ரஜினி - கமல் நடித்ததுதான்... ஆனால், ருத்ரய்யாவின் படைப்பு 'அவள் அப்படித்தான்'!

ரஜினி - கமல் நடித்ததுதான்... ஆனால், ருத்ரய்யாவின் படைப்பு 'அவள் அப்படித்தான்'!
ரஜினி - கமல் நடித்ததுதான்... ஆனால், ருத்ரய்யாவின் படைப்பு 'அவள் அப்படித்தான்'!

இருபெரும் நடிகர்களான கமல், ரஜினியை வைத்து, தான் படைக்க நினைத்த சினிமாவைத் தந்த அசாத்திய திரை ஆளுமை ருத்ரய்யாவின் நினைவு தினம் இன்று (நவ.18). இதையொட்டிய சற்றே விரிவான சிறப்புப் பகிர்வு.

தமிழ்ச் சமூகம் 1970-களில் எப்படி இருந்தது என்பதை சற்று சிந்திப்போம். நாட்டின் பிரதமராக இந்திரா காந்தி இரண்டு முறை (1966-71, 1971-77) பதவி வகித்துவிட்டார். ஆனாலும், 'பெண்கள் முன்னேற்றம்' என்பது இங்கே ஏட்டினில் எழுதிவைத்து எட்டி எட்டிப்பார்க்கப்படும் ஒரு வஸ்து. இந்தியப் பிரதமரே ஒரு பெண்ணாக இருந்தபோதும் கூட, பெண்களை போகப்பொருளாகவும், குழந்தை உற்பத்தி செய்யும் இயந்திரமாகவும் பார்த்த சமூகம், சொல்லப்போனால் இன்னும் பார்த்துக்கொண்டிருக்கும் காலகட்டம். தொடர்ந்து சமூகம் கொடுக்கும் அழுத்தம், பெண்கள் தங்களைத் தாங்களே எல்லோருக்கும் நிரூபிக்கவேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கி விட்டிருந்தது. சமூகம் செய்துகொண்டிருந்ததை சினிமாவும் செய்தது. இரண்டையும் பிரித்தறிய தெரியாத மனிதர்களல்லவா நாம்?

உண்மையில், 1977-ல் '16 வயதினிலே' போன்ற படங்களின் வருகை தமிழ் சினிமாவை சற்றே அழகாக்கத் தொடங்கியது. 'ஆட்டுக்கார அலமேலு' போன்ற படங்கள் வந்து பட்டிதொட்டி எல்லாம் வெற்றிககொடி காட்டினாலும்கூட இடையே 'அவர்கள்' போன்ற படங்களும் வந்துகொண்டுதான் இருந்தன. 'புதிய அலை' சினிமா சாத்தியமான ஒன்றே என்பது மெல்ல நிரூபணம் ஆகத்தொடங்கியது. அடுத்தடுத்த வருடங்களிலேயே 'முள்ளும் மலரும்', 'சிகப்பு ரோஜாக்கள்' போன்ற படங்கள் வெளிவந்து, அதை உறுதி செய்தன. இதற்கிடையில்தான் 'அவள் அப்படித்தான்' என்கிற படமும் வெளியானது.

இந்தப் படத்தை பற்றிய முதல் ஆச்சர்யம் என்னவென்றால், ரஜினியும் கமலும் ஒன்றாக நடிக்கத் தொடங்கி உச்சத்தில் இருந்த காலம் அது. கமல் நாயகன், ரஜினி வில்லன் என்று கதை அமைத்து பூஜை போடும் அன்றே எல்லா ஏரியாவும் விற்றுத்தீர்ந்துவிடும். அப்படி ஒரு காலகட்டத்தில் அதே கமல், ரஜினியை வைத்துக்கொண்டு இப்படி ஒரு கதை சொல்ல முடியும் என்று நம்பிய அந்த இயக்குனரை முதலில் நாம் புரிந்துகொள்ள முயற்சிக்கவேண்டும். பாராட்டுவதைவிட அது முக்கியம்.

