‘ஆர்.ஆர்.ஆர்.’ ஆஸ்கர் பரப்புரை செலவு ரூ.80 கோடியா? - விமர்சனத்துக்கு முற்றுப்புள்ளி!

‘ஆர்.ஆர்.ஆர்.’ படத்தின் ஆஸ்கர் விருது நடைமுறைக்கு 80 கோடி ரூபாய் வரை செலவு செய்ததாக தகவல் வெளியான நிலையில், படத்தின் நிர்வாக தயாரிப்பாளர் எஸ்.எஸ். கார்த்திகேயா விளக்கமளித்துள்ளார்.
‘ஆர்.ஆர்.ஆர்.’ ஆஸ்கர் பரப்புரை செலவு ரூ.80 கோடியா? - விமர்சனத்துக்கு முற்றுப்புள்ளி!

‘பாகுபலி’ பிரம்மாண்ட வெற்றிக்குப்பிறகு ராஜமௌலி இயக்கத்தில் மெகா பட்ஜெட்டில் உருவான திரைப்படம் ‘ஆர்.ஆர்.ஆர்.’. பான் இந்தியா படமாக உருவாகிய இந்தப் படத்தில், ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர்., அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி, ஸ்ரேயா சரண், ஆலியா பட், ரே ஸ்டீவன்சன், ஒலிவியா மோரிஸ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். 1920-ம் ஆண்டு காலக்கட்டத்தில், ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய தெலுங்கு மாநிலத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர்களான, அல்லூரி சீதாராம ராஜு மற்றும் கொமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட உருவான கற்பனைக் கதைதான் ‘ரத்தம் ரணம் ரௌத்தரம்’ எனப்படும் ‘ஆர்.ஆர்.ஆர்.’ திரைப்படம்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்பட 5 மொழிகளில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 25-ம் தேதி உலகம் முழுவதும் வெளியான இந்த திரைப்படம், 1150 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை ஈட்டியது. இதற்கு முன்னதாக ராஜமௌலியின் இயக்கத்தில், பிரபாஸ் நடிப்பில் வெளியான ‘பாகுபலி : தி கன்குளூஷன்’ திரைப்படம் 1,000 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்த நிலையில், இந்தப் படமும் அந்தச் சாதனையை படைத்திருந்தது. இதனால், 2023-ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பில் அனுப்பப்படும் படமாக ‘ஆர்.ஆர்.ஆர்.’ இருக்கும் என்று கூறப்பட்டு வந்தநிலையில், இந்தப் படம் அனுப்பப்படவில்லை. இதையடுத்து தனிப்பட்ட முறையில், ஆஸ்கர் விருதுக்கு இந்தப் படம் அனுப்பப்பட்டது.

மேலும் ஆஸ்கர் விருது பரப்புரைக்காக (Campaign) 80 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளரான டிவிவி தனய்யாவிடம் கேட்டதற்கு, ஆஸ்கர் விருது பரப்புரைக்காக தான் எந்த செலவும் செய்யவில்லை என்றும், சொல்லப்போனால் இயக்குநர் ராஜமௌலி மற்றும் படக்குழுவினருடன் தான் தொடர்பிலேயே இல்லை என்றும் தெரிவித்திருந்தார். இதுபெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், ‘பாகுபலி’ படத்தை தயாரித்த நிறுவனமான ஆர்கா மீடியாவின் நிறுவனர்களான ஷோபு யர்லகடா மற்றும் பிரசாத் தேவினேனி தான், ‘ஆர்.ஆர்.ஆர்.’ படத்திற்கான ஆஸ்கர் பரப்புரைக்கு செலவு செய்ததாகவும் கூறப்பட்டது.

எனினும், ‘ஆர்.ஆர்.ஆர்.’ படத்தில் வரும் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு கோல்டன் குளோப் விருதும், ஆஸ்கர் விருதும் இசையமைப்பாளர் கீரவாணிக்கு கிடைத்தது. படம் வெளியாகி ஒருவருடத்தை நிறைவுசெய்துள்ள நிலையில், இந்தப் படத்தின் நிர்வாக தயாரிப்பாளரும், ராஜமௌலியின் மகனுமான எஸ்.எஸ். கார்த்திகேயா சமீபத்தில் யூட்யூப் சேனலுக்கு இதுதொடர்பாக விளக்கமளித்துள்ளார்.

அதில், ‘ஆஸ்கர் விருது பரப்புரைக்கு ஹாலிவுட் படங்களுக்கு இருப்பது போன்று, பெரிய தயாரிப்பு நிறுவன ஸ்டூடியோ எங்களுக்கு பொருளாதார ரீதியாக ஆதரவுத் தர பின்னணியில் இல்லை. ஆஸ்கர் விருதுக்கான தேர்வில் இந்தியா சார்பில் ‘ஆர்.ஆர்.ஆர்.’ படத்தை அனுப்பாமல் போனது வருத்தம்தான். தனிப்பட்ட முறையில் ஆஸ்கர் விருதுக்கு நாங்கள் அனுப்பினோம். எனினும், முதலில் 5 கோடி ரூபாய் மட்டுமே செலவு செய்வது என்று முடிவு செய்தோம். அதையும் 3 கட்டமாக செலவு செய்யலாம் என்று நினைத்தோம்.

நாமினேஷனுக்கு முன்னதாக இரண்டரை கோடியில் இருந்து மூன்று கோடி செலவு செய்யலாம் எனத் திட்டமிட்டு செலவு செய்தோம். நாமினேஷனுக்கு படம் போனதும் ரூ.8.5 கோடி வரை செலவு செய்தோம். 5 கோடி ரூபாய் வரையில் திட்டமிட்ட நிலையில், கூடுதலாக பணம் செலவு ஆகிவிட்டது. ஏனெனில் நியூயார்க் நகரில் கூடுதலாக சிறப்புக் காட்சிகள் வெளியிட வேண்டியிருந்தது. அதனால் செலவு கொஞ்சம் அதிகரித்து விட்டது. இதுதான் ஆஸ்கர் விருது நடைமுறைக்காக உண்மையாக நாங்கள் செலவு செய்த தொகையாகும். ஆஸ்கர் விருதை பணம் கொடுத்துதான் எனது தந்தை வாங்கினார் என்று சொல்வது அப்பட்டமான பொய். அப்படி வாங்கவும் முடியாது என்பது அனைவரும் அறிந்ததே” என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com