பொது இடத்தில் சிவாஜி சிலையை வையுங்கள்: நடிகர் சங்க செயற்குழுவில் தீர்மானம்
சிவாஜி சிலையை மக்கள் அதிகமாக கூடும் பொது இடத்தில் வைக்க வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்தி தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயற்குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
சென்னை கடற்கரைச் சாலையில் இருந்த சிவாஜி கணேசன் சிலை அகற்றப்பட்டு, சிவாஜி மணி மண்டப வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை மீண்டும் கடற்கரைச் சாலையில் காமராஜர் சிலை அருகே நிறுவ வேண்டுமென திரையுலகினர் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
இந்நிலையில், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயற்குழுவில், சிவாஜி சிலையை காமராஜர் சிலை அருகிலோ அல்லது பொது மக்கள் அதிகமாக கூடும் இடத்திலோ நிறுவ வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக சங்கத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் குறித்து கடிதம் மூலம் தமிழக அரசிடம் வேண்டுகோள் விடுக்கப்படும் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.