ரஜினி - கமல் படமல்ல...

அவள் அப்படித்தான்... 'மஞ்சு' என்கிற பெண்ணின் கதை இது. கமல் - ரஜினி கதை அல்ல. சொல்லப்போனால் கமல் - ரஜினி இருவருமே ஸ்ரீப்ரியா நடித்த மஞ்சு கதாபாத்திர பயணத்தின் இடையில் வரும் இரண்டு கதாபாத்திரங்கள் அவ்வளவே. பெண்களை போகப்பொருளாகவும், அடிமையாகவும் மட்டுமே பார்க்கிற ரஜினி கதாபாத்திரம். அந்தக் கதாபாத்திரத்தின் மொழியிலேயே சொல்வதென்றால் "ரெண்டு வகையான பெண்கள்கிட்ட எப்பவுமே கவனமா இருக்கணும். ஒண்ணு காமவெறி பிடிச்ச பெண்... இன்னொன்னு தன் சொந்தக்கால்லதான் நிப்பேன்னு சொல்ற பெண்... ரெண்டுபேரையும் திருப்திப்படுத்தவே முடியாது..." - இப்படி பெண்களை முன்முடிவோடு அணுகும் ரஜினி கதாபாத்திரம்.

இதற்கு நேரெதிராக கமல் கதாபாத்திரம் ஒரு ஆப்டிமிஸ்ட். பொறுமையாக, நிதானமாக எல்லாவற்றையும் அணுகும் ஓர் ஆண். எந்த முன்முடிவும் இன்றி ஒரு மனிதரை அவரால் அணுகமுடியும். எந்நேரமும் தன் முடிவை மட்டுமே தூக்கிக்கொண்டு அலையாமல், சரியான சந்தர்ப்பம் அமைந்தால் அம்முடிவை மாற்றிக்கொள்ளும் இயல்புடையவர்.

மேற்கண்ட பத்தியில் நான் எழுதியிருப்பதைப் பார்த்து கமல் கதாபாத்திரம் 'நல்லவர்', ரஜினி கதாபாத்திரம் 'கெட்டவர்' என்கிற முடிவுக்கு வந்துவிடாதீர்கள். கதை அதுவல்ல. இந்த இரண்டு கதாபாத்திரங்களும் ஒரு சமூகத்தின் சக்கரத்தில் இருக்கும் பாகைகள். இவர்களைப்போன்ற பல்வேறு குணாதிசயம் கொண்ட மனிதர்களை வைத்துதான் அது சுற்றுகிறது. ருத்ரய்யா என்கிற படைப்பாளி எங்கே நிமிர்ந்து நிற்கிறார் என்றால், அது இந்த சமனான ஒரு விஷயத்தை, அதாவது 'பேலன்ஸ்' என்கிற விஷயத்தை அவர் திரையில் நிறுவியதுதான்.

இந்த பேலன்ஸ் ஒரு விவாதத்தை இயல்பாகவே திரையில் கொண்டுவருகிறது. திரைப்படம் பார்க்கத் தொடங்கும் ஒரு சராசரி ரசிகன், அதுவரை நல்லதுக்கும் தீயதுக்குமான போரை மட்டுமே பார்த்தவனாக இருந்தவன். அதே திரையில் அவனே உலாவுவதை முதன்முறையாக காண்பதே அவனுக்கு அலாதியான அனுபவமாகத்தான் இருந்திருக்கும். அதைத்தான் ருத்ரய்யா அதிதீவிரமாக இந்தப் படத்தின் மூலம் செய்தார்.

ருத்ரய்யாவின் கூர்மையான பார்வை!

