இரண்டு மாதங்களில் மீண்டும் ரசிகர்களை சந்திக்கப் போவதாக நடிகர் ரஜினிகாந்த் கூறியிருப்பது அரசியலில் நுழைய அச்சாரம் போடுகிறாரா என்ற கேள்வியை மீண்டும் எழுப்பியுள்ளது.
பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் காலா. மும்பையில் நடைபெற்ற இதன் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்ததையொட்டி இன்று சென்னை திரும்பினார் ரஜினிகாந்த். அப்போது வழக்கம்போல செய்தியாளர்கள் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர். அதற்கு பதிலளித்து பேசிய நடிகர் ரஜினிகாந்த் “காலா படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு திருப்திகரமாக அமைந்தது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு வரும் 24 ஆம் தேதி தொடங்கும். இரண்டு மாதங்களில் மீண்டும் ரசிகர்களை சந்திப்பேன்” என்றார்.
கடந்த சில தினங்களுக்கு முன், சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் தனது ரசிகர்களை ரஜினி சந்தித்தார். அப்போது அவர்களுடன் தனித்தனியாகவும் புகைப்படம் எடுத்துக் கொண்டார். தமிழகத் தலைவர்கள் நல்லவர்கள்தான். ஆனால் நாட்டில் சிஸ்டம் சரியில்லை என்று அரசியல் சாயலில் பேசியதால் அவர் அரசியலுக்குள் நுழையப் போகிறார் என பரபரப்பாக பேசப்பட்டது.
ரஜினிகாந்த் அரசியலுக்குள் நுழைகிறார் என ஏற்கனவே அவ்வப்போது பேச்சுகள் வருவதும் அது நின்றுபோவதும் சகஜம்தான். ஆனால் இந்த முறை அப்படியில்லை. மீண்டும் ரசிகர்களை சந்திக்க திட்டமிட்டிருக்கிறார் ரஜினி. ஜெயலலிதா மறைவிற்குப் பின் வெளிப்படையாக ரஜினி அரசியல் குறித்து தற்போதுதான் வாய் திறந்து பேசி வருகிறார். அதுவும் திமுக தலைவர் கருணாநிதியும் ஓய்வில் இருக்கிறார். இந்நிலையில் அந்த வெற்றிடத்தை பயன்படுத்தி ரஜினி தமிழகத்தில் அரசியலில் நுழைவாரா என அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக ரஜினியும் தனது காய்களை அரசியல் பாதையில் முன்னோக்கியே நகர்த்தி வருவதாக தெரிகிறது.