டார்ஜிலிங்கில் ரஜினி: காலா கொண்டாட்டத்தால் மகிழ்ச்சி!
அடுத்த படத்துக்காக, டார்ஜிலிங் சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த், ’காலா’ படத்தை ரசிகர்கள் கொண்டாடுவதால் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.
ரஜினிகாந்த், ஹூமா குரேஸி, நானா படேகர், சமுத்திரக்கனி உட்பட பலர் நடித்துள்ள படம், ‘காலா’. பா.ரஞ்சித் இயக்கியுள்ள இந்தப் படம் இன்று ரிலீஸ் ஆனது. காலை முதலே தியேட்டர்கள் முன் கூடிய ரசிகர்கள், பட்டாசு வெடித்து கொண்டாடினர். படம் நன்றாக இருக்கிறது என்று விமர்சனங்கள் இப்போது வெளியாகி வருகிறது.
இதற்கிடையே, கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்துக்காக, நேற்று டார்ஜிலிங் சென்றார் ரஜினிகாந்த். அந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது. ரஜினிக்குப் பிடித்த இமயமலை, காத்மண்டு பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடக்க இருக்கிறது. இதில் விஜய் சேதுபதி, ரஜினிக்கு வில்லனாக நடிக்கிறார். திரு ஒளிப்பதிவு செய்கிறார். அனிருத் இசையமைக்கிறார். இதன் முதல் கட்டப் படப்பிடிப்பை ஒரு மாதத்துக்குள் முடிக்க படக்குழு முடிவு செய்துள்ளது.
இந்நிலையில் ’காலா’ படத்தை ரசிகர்கள் கொண்டாடி வரும் தகவல் ரஜினிகாந்துக்குத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.