அதே போல ‘அண்ணாமலை’ படப்பாடலும். ‘வந்தேண்டா பால்காரன்’ பாடல் அவரது புகழுக்கு தனி அடையாளத்தை தருவித்தது.  டெரிஃபிக் பெர்ஃபாமன்ஸ் என பலரால் இன்று அது பாராட்டப்படுகிறது. தேவாவின் இசையில்தான் ரஜியின் ஒரு மாஸ் பின்னணிக்கு அழைத்து செல்லப்பட்டார். தேவாவின் இசையில் உருவான ‘பாட்சா’ மற்றும்  ‘அண்ணாமலை’ ஆடியோ அளவில் வெற்றியை ஈட்டினர். ‘பாட்சா’ இசை ரீதியாக வெற்றியடைந்த போதும் தேவாவிற்கு இரண்டு ஆண்டுகள் படமே கிடைக்கவில்லை என்பது வலராறு. கேங்ஸ்டர் மூவியில் ரஜினியை முதன்முதலாக முன்னிறுத்திய படம் ‘பாட்சா’. அதுதான் ஆரம்பப் புள்ளி. அதையொட்டிதான் இன்று அவர் ‘காலா’ வரை வந்து சேர்ந்திருக்கிறார். ‘பாட்சா’வில் வரும் ‘ஆட்டோக்காரன் ஆட்டோக்காரன்’ இன்றுவரை ஆட்டோ ஓட்டுநர்களின் தேசிய கீதமாக ஒலித்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு ஆயுத பூஜைக்கும் அந்தப் பாடல் இல்லாமல் ஆட்டோ ஸ்டாண்டுகளில் ஆயுத பூஜை முடிவடையாது. ரஜினி படத்தில் ஓபனிங் சாங் அவரை தூக்கிப் பிடிப்பதை போல இருக்கும். ஆனால் அதே சமயம் அது சமூகத்தில் உள்ள ஒரு கேரக்டரின் குரலாகவும் ஒலிக்கும். ஆகவேதான் அந்தப் பாடகள் சாகா வரம் பெற்றன. நாற்பது ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் ரஜினியின் ஒபனிங் சாங்கள் ஏற்படுத்தியுள்ள தாக்கம் அதிகம்.

1999ல்‘படையப்பா’வெளியான படத்திற்கு ரஹ்மான்தான் இசை. இதில் இடம் பெற்ற ‘என் பேரு படையப்பா இள வட்ட நடையப்பா’ பாடல் பட்டித் தொட்டி முழுக்க போய் பரவியது. வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றியை அடைந்தப் படம் இந்தப் படம்.  ‘வெற்றிக் கொடிக்கட்டு’ இளைஞர்களுக்கான ஒரு உற்சாக பாடலாகவும் வெளிப்பட்டது. 

ரஜினியின் படங்களில் பெரும்பாலும் ஓபனிங் சாங்கை எஸ்.பி.பி தான் பாடுவார். அந்த முறை சமீபகாமாக மாற்றப்பட்டுள்ளது. அது சடங்குபோலவே காலங்காலமாக காப்பாற்றப்பட்டு வந்தது. ரஜினியே வலியுறுத்தி ‘லிங்கா’ இசை வெளியீட்டில் இதை பேசியிருந்தார். அந்த முறை உடைக்கப்பட்டது ‘கபாலி’யில்தான். அடுத்து இப்போது ‘காலா’. அதாவது கரிகாலன். ‘கபாலி’யில் ‘உலகம் ஒருவனுக்கா’ பாடல் எஸ்பிபியின் பழைய ஓபனிங் சாங் போல இல்லை என்று பலரும் முணுமுணுத்தார்கள். ஆனால் அது இளம் பட்டாளத்திற்கு மத்தியில் பல மாற்றத்தை ஏற்படுத்தியது. ரஜினியை இன்றைய தலைமுறையோடு கொண்டுபோய் சேர்த்தது. கனமான குரலில் இருந்த ரஜினியின் ஓபனிங் சாங் மரபை உடைத்து உடைசலான ஒரு குரலுக்கு அவரை பொருத்தி வைத்து பார்த்தது. அந்த முயற்சி இசை ரீதியில் ரஜினி மேற்கொண்ட பெரும் முயற்சி. அல்லது மாற்றம். இந்த இசை மாற்றம் இப்போது அரசியல் மாற்றமாகவும் வலுவடைந்திருக்கிறது. அதன் அடையாளம் தான் ‘காலா’ காவியல்ல; கறுப்பு.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com