எந்திரன்-2 திரைப்படத்தை தயாரிக்கும் லைக்கா நிறுவனம் முறையாக வரி செலுத்திறதா என ஜிஎஸ்டி நுண்ணறிவுப் பிரிவினர் சோதனை நடத்தினர்.
தமிழகத்தில் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை அமலுக்கு வந்ததும் அது தொடர்பான முறைகேடுகளை கண்காணிப்பதற்காக 'ஜிஎஸ்டி இன்டெலிஜன்ஸ்' என்ற தனி புலனாய்வு பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. முறையாக ஜிஎஸ்டி வரி செலுத்தாமல் கள்ள மார்க்கெட்டில் பொருட்களை வாங்கி பயன்படுத்துபவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுப்பது இவர்களது பணியாகும். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நகைக்கடையில் ஜிஎஸ்டி வரி செலுத்தாமல் சட்ட விரோதமாக விற்பனை செய்து வந்த நகைக்கடை உரிமையாளரை கைது செய்தனர்.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த நடித்து ஷங்கர் இயக்கத்தில் எந்திரன் 2 படம் சூட்டிங் முடிவடைந்துள்ளது. இந்த படத்தை பிரபல சினிமா தயாரிப்பு நிறுவனமான லைக்கா தயாரித்துள்ளது. இதன் நிர்வாக அலுவலகம் தி.நகர் விஜயராகவா சாலையில் உள்ளது. இங்கு ஜிஎஸ்டி வரி செலுத்தாமல் பல முறைகேடுகள் நடந்து வருவதாக ஜிஎஸ்டி இன்டெலிஜன்ஸ் பிரிவு அதிகாரிகளுக்கு புகார்கள் வந்ததாக தெரிகிறது.
அதன்பேரில் ஜிஎஸ்டி நுண்ணறிவுப் பிரிவினர் லைக்கா நிறுவனத்தில் சோதனைகள் மேற்கொண்டனர். தயாரிக்கும் புதிய படத்திற்கான செலவு செய்யப்பட்ட தொகை எவ்வளவு மற்றும் சூட்டிங்குக்கு வாங்கப்பட்ட உபகரணங்கள் முறையாக ஜிஎஸ்டி வரி செலுத்தி வாங்கப்பட்டுள்ளதா என்பன உள்ளிட்டவை குறித்த விசாரணையை அதிகாரிகள் துருவி துருவி மேற்கொண்டதாக தெரிகிறது.