எனது வேலை சினிமா, அந்த வேலையைச் செய்ய விடுங்கள் என்று நடிகர் ரஜினிகாந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.
பா.இரஞ்சித் இயக்கும் காலா படப்பிடிப்பு மும்பையில் நாளை தொடங்க இருக்கிறது. இதில் கலந்துகொள்வதற்காக ரஜினி நாளை மும்பை செல்ல இருக்கிறார். இந்தநிலையில், சென்னை போயஸ் தோட்ட இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினியிடம் அரசியல் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அந்த கேள்விக்குப் பதிலளித்த ரஜினி, காலா படத்தின் படப்பிடிப்பு மும்பையில் தொடங்க இருக்கிறது. அதில் கலந்துகொள்ள நான் மும்பை செல்ல இருக்கிறேன். உங்களது வேலையை நீங்கள் செய்துகொண்டிருக்கிறீர்கள் (செய்தியாளர்களை நோக்கி), நடிப்பது எனது தொழில் என்பதால் நான் அதைச் செய்து கொண்டிருக்கிறேன். எனது வேலையை செய்ய விடுங்கள் என்று அவர் கூறினார். ரஜினிகாந்த் வரும் ஜூலையில் புதிய கட்சி தொடங்குவதாக வெளியான தகவலை, அவரது அண்ணன் சத்தியநாராயணா மறுத்திருந்தார். ரசிகர்களுடன் 2ஆவது மற்றும் 3ஆவது கட்டமாக சந்திப்புகள் முடிந்தபிறகே அரசியல் குறித்த இறுதி முடிவினை ரஜினிகாந்த் எடுப்பார் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

