தமிழ் சினிமாவின் ‘ராஜபார்வை’ - கமல்ஹாசனின் புதிய முயற்சி.,
தனது துறை சார்ந்த தொடர் பரிட்சார்த்தங்களை செய்கிறவர்கள் பலர் தங்கள் சமகாலத்தில் பெரிதும் கவனிக்கப்படுவதில்லை. ஆனாலும் அங்கீகாரங்கள் எதையும் எதிர்பார்க்காமல் ஒரு மனிதன் தொடர்ந்து அதை செய்கிறான் என்றால் அதற்குப் பின்னாள் அவன் தனது துறை மீது வைத்திருக்கும் தீர்க்கமான காதல் தவிர வேறு எதுவும் காரணமாக இருக்க முடியாது. அவ்வகையில் கமல்ஹாசன் எனும் கலை அரக்கன், தொடர்ந்து பல சோதனைகளை தான் நேசிக்கும் சினிமாவின் மீது நிகழ்த்திக் கொண்டே இருக்கிறார். பல முதன் முதல்களுக்கு சொந்தக்காரரான அவர், ஒரு திரைப்படத்தில் முழுக்க முழுக்க பார்வையற்ற நாயகனாக நடித்ததின் மூலம் அதுவரை தமிழ் சினிமா ரசிகனுக்கு சினிமா மேல் இருந்த டெம்ப்லேட் பார்வையினை ராஜ பார்வையாக மாற்றினார். தொடர்ந்து உலக அரங்கில் தமிழ் சினிமாவுக்கு ஒரு இடம் ஒதுக்கப்படுகிறது என்றால் அந்த இருக்கையை வடிவமைத்த சினிமாக்களில் ராஜபார்வை ஒரு அசல் சாதனை.
ராஜபார்வை (1981)
தனது சிறுவயதிலேயே தாய் இறந்துபோனதால் தந்தை இரண்டாவது திருமணம் செய்துகொள்கிறார். மாற்றாந் தாயால் வளர்க்கப்படும் நாயகன் ரகு தாய்பாசத்தை இழந்து வளர்கிறான். தனது தந்தை இறந்த பாதிப்பில் ஏற்பட்ட காய்ச்சலில் அவன் தனது கண் பார்வையினை இழக்கிறான். இந்நிலையில் இப்படியான குறைபாடுள்ள குழந்தை தன்னிடம் வளர்வதை கவுரவக் குறையாக கருதும் மாற்றாந் தாய், ரகுவை பார்வையற்றோர் பள்ளியில் சேர்த்துவிட அங்கு ஆதரவற்ற குழந்தைகளோடு ஒரு வயலின் இசைக்கலைஞாக உருவாகிறான் ரகு.
நிராகரிப்புகள் நிறைந்த வாழ்க்கை என்றாலும் கூட ரகு தனக்கு நடந்த சோகங்களுக்கு ஒட்டு மொத்த சமூகத்தையும் குறைகூறும் ஒரு சராசரியாக இருக்கவில்லை. மாறாக பார்வையில்லை என்பதைத் தவிர வேறு எந்த குறையும் தனக்கு இல்லை என்ற தன்னம்பிக்கையோடு சுதந்திரமாக வாழ கற்றுக் கொண்டிருந்தான் அவன்.
இசை, மது என ஒரு கொண்டாட்ட வாழ்வை வாழும் சீனு (ஓய்.ஜி.மகேந்திரன்), ரகுவின் நெருங்கிய நண்பன். இந்நிலையில் நான்ஸி என்ற இளம்பெண் இவர்களுக்கு அறிமுகமாகிறாள். நான்ஸி பார்வையில்லாதவர்கள் பற்றி ஒருகதை எழுதிக் கொண்டிருக்கிறாள். நாயகன் ரகுவிற்கும் நான்ஸிக்கும் இடையே காதல் பூக்கிறது. படத்தின் மொத்த சுவாரஸ்யங்களுக்கும் அவர்களின் காதல் பொறுப்பேற்கிறது. ஒரு மலர்கொத்து போல காட்சிகள் தோறும் வாசனை பரப்புகிறது அது.
பொதுவாக பார்வையில்லாதவர்கள் மீது நமக்கு பரிதாமமோ, இரக்கமோ உருவாகும் ஆனால் இப்படத்தில் வெகு இயல்பாக அவர்களின் வாழ்வையும் பார்வைக் குறை தாண்டி அவர்களின் ஆசாபாசங்கள் காதல், நட்பு, உறவு என நாம் கவனிக்கத் தவறிய பக்கங்களை அறிமுகம் செய்திருக்கும் கமல்ஹாசன், பரிதாபத்திற்கு பதிலாக பார்வையற்றோர் மீது பொறாமையினை ஏற்படுத்துகிறார். அவர்களின் பார்வையில் நிறங்கள் இல்லை, ஏற்ற தாழ்வுகள் இல்லை. நாட்டை ஆளும் ஒரு ராஜா எப்படி தன் குடிமக்களை பாகுபாடின்றி சமமாக பார்க்க வேண்டுமோ அப்படியான நேர்கொண்ட பார்வை அவர்களுடையது. அதனால் தான் இக்கதைக்கு ராஜபார்வை என பெயர் என்பது பற்றி ஒரு காட்சியில் விளக்கம் சொல்கிறாள் நான்ஸி. தனது கண்ணின் கருவிழியில் ஒரு நீள வளையத்தை ஏற்படுத்தியிருப்பது, எந்த ஒரு காட்சியிலும் தனக்கு உண்மையில் பார்வை தெரியும் என்பதை பார்வையாளனின் கண்கள் உணராமல் பார்த்துக் கொண்டது என கமல்ஹாசனின் மெனக்கெடல்கள் ஏராளம்.
பார்வையற்ற ரகு, நான்ஸியை வர்ணிக்கும் ”அழகே அழகின் அழகே…” என்ற பாடலை கண்ணதாசன் எழுதியிருப்பார். அதில் ஒரு வரி “மனக் கண்கள் சொல்லும் பொன் ஓவியம்” என இருக்கும். தனது காதலியை கைகளாலும் வாசைனையாலும் மட்டுமே உருவகப்படுத்திக் கொண்ட ஒரு இளைஞன் தன் மனக் கண்கள் வழியே பித்தேறிப் போன தனது காதலை வெளிப்படுத்தும் சொற்கள் அவை. ஆதி கலைகளில் ஒன்றாக ஒரு பெண்ணை வர்ணிப்பதையும் சேர்த்துக் கொள்ளலாம். காதலியின் முகம் பார்க்காமல் கைகளாலும் வாசனையாலும் மட்டுமே அவளை தரிசிப்பது வரம் தானே. இதனால் தொடர்ந்து காதலியின் முகம் மீது ஒரு ரகசிய ஓவியத்தை நாம் வரைந்து கொண்டே இருப்போம் தானே. இருப்பில் இல்லாமையினையும் இல்லாமையில் இருப்பினையும் ஒளித்துவைத்து வேடிக்கை காட்டும் பார்வையற்றவர்களின் காதல் உண்மையில் பொறாமைக்குறியது தான்.
ஒரு ஓவியத்திலிருந்து நிஜத்திற்கு மாறும் மார்பிங் காட்சி எல்லாம் பிலிம் சுருள் காலத்தில் சாதனை தான். சிலநொடிகளில் கடந்து போகும் அக்காட்சிக்கான மெனக்கெடலும் உழைப்பும் தான் நம்மை பல ஆண்டுகள் கழித்தும் அவை பற்றி அசைபோடச் செய்கிறது.
ரகு, நான்ஸி இவர்களின் காதலுக்கு குடும்பத்தில் எதிர்ப்பு வலுக்க நான்ஸிக்கு வேறு ஒருவருடன் தேவாலயத்தில் இன்னும் சிறிது நேரத்தில் திருமணம் நடக்கவிருக்கிறது. அவளது விசும்பல் ஒலியில் திருமணம் நின்று போகிறது. ரகு, நான்ஸியின் காதலானது நண்பன் சீனுவின் உதவியுடன் வெற்றியடைகிறது.
கமல்ஹாசனின் நூறாவது படமான ராஜபார்வையில் அவரது குடும்பத்தை சேர்ந்த எல்லோரும் ஏதோ ஒரு வகையில் சம்பந்தப் பட்டிருப்பார்கள். தனது ராஜபார்வைக்காக 1982ஆம் வருடம் சிறந்த நடிகருக்கான பிலிம் பேர் விருது பெற்றார் கமல். ஹாசன் பிரதர்ஸ் தயாரித்த இப்படத்தை சிங்கிதம் சீனிவாசராவ் இயக்கினார். வசூல் ரீதியாக தோற்றுப் போன படம் என அறியப்பட்ட போதிலும் எப்போதும் நாம் புறந்தள்ளிவிட முடியாத ஒரு சாதனை சித்திரம் இது.
பார்வையற்றவனை மையப்படுத்தி எடுக்கப்பட்ட மனக் கண்கள் சொல்லும் இந்த பொன் ஓவியத்தை அக் குறையுள்ளவர்களால் பார்க்கவியலாது என்பது வலி. காதலுக்கு கண் இல்லை என்பதை விட காதலிக்க கண்கள் தேவையில்லை என்பதே பொருத்தமாக இருக்கும்.