”நெஞ்சம் பொறுக்கவில்லை” ஓடிடியில்சூரரைப் போற்று வெளியாவதற்கு எதிர்ப்பு.. மதுரையில் போஸ்டர்
சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படம் ஓடிடியில் வெளியாவதற்கு வேதனை தெரிவிக்கும் வகையில் அவரது ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொரானா எதிரொலியால் தமிழகத்தில் தியேட்டர்கள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரானா வைரஸ் தொற்று எதிரொலியால் கடந்த நான்கு மாதங்களாக திரையரங்கள் மூடப்பட்டு இருக்கும் நிலையில், படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்த பல படங்களை வெளியிட முடியாமல் முடங்கியுள்ளன.
இந்நிலையில் நடிகர் சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படம் தயாராகி நான்கு மாதங்களாக திரையிடப்பட முடியாததால், வரும் அக்டோபர் 30ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியீடுவதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு சூர்யா அறிக்கை மூலமாக தெரிவித்தார். இதற்கு ஒரு சிலர் ஆதரவு தெரிவித்தாலும், திரைப்படத்துறையை சேர்ந்த சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் மதுரையில் அவரது ரசிகர்களின் நெஞ்சம் பொறுக்கவில்லை- சூரரைப்போற்று படத்தை திரையரங்கில் தான் வெளியிட வேண்டும், ஓடிடியில் வெளியிடக் கூடாது என்றும் இந்தப்படத்திற்காக நீண்ட காலம் காத்திருந்தோம். ஓடிடியில் வெளியாவது ஏமாற்றத்தை தருகிறது எனவும், சூர்யாவின் வார்த்தைக்காக பணிவோடு கேட்கிறோம் என ரசிகர்கள் அடங்கிய போஸ்டர்களை மதுரை மாநகர் முழுவதும் ஒட்டியுள்ளனர்.
சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படம் திரையரங்கில் வெளியிடாமல் ஓடிடியில் வெளியிடுவதற்கு வருத்தமும், வேதனையும் தெரிவித்து அவரது ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டது.