கேன்ஸ் விழாவில் திரையிடப்பட்ட ஏ.ஆர். ரஹ்மானின் ‘லி மஸ்க்’ - பிரமித்த நடிகர் மாதவன்!

கேன்ஸ் விழாவில் திரையிடப்பட்ட ஏ.ஆர். ரஹ்மானின் ‘லி மஸ்க்’ - பிரமித்த நடிகர் மாதவன்!
கேன்ஸ் விழாவில் திரையிடப்பட்ட ஏ.ஆர். ரஹ்மானின் ‘லி மஸ்க்’ - பிரமித்த நடிகர் மாதவன்!

கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட ஏ.ஆர். ரஹ்மானின் ‘லி மஸ்க்’ குறும்படத்தை நடிகர் மாதவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டியுள்ளார்.

பிரான்ஸ் நாட்டில் 75-வது கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா கடந்த 17-ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் முதல்முறையாக இந்தியாவில் இருந்து விளையாட்டு, இளைஞர்நலன், தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தலைமையில் 11 பேர் கொண்ட திரைப் பிரபலங்கள் குழு கலந்துகொண்டுள்ளனர்.

இந்த விழாவில் நடிகர்கள் கமல்ஹாசன், மாதவன், பார்த்திபன், நடிகைகள் தீபிகா படுகோனே, ஐஸ்வர்யா ராய், பூஜா ஹெக்டே, தமன்னா, ஊர்வசி ரௌதலா, அதிதி ராவ், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், இயக்குநர்கள் சேகர் கபூர், பா.ரஞ்சித் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துகொண்டுள்ளனர். கேன்ஸ் விழாவில் நடிகர் மாதவன் இயக்கி, நடித்துள்ள ‘ராக்கெட்ரி: நம்பி விளைவு’ திரையிடப்பட்டது. இதனை ஏ.ஆர்.ரஹ்மான், இயக்குநர் சேகர் கபூர், மத்திய அமைச்சர் ஆகியோர் வெகுவாக பாராட்டியிருந்தனர். இதேபோல், பா.ரஞ்சித்தின் ‘வேட்டுவம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது.

இந்நிலையில், கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட ஏ.ஆர். ரஹ்மானின் ‘லி மஸ்க்’ குறும்படத்தை நடிகர் மாதவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டியுள்ளார். அதில், “ஏ.ஆர். ரஹ்மான் இயக்குநராக அறிமுகமாகும் ‘லி மஸ்க்’ குறும்படத்தை கேன்ஸ் விழாவில் பார்த்தபோது, எனது உணர்வுகள் அனைத்தும் உணர்ச்சி மிகுதியில் இருந்ததற்கு நன்றி. ஊடகத்தைப் பற்றிய அவரது புரிதல் மற்றும் ஒரு கருத்தை எவ்வாறு எல்லா வித கோணத்திலும் புதிய தொழில்நுட்பத்துடன் அணுகி பயன்படுத்தியுள்ளார் என்பதைக் கண்டு பிரமிப்பாக உள்ளது” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

‘லி மஸ்க்’ குறும்படத்திற்கான கதையை ஏ.ஆர். ரஹ்மானுடன் அவரது மனைவி சாய்ரா ரஹ்மானும் இணைந்து எழுதியுள்ளனர். 36 நிமிடங்களே ஓடக்கூடிய 'லி மஸ்க்' குறும்படம் வெர்ச்சுவல் ரியாலிட்டி முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஜூலியட் மெர்டினியன் என்ற பெண் தன் வாழ்நாளில் சந்தித்த பல ஆண்களை, அவர்கள் பயன்படுத்தும் வாசனை திரவியத்தை வைத்து எப்படி அடையாளம் காண்கிறாள் என்பதை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. நோரா அரனிசாண்டர், கை பர்நெட் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com