"ஆங்... கேமரா வச்சி ஷூட் பண்ணுவீங்களா? அப்போ எப்படி மேக்கப் போட்டா நல்லா இருக்கும்?" என ஒரு சமூகசேவகி கேட்க, அதற்கு மஞ்சு, "எப்பவும் போடுவீங்களே ஒரு சொசைட்டி மேக்கப்... அதுபோட்டாலே போதும்" என்பாள். இந்த சொசைட்டி மேக்கப் யார்தான் போடுவதில்லை என்கிற கேள்வியும் இங்கே தொக்கிநிற்க, அதற்கு பதிலாக "மஞ்சு அதை போடுவதில்லை" என்பது பதிலாக கிடைக்கிறது. எதையும் நேரடியாக அணுகுபவள். பதிலுரைப்பவள். இந்தக் கேள்வியோ அல்லது இந்த பதிலோ இந்த இடத்தில் சங்கடத்தை உண்டாக்கும் என்பதை எல்லாம் அறியாதவள். அப்படி உண்டாக்கினாலும்கூட அதைப்பற்றி கிஞ்சித்தும் யோசிக்காதவள். இதுதான் மஞ்சு என்று தெரிந்துகொள்ள ஐந்தே நிமிடங்கள் அவளோடு நீங்கள் பேசிக்கொண்டிருந்தால் போதும். அவள் அப்படித்தான்.

"இந்தப் பெண்களும் அரசியல்வாதிகளும் ஒண்ணு... அவங்க நினைச்சதை அடைய என்ன வேணும்னாலும் பண்ணுவாங்க.." என்கிறது ரஜினி கதாபாத்திரம். அதே கேரக்டர், மஞ்சுவிடம் காமம் கொண்டு வழிகின்ற பொழுதில் அவர் நெற்றியில் திருநீர் பட்டை இருக்கும். தினந்தோறும் அவர் நெற்றியில் அது இருக்கும். டாகுமென்ட்டரி எடுக்க நினைக்கும் தன் நண்பனுக்கு உதவிசெய்யும் நல்லமனம் கொண்ட ரஜினி கேரக்டர், தினமும் கடவுளை வணங்கி நெற்றியில் பட்டை போட்டுக்கொள்ளும் கேரக்டர், பெண்களை போகப்பொருளாக மட்டுமே பார்க்கிறான் என்பதன் பின்னால் இருக்கும் அரசியல் கூர்மையானது. இந்தக் கூர்மையே ருத்ரய்யாவின் பார்வைக்கு சான்று.

மஞ்சுவின் வீட்டிற்கு கமல் செல்லும்போது, அங்கே ஒரு போஸ்டர் சுவற்றில் ஒட்டப்பட்டிருக்கும். பெரும் கடற்பரப்பில் தன்னந்தனியாக பறந்து செல்லும் ஒற்றைப்பறவை ஒன்றின் படம் அது. மஞ்சுதான் அப்பறவை. நாள்தோறும் அவள் பணியிடத்தில் காணும் ஆண்கடல் அப்படிப்பட்டது. அதைத்தாண்டிதான் ஒற்றை ஆளாக அவள் பறக்கிறாள். அக்கடல் பரப்பெங்கும் "நீலம்". இந்தக் குறியீடுகள் எல்லாமே தமிழ் சினிமா கண்டிறாதது. படத்தின் ஒளிப்பதிவும் கூட.

மஞ்சு தன் கதையை ஓர் அர்த்தமற்ற ராத்திரியில் கமலிடம் சொல்லும் காட்சியை கவனியுங்கள். கருப்பு - வெள்ளை படம் இது. கமலின் முகம் பாதி மட்டும் வெளிச்சத்தில் இருக்க, மஞ்சுவின் முகமோ முற்றிலும் இருட்டில் இருக்கும். நெருங்கும் கேமராவுக்கு மஞ்சுவின் முகம் தெரியாது. ஆயினும் மஞ்சுவின் கதையோ அந்த இருட்டை விட இருளானது. இப்படி ஒரு கோணம் வைக்க தமிழ் சினிமா எத்தனை காலம் காத்திருந்தது தெரியுமா?

உண்மையில், மஞ்சுவின் பார்வை சற்றே ஒருமுகமானதுதான். மஞ்சுவின் தாய் - தந்தைக்கிடையில் என்ன பிரச்னை என்பதெல்லாம் படத்தில் சொல்லப்படவில்லை. அது தேவையும் இல்லை. ஆனால், மஞ்சுவின் தாயாருக்கு வேறொருவரை பிடித்திருக்கிறது. அவரோடு ஊர்சுற்றுகிறார். உறவு கொள்கிறார். தன் வயதுவந்த மகளையும் கூட அவரோடு எல்லா இடங்களுக்கும் கூட்டிச்செல்கிறார்.

மஞ்சுவின் தாயார், தான் விரும்பிய வாழ்க்கையை, தனக்குப் பிடித்தவரோடு கழிப்பதை ஏன் மஞ்சு வெறுக்கவேண்டும்? உண்மையில் மஞ்சுவை விட இவ்விஷயத்தில் பலபடிகள் முன்னே நிற்பது மஞ்சுவின் தாயார்தான். ஆனால், மஞ்சு இதற்காகவே தன் தாயாரை வெறுக்கிறாள். தன்னைச் சுற்றி ஓர் இரும்புவேலி உருவாக்கிக்கொள்கிறாள். மஞ்சுவை நாயகியாக்கிய ருத்ரய்யா, மஞ்சுவின் தாயாரை வில்லியாக்கி இருக்கிறார். படத்தின் மீது எனக்கிருக்கும் மிகப்பெரிய கேள்வி இது.

அதேபோல் தன் தோழி கலாவிடம் மஞ்சு கேட்கும் ஒரு கேள்வி முக்கியமானது. "எப்படி இந்த எந்த டென்ஷனும் இல்லாம நீ இவ்ளோ சந்தோசமா இருக்க?" என வினவுவாள். எதார்த்தம் என்கிற விஷயத்தை புரிந்துகொண்ட கலாக்கள் கண்டிப்பாக மஞ்சுவைப்போல் கலங்கியோ அல்லது குழம்பியோ நிற்பதில்லை. ஆனால், மஞ்சுக்கள் அந்தக் கோட்டிற்கு உள்ளே போகவே விரும்புவதில்லை. கலாக்களின் இடமும், உணர்ச்சியும் மஞ்சுக்களுக்கு என்றும் அந்நியமானதுதான். யார் கண்டார் எதிரில் இருக்கும் கலா, எப்போது, தான் மஞ்சுவாய் ஆவோம் என்றுகூட சிந்தித்துக்கொண்டிருக்கலாம்.

கல்லூரிப் பெண்களிடத்தில் கமல் திருமணத்திற்கு முன்பான பாலுறவு பற்றியும், கருக்கலைப்பு செய்வது பற்றியும் கேள்வி கேட்கும் இடம் அட்டகாசமானது. அதை திரையில் அதே டாக்குமென்டரி தன்மையோடு சொன்னவிதமும் கூட அருமை. அதேபோல் கூலிவேலை செய்யும் பெண்களிடமும், நடுத்தர குடும்பத்து பெண்களிடமும் அவர் கேட்கும் கேள்விகளும் பார்க்கவே அவ்வளவு அழகு. அதிலும் ஓர் உயரமான பெண்மணி ஒரு வெட்கச் சிரிப்பு சிரிப்பார் பாருங்கள்... சமீபத்தில் சில மலையாள சினிமாக்களில் மட்டுமே அதை நான் பார்த்திருக்கிறேன். அதை 1978-லேயே ருத்ரய்யா செய்திருக்கிறார். ரசிகனய்யா நீர்!

படத்தில் நான் வியந்த மற்றொரு விஷயம் படத்தொகுப்பு. வழக்கமாக கேமரா ஒரு வீட்டை நோக்கி நகர, பின் மெதுவாக உள்ளே சென்று அங்கே இருக்கும் மனிதர்களை காட்ட, அவர்கள் நலவிசாரிப்புகளுக்கு பின்னர் பேசுவதாக எல்லாம் காட்சி வைக்காமல், ஒரு காட்சி முடிந்த மறுநொடியே எந்தவித பூச்சும் இல்லாமல் அடுத்தக் காட்சிக்குள் நுழைந்துவிடுகிறது. இன்றும்கூட இப்படியான காட்சித் தொகுப்புகள் நாம் திரையில் காண்பதில்லை என்பதே உண்மை. ருத்ரைய்யாவின் விஷன் உண்மையில் பிரமிப்பானதும் கூட.

ஆனால், எனக்கான ஆச்சர்யமெல்லாம் என்னவென்றால் இப்படி ஒரு பொக்கிஷத்தை காட்சிப்படுத்திய ருத்ரய்யா, ஏன் 'கிராமத்து அத்தியாயம்' எடுத்தார்? இந்தப் படம் செய்த எந்தவொரு மேஜிக்கையும் எப்படி அதில் நிகழ்த்தாமல் போனார்? காலம் முழுக்க அவரொரு One Film Wonder-ஆகவே இருந்துவிட்டு போனதன் மர்மம் என்ன? 'ராஜா என்னை மன்னித்துவிடு' ஒருவேளை வந்திருந்தால் 'கிராமத்து அத்தியாயம்' தந்த காயம் மறைந்திருக்குமோ? மஞ்சுவின் வாழ்க்கை போலவே ஆயிரம் கேள்விகள். விடை சொல்ல யாருமில்லை.

ருத்ரய்யா... அவர் இப்படித்தான்!

ருத்ரய்யா சொக்கலிங்கம் திரைப்பட இயக்குனநருக்குப் படித்தவர். சொல்லப்போனால், அவர் இயக்கிய 'அவள் அப்படித்தான்' படம்தான் அந்தத் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி படிப்புக்கான கல்லூரியில் இருந்து ஒருவர் வெளியே வந்து இயக்கிய முதல்படமும்கூட.

அந்த முதல் படமே சி.என்.என் வெளியிட்ட இந்தியாவின் 100 சிறந்தப் படங்கள் பட்டியலில் இடம்பெற்ற பெருமையைப் பெற்றது. பிரெஞ்சு புதிய அலை' சினிமாமீது பெரும் மயக்கம் கொண்டிருந்தார் ருத்ரய்யா. அதன் பாதிப்புதான் 'அவள் அப்படித்தான்' படத்தின் விதை என்று கூறினால் அது மிகையில்லை.

நடப்பதில் மிகுந்த ப்ரியமுள்ளவர் ருத்ரய்யா. சென்னையின் எல்லா இடங்களையும் நடந்தே அளந்தவர் என்றும்கூட சொல்லலாம். நடக்கும்போது முழுக்க யோசனைகளை அவர் மனதிற்குள் ஓடிக்கொண்டே இருக்குமாம். அந்த யோசனைகள், எண்ணங்கள் எல்லாம் சேர்ந்துதான் அவரின் படைப்புகளுக்கான அச்சாரமாக இருந்தது.

 அந்த நேரத்திய தமிழ்ப் படங்களை பார்ப்பதையே வெறுத்தவர் ருத்ரய்யா. அப்படியே தப்பித்தவறி பார்க்கப்போனால்கூட இடைவேளையோடு எழுந்து வந்துவிடும் சம்பவம் பலமுறை நடந்திருக்கிறது. ருத்ரய்யா மனிதர்களை நேசித்தவர்; சினிமாவை அல்ல. ஆனால், சினிமா என்கிற ஊடகத்தில் இருக்கும் சாத்தியங்களை அவர் உணர்ந்தபொழுது 'அவள் அப்படித்தான்' பிறந்தது. ஆயினும்கூட அவருக்கு நெருங்கியவர்களே செய்த துரோகங்கள் காரணமாக அவரால் அவர் நினைத்த பல விஷயங்களை செய்ய இயலாமலேயே போனது. இறுதிவரை எப்படியும் இதைச் செய்துவிட வேண்டும் என்கிற கனல் அணையாதவண்ணம் பார்த்துக்கொண்டார். அதுதான் ருத்ரய்யா...

இயக்குநர் ருத்ரய்யாவின் நினைவுகளோடு!

- கட்டுரையாளர்: பால கணேசன்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com