’எந்திரன்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ஷங்கர், ரஜினி, ஏ.ஆர்.ரகுமான் கூட்டணி, ’2.0’ படத்தை உருவாக்கி வருகிறது. லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் இந்தி நடிகர் அக்ஷய்குமார் வில்லனாக நடிக்கிறார். எமி ஜாக்சன் ஹீரோயின். இதன் இறுதிகட்டப் படப்பிடிப்பு இப்போது நடந்து வருகிறது. டெக்னிக்கலாக பல புதுமைகளை இயக்குனர் ஷங்கர் இதில் புகுத்தியுள்ளார். இதனால் ஹாலிவுட் படங்களுக்கு சவால் விடும் விதமாக இந்தப் படம் இருக்கும் என்கிறது படக்குழு.
இந்தப் படத்துக்காக சென்னை பூந்தமல்லி அருகே உள்ள, ஈவிபி தீம் பார்க்கில், பிரத்யேக அரங்கு அமைத்து படப்பிடிப்பு நடத்தப்பட்டது. அங்கு சென்னை போன்ற ஒரு பிரமாண்ட நகரையே பல கோடி ரூபாய் செலவில் உருவாக்கியிருந்தனர். அதில் முக்கியமானது வளைந்து நெளிந்த சாலைகள். கிளைமாக்ஸ் சண்டைக் காட்சியில் ரஜினிகாந்த், இந்தச் சாலையை அழிப்பது போன்ற காட்சிகள் இடம்பெறுகிறது. இந்த காட்சியில் ரஜினியின் நடிப்பு மிக ஆக்ரோஷமாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. இதைப்போன்று பல்வேறு விதமான காட்சிகளும் ஈவிபி-யில் படமாக்கப்படுகிறது.