‘தர்பார்’திரையிடாததால் ரஜினி ரசிகர்கள் ரகளை... விரட்டியடித்த போலீஸ்...!
ரஜினிகாந்த் நடித்து வெளியாகியுள்ள தர்பார் திரைப்படம் திண்டுக்கல் நகர் பகுதிகளில் திரையிடப்படாததால் ரஜினி ரசிகர்கள் பேனர்களை கிழித்து ரகளையில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் விரட்டி அடித்தனர்.
தமிழகம் முழுவதும் ரஜினிகாந்த் நடித்து இன்று வெளியாகியுள்ள தர்பார் திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. திண்டுக்கல் நகர் பகுதியில் உள்ள 11 திரையரங்குகளில் தர்பார் திரைப்படம் வெளியாகும் என ரசிகர்கள் நேற்று இரவு முதலே காத்திருந்தனர். இந்நிலையில் இன்று காலை 10 மணி ஆகியும் ரசிகர்களை திரையரங்குகளுக்கு உள்ளே அனுமதிக்கவில்லை.
பின்னர் திரையரங்க நிர்வாகம் இன்று காட்சிகள் கிடையாது என அறிவிப்பு செய்தனர். இதனால் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்த ரஜினி ரசிகர்கள் ஆத்திரம் அடைந்து ரவுண்ட் ரோடு பகுதியில் உள்ள மற்றொரு திரையரங்கில் வைத்திருந்த பேனரை கிழித்து ரகளையில் ஈடுபட்டனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ரகளையில் ஈடுபட்டவர்களை விரட்டி அடித்து அப்புறப்படுத்தினர்.
இதனால் திண்டுக்கல் ரவுண்டு சாலை மிகவும் பதட்டமாக காணப்பட்டது. இதுகுறித்து திரையரங்கு உரிமையாளர்களிடம் கேட்டபோது திரைப்படத்தை விநியோகிக்கும் விநியோகஸ்தர் கேட்கும் தொகை தங்களுக்கு கட்டுப்படி ஆகாது என்பதால் படத்தை வாங்கவில்லை எனவும் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறோம் எனவும் தெரிவித்தனர